Labels

rp

Blogging Tips 2017

"ஆங்கிலம்தான்' உத்தரவு எதிரொலி: இனியாவது முதல்வர் கவனம் செலுத்துவாரா?

சென்னை:அரசுக்கு, நெருக்கடி ஏற்படும் வகையில், உயர்கல்வி துறையில், முக்கிய முடிவுகளை, தன்னிச்சையாக எடுத்தார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாநில உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவர் பதவியிலிருந்து, சிந்தியா பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.

உயர்கல்வி தரத்தை மேம்படுத்தவும், புதிய திட்டங்கள், கொள்கைகளை வகுக்கவும், தமிழ்நாடு, மாநில உயர்கல்வி மன்றம் செயல்படுகிறது. இம் மன்றத்தின் துணைத் தலைவராக, அ.தி.மு.க., அமைப்பு செயலர், பி.எச்.பாண்டியன் மனைவியும், பேராசிரியருமான சிந்தியா பாண்டியன் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, 2012, பிப்., 29ம் தேதி அவர் பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதலே, பல்கலைக் கழகங்களை, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, சிந்தியா பாண்டியன் முயற்சித்தார் என்றும். உயர்கல்வி தொடர்பாக எடுக்கப்படும் முடிவு களை, உயர்கல்வி மன்ற உறுப்பினர்களுடனோ, உயர்கல்வி துறையுடனோ, அவர் ஆலோசிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
உயர்கல்வி மன்றம் பரிந்துரை:

கலை, அறிவியல் கல்லூரிகளில், செய்முறை மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என, சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில், உயர்கல்வித் துறை, உத்தரவை பிறப்பித்தது.இந்த நடவடிக்கைக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட, பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்களும், கல்வியாளர்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் கல்வியில், தமிழ் பயன்பாட்டை அழிக்கும் வகையில், இந்த உத்தரவு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, "கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செய்முறை மற்றும் தேர்வுகளை எழுதலாம்' என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும், ஏற்கனவே வெளியான உத்தரவு, தன் கவனத்திற்கு கொண்டு வரப்படாமல் வெளியிடப்பட்டதாகவும், ஜெயலலிதா தெரிவித்தார்.

இதற்கிடையே, கல்லூரி ஆசிரியர்கள் திருத்தும் விடைத்தாள் எண்ணிக்கையை நாளொன்றுக்கு, 40ல் இருந்து, 50ஆக உயர்கல்வி மன்றம் உயர்த்தியது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்ததோடு, விடைத்தாள் திருத்தும் பணிகளையும் புறக்கணித்தனர். இப்போராட்டத்தை சமாளிக்க மீண்டும் பழைய முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அரசின் புதிய நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியதால், அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளாமல், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சிந்தியா பாண்டியன் செயல்பட்டார் என, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தன்னிச்சை முடிவு:

இதைத் தவிர, மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை (இன்டர்னல் மார்க்) மாற்றுதல், ஆய்வக நேரத்தை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல உத்தரவுகளை, தன்னிச்சையாக சிந்தியா பிறப்பித்த விவகாரமும், அரசின் கவனத்திற்கு, கொண்டு செல்லப்பட்டது.உயர்கல்வி மன்றத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள், உயர்கல்வி துறைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியது. உயர்கல்வி துறையின் இரு முதன்மை அமைப்புகளும் மோதி கொள்ளும் சூழலை சிந்தியா பாண்டியன் உருவாக்கினார் எனவும் கூறப்படுகிறது.அரசுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கியதால், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவர் பதவியிலிருந்து, ராஜினாமா செய்யுமாறு, சிந்தியா பாண்டியனுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொறுப்பு மாற்றம்:

இதன் அடிப்படையில், சிந்தியா பாண்டியன், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதில், தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்தியிடம், உயர்கல்வி மன்ற துணை தலைவர் பதவி, கூடுதலாக தரப்பட்டுள்ளது.இதே போன்று, பல உத்தரவுகள், ஆட்சியின் பெயரைக் கெடுப்பது போல், அதிகாரிகள் வெளியிடுவதால், இவற்றின் மீது, முதல்வர், அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை, அனைத்து மட்டங்களிலும் எழுந்து வருகிறது.

No comments:

Post a comment