Labels

rp

Blogging Tips 2017

விழித்துக் கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள் நடத்தையில் மாற்றம் தேவை குறித்து தினமணி கட்டுரை

நேர்மையிலும் தியாகத்திலும் அறநெறிகளிலும் தனிமனித ஒழுக்கத்திலும் இந்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு என்று இனிமேலும் நம்மால் பெருமையுடன் மார்தட்டிக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது.
அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அமைப்புகள், அரசு நிர்வாகத் துறையினர் என்று பல தரப்பினரும் பல வகைகளில் நம் நாட்டின் சாதாரணக் குடிமக்களின் நம்பிக்கைகளை கலைத்துப்போடுவதை ஓர் அன்றாட நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றார்கள்.

கற்பனைக்கு எட்டாத இமாலய ஊழல்களையும் மோசடிகளையும் இவர்கள் நடத்திவரும் செய்திகளைக் கேட்டும் படித்தும் நொந்து போயிருக்கும் நம் நாட்டின் அப்பாவிப் பொதுமக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை அவரவர்களுடைய வாரிசுகளின் எதிர்காலம்தான். அந்த வாரிசுகளின் எதிர்காலம் தஞ்சமடைந்திருப்பதோ ஆசிரியச் சமுதாயத்தின் கைகளில்.
ஆனால், இன்றைய இளைய சமுதாயத்தினரைக் கரையேற்றக் கடமைப்பட்டிருக்கும் அத்தகைய ஆசிரியச் சமுதாயத்தினரில் சிலரே கறைபட்ட நடத்தைக்குச் சொந்தக்காரர்களாக மாறி நிற்பதைப் பார்க்கும் போது நமது நெஞ்சு பொறுக்குதில்லை.
தங்களிடம் வந்து சேரும் மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியைத் தமது வாய்ச் சொல்லின் மூலமும், தனி மனித ஒழுக்கத்தைத் தமது நடத்தையின் மூலமும் புகட்டி வளர்க்க வேண்டிய ஆசிரியர்களில் பலர் மீண்டும் மீண்டும் பாலியல் புகார்களில் சிக்கி வரும் செய்திகள் நமது சமுதாய நல்வாழ்வின்மேல் அக்கறை கொண்ட எல்லோரையும் கவலைப் படச் செய்துள்ளன.
தங்களிடம் பாடம் பயிலும் மாணவியரை தங்கள் மகளாகவே கருதி நடக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர், அம்மாணவியரிடம் தவறாக நடந்து கொள்வது அடிக்கடி செய்திகளில் அடிபடத்தான் செய்கிறது. வெகு அபூர்வமாக, வளர்ந்த மாணவர்களிடம் சில ஆசிரியைகள் தவறாக நடக்க முயற்சிக்கும் செய்தியும் வருவதுண்டு.
இதன் காரணமாகவே ஆண்கள் பள்ளிகளுக்கு ஆசிரியர்களையும், மகளிர் பள்ளிகளுக்கு ஆசிரியைகளையும் மட்டுமே நியமிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டதே தங்களுக்கு ஏற்பட்ட ஒரு களங்கமாக ஆசிரியச் சமுதாயம் நினைத்து, அதைக் களைய முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக ஓர் அதிர்ச்சி அல்லவா அரங்கேறியிருக்கிறது.
தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று இளம் ஆசிரியை ஒருவர் பள்ளியிலேயே தற்கொலைக்கு முயன்ற அண்மைச் சம்பவம் இந்தத் தமிழ்கூறு நல்லுலகின் பெருமைக்கு இழுக்காக அல்லவா வந்து சேர்ந்திருக்கிறது.
தலைநகர் தில்லியில் கூட்டாகச் சேர்ந்து ஓர் இளம்பெண்ணிடம் முறைதவறி நடந்த வெறியர்களுக்கும், படித்துப் பட்டம் பெற்று இளைய சமுதாயத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பினை ஏற்றுள்ளதை மறந்து நடந்துகொண்டுள்ள அந்தத் தலைமை ஆசிரியருக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கக் கூடும்.
இவரைப் போன்றவர்களுடைய மாணவர்கள் எப்படிப்பட்ட ஒழுக்கத்தைக் கற்பார்கள்? புனிதம் மிக்க ஆசிரியத் தொழில் மேலும் மேலும் அழுக்குகளைச் சுமப்பது ஒரு தொடர்கதையாகிவிடுமா? மருத்துவர்கள், தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்ற பல வகைகளைச் சேர்ந்தவர்களில் வகைக்கு ஒரு சிலர் முறைகேடாக நடந்து கொள்வதால், அந்தந்த வகைப்பிரிவைச் சேர்ந்த அத்தனை பேரையும் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்வது சரியாகாது என்பது உண்மைதான்.
ஆனால், ஆசிரியச் சமுதாயம் என்று வரும்போது அதில் அடங்கியுள்ள அத்தனை பேருமே நேர்மை, தனிமனித ஒழுக்கம் போன்றவற்றில் அப்பழுக்கற்றவர்களாக இருக்கத்தான் வேண்டும்.
இவர்களில் ஓரிருவர்தான் ஒழுங்கில்லாதவர்கள் என்று நமக்குள்ளே சமாதானம் செய்துகொள்வது சரியாயிருக்காது. இன்றைய சூழ்நிலையிலாவது நமது ஆசிரியச் சமுதாயம் ஒட்டுமொத்தமாக விழித்துக்கொள்ள வேண்டும். ஊதியம் மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பல்வேறு நிலைகளிலான ஆசிரியர் சங்கத்தினர் அனைவரும் உடனடியாக ஒன்றிணைந்து, தங்களிடையே பரவிவிட்ட ஒழுங்கீனக் களைகளை அடையாளம் கண்டு, அவற்றைத் துணிச்சலுடன் திருத்திப் பணிய வைக்க முன்வர வேண்டும். திருந்தாதவர்களின் உரிமைகளுக்காக சங்கங்கள் ஒருபோதும் கொடி பிடிக்க மாட்டா என்று முடிவு செய்து அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
அரசாங்கமும் தன் பங்குக்கு, ஆசிரியர் பதவிகளுக்கான சிறப்புத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமல்லாது, தேர்வு செய்ய்யப்படுபவரின் பின்புலம் மற்றும் நடத்தைகளைத் தகுந்த விசாரணை அமைப்பின் மூலம் உறுதி செய்து அதன் பிறகே நியமனம் செய்ய வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஆசிரிய-ஆசிரியைகளின் தனிப்பட்ட ஒழுக்கத்திற்கு முன்னுரிமை தரத் தொடங்க வேண்டும்.
இனியேனும் இளைய சமுதாயத்தின் நெஞ்சங்களில் கறையேறாமல் பார்த்துக்கொண்டு, தன் மீதும் கறையேறாமல் காத்துக்கொள்ளுமா நமது ஆசிரியச் சமுதாயம்?

No comments:

Post a comment