rp

Blogging Tips 2017

சொல்லித் தாருங்கள்...


அண்மைக்காலமாக, நாம் அடிக்கடி படிக்கும் செய்தி, பள்ளிக் குழந்தைகள் கிணற்றில் அல்லது ஏரியில் விழுந்து இறந்தனர் என்பதாக இருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு இடங்களில் இளம் சிறார்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் பதினைந்துக்கும் மேல். பள்ளி விடுமுறை நாள்களில் இச் சிறுவர்கள் மழைநீர் குட்டை, குளங்களில் விளையாடப் போய், நீரில் மூழ்கி இறக்கின்றனர். தமிழகம் முழுவதும் இவ்வாறு நீரில் மூழ்கி இறக்கும் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இவர்கள் நீச்சல் பழகியிருக்கவில்லை என்பதுதான் இந்த மரணங்களுக்கு முதற்காரணம்.

மழைநீர் தேங்கிய குளம், குட்டைகளில் சிறுவர்கள் குளிக்க வேண்டாம் என்று ஒரு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்த அறிக்கையும் பத்திரிகைகளில் வெளியானது. விளையாடும் குழந்தைகளை வேண்டுகோளால் தடுத்துவிட முடியுமா என்ன? கோடு போட்டு நிற்கச் சொன்னால் நிற்கின்ற வயதா அது? கத்திரியின் "நண்பகல் நிலா'வில் கிரிக்கெட் விளையாடுகிற வயதல்லவா! நகர்ப்புறத்தில் வசிக்கும் சிறார்களுக்கு மட்டுமே நீச்சல் தெரியாது; கிராமத்துச் சிறார்கள் தங்கள் வயற்காட்டில் உள்ள கிணறுகள், ஓடைகளில் நீச்சல் பழகிவிடுவார்கள் என்கின்ற பொதுவான எண்ணம் இன்று பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது. இன்றைய வாழ்க்கைச் சூழல் மாறிவிட்டது. நகரத்தில் மட்டும் அல்ல, கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளையும் இரண்டரை வயதிலேயே மழலையர் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இந்தக் குழந்தைகளில் பலர் வீடு திரும்பியதும், வீட்டுப் பாடத்தை முடித்துக்கொண்டு அரசு டிவி முன்பாக பெற்றோருடன் அமர்ந்துவிடுகிறார்கள். இவர்கள் கிராமத்தில் வசித்தாலும் கிராமத்து வாழ்க்கையை வாழவில்லை.

விலங்குகள்கூட பிறந்த சில வினாடிகளில் எழுந்து நின்று விடும், சில தினங்களில் தன் இரையைத் தேடத் தொடங்கி விடும். மனிதன் அப்படியல்ல. ஒரு குழந்தைக்கு தனது தாய் தந்தையரின் அரவணைப்பிலிருந்து விலகிட விழையும் மனநிலை, தனித்து செயல்படத் துடிக்கும் இயல்பூக்கம் 9 வயதில்தான் ஏற்படுகிறது. இந்த "இளம்கன்று பயமறியா' பருவத்தில்தான், வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு குளத்திலும் ஏரியிலும் குளிக்கும் ஆசைக்கு சிறார்கள் ஆளாகிறார்கள்.

குழந்தைக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத் தருவதைப் போல, 16 வயது நிரம்பும் முன்பே பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டச் சொல்லிக் கொடுத்து, பிள்ளைகள் ஓட்ட, வாகனத்தின் பின்இருக்கையில் அமர்ந்து அப்பாக்கள் ரசிப்பதைப் போல, நீச்சலையும்கூட ஒரு குழந்தைக்கு கற்பிக்கலாம். சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிலும்போது பத்து நாள்களில் நீச்சல் கற்றுக்கொள்வது மிக எளிது.

நகர்ப்புறங்களில், குறிப்பாக மாவட்டத் தலைநகரங்கள் பலவற்றிலும் நீச்சல் குளம் இருக்கிறது. அரசு சார்பில் பயிற்றுநர்களும் இருக்கிறார்கள். இங்கே சிறார்கள், ஆடவர், மகளிருக்கான தனிப்பிரிவுகளில் தனியாக நீச்சல் பழக முடியும். ஆனால் கட்டணம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை. சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்ட, தாமே செலவில்லாமல் சொல்லிக்கொடுக்க முடிகிறபோது, நீச்சல் பழக்குவதற்கு பணம் செலவழிக்க பெற்றோர் தயக்கம் காட்டுகிறார்கள்.

மாவட்டத் தலைநகர்களில் உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பழக விரும்பும் சிறார்களுக்கு, பத்துநாள்களுக்கு ரூ.100 என்பதாக மிகக் குறைந்த அளவு கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்குமானால், பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைக்கு நீச்சல் பயிற்சிக்கு செலவிட தயங்க மாட்டார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி தரலாம். விருப்பமுள்ள மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் மூலமாக விண்ணப்பிக்கச் செய்யலாம். சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த மாணவர்களும் நீச்சல் பழகுவார்கள்.

இதனால் நீர்நிலைகளில் சிறார்கள் இறக்கும் நிலை முற்றிலும் ஒழிந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் எண்ணிக்கை கணிசமாக குறையும். நீச்சல் வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. உடலும் மனமும் தக்கையாய் நீரில் மிதக்கும் சுகம். அதை உள்ளுணர்வால் அறியும் சிறார்கள்தான் பரந்துபட்ட நீரில் குதிக்கத் துடிக்கிறார்கள்.

http://dinamani.com/editorial_articles/2013/09/20/

No comments:

Post a Comment