Labels

rp

Blogging Tips 2017

வேதியியல் பாடத்தில் மறுமதிப்பீடு கோரி 1,300 பேர் விண்ணப்பம்

பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி 1,300 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.
வேதியியல் பாட விடைத்தாள் நகல் கோரி 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்போது சுமார் 6 சதவீதம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரியுள்ளனர்.

உயிரியல் விடைத்தாள்கள் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், கணக்கு, இயற்பியல் பாட விடைத்தாள்களும் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டன. பி.இ., எம்.பி.பி.எஸ். கலந்தாய்வைக் கருத்தில் கொண்டு முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்கள் முதலில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மறுமதிப்பீடு தொடங்கியது: பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பணிகள் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கின. முதலில் வேதியியல் பாட விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன.
இந்தப் பணிகளுக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 ஆசிரியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர்.
நாளொன்றுக்கு ஒரு பாடம் வீதம் இந்த வாரத்துக்குள் அனைத்து முக்கியப் பாட விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு விடும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பி.இ., எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் அடங்கிய சி.டி.க்கள் அந்தந்த சேர்க்கைக் குழுக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிடும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எண்ணிக்கை அதிகரிக்கும்: மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியப் பாடங்களில் பல மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளதால் சுமார் 10 ஆயிரம் பேர் வரை இந்த ஆண்டு மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்ப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எச்சரிக்கை தேவை: மறுமதிப்பீடு என்பது விடைத்தாளில் உள்ள அனைத்து வினாக்களையும், விடைகளையும் மீண்டும் மதிப்பீடு செய்வதாகும். எனவே, விடைத்தாள் நகல் கிடைத்தவுடன் அந்தந்தப் பாட ஆசிரியர்களை வைத்து விடைத்தாள் முழுவதையும் பார்க்க வேண்டும்.
விடைத்தாளில் உள்ள அனைத்து விடைகளும் சரியாக உள்ளன என்பதையும், எந்த வினாவுக்கும் கூடுதலாக மதிப்பெண் வழங்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகே, மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு விடைக்கான மதிப்பெண்ணை மட்டும் மனதில் வைத்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்கு, 2 மதிப்பெண் வினாவுக்கான விடை மதிப்பிடப்படவில்லையென்றாலோ, அந்த மதிப்பெண் கணக்கிடப்படவில்லையென்றாலோ முழு விடைத்தாளையும் பரிசீலிக்க வேண்டும். வேறொரு 5 மதிப்பெண் கேள்விக்கு தவறாக விடையளித்திருந்தால் நிகரமாக 3 மதிப்பெண் குறைக்கப்படும்.
மறுமதிப்பீட்டுக்குப் பிறகு வழங்கப்படும் மதிப்பெண்ணே இறுதியானது என்பதையும் மாணவர்கள் இங்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெளிப்படைத்தன்மை: விடைத்தாள் நகல்களை மாணவர்களுக்கு வழங்குவது என்பது தேர்வுத்துறை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதையே எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் தேர்வுகள் நம்பகத்தன்மையுடன் நடந்தது உறுதிசெய்யப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
வேதியியல் பாடத்தில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த 22 ஆயிரம் பேரில் 1,300 பேர் மட்டுமே மறுமதிப்பீடு கோரியுள்ளனர். மீதமுள்ள 20 ஆயிரம் பேரும் விடைத்தாள் மதிப்பீட்டில் திருப்தியடைந்துள்ளதை அறியலாம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
80 ஆயிரம் பேர்
இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
மொழிப்பாடம் இரண்டு தாள்கள், ஆங்கிலம் இரண்டு தாள்கள் என மொத்தம் 4 பாடங்களுக்கு 12 ஆயிரம் பேர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
பிற பாடங்களில் விண்ணப்ப நகல் கோரி விண்ணப்பித்தவர்களின்
எண்ணிக்கை:
வேதியியல் - 22,000
கணிதம் - 18,000
இயற்பியல் - 17,000
உயிரியல் - 10,000
கம்ப்யூட்டர் சயின்ஸ் - 1,500
வணிகவியல் - 600
கணக்குப் பதிவியல் - 600
தாவரவியல் - 100
விலங்கியல் - 100

No comments:

Post a Comment


web stats

web stats