Labels

rp

Blogging Tips 2017

எழுத்தறிவு மட்டுமே கல்வியல்ல -உதயை மு. வீரையன்.(தினமணி கட்டுரை)


"கற்கை நன்றே கற்கை நன்றே   பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்று "நறுந்தொகை' பாடுகிறது. கல்வி என்பது ஏழை, செல்வர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் அளிக்கப்பட வேண்டும்.
 நமது அரசமைப்புச் சட்டமும் 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. "குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்' 2009 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இப்படி ஒரு சட்டம் கொண்டுவரவே மத்திய அரசாங்கத்துக்கு 60 ஆண்டுகள் ஆனது. இப்போதாவது வந்ததே என்று நாம் மகிழலாம். இந்த மகிழ்ச்சி தொடர்வதற்கு, இச்சட்டம் உண்மையாக அமல் செய்யப்பட வேண்டும்.
 உலகில் எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும், கல்விச் செல்வமே சாலச் சிறந்தது. மற்ற செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறைவுபடும்; நீராலும் நெருப்பாலும் அழிந்து போகும்;  பகைவர்களாலும் திருடர்களாலும் களவாடப்படும்; ஆனால் கல்விச் செல்வம் கொடுக்கக் கொடுக்க வளரும் தன்மையுடையது. எப்போதும், யாராலும் அழியாதது; யாராலும் பறிக்கப்பட முடியாதது என்றே அறநூல்கள் கூறுகின்றன.
 "மனிதன் பிறந்த நிலையில் விடப்பட்டால் அவன் மனிதனாகவே இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும். பல பேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து போகும். கல்வியற்ற மனிதனும் இப்படித்தான் அழிந்து போவான்...' என்று கல்வியைப் பற்றி அறிஞர் ரூசோ கூறுகிறார்.
 மனித வளம் என்பதே கல்வியாகும். மனிதர்களின் உறுப்புகளில் சிறந்தவை கண்களே! அந்தக் கண்களாக இருப்பவை எண்ணும் எழுத்துமாகும். "எண்ணும், எழுத்தும் கண் எனத் தகும்' என்பதும் அதனால்தான்.
  அக்காலத்தில் எல்லோருக்கும் கல்வியளிக்கப்படவில்லை. எல்லோருமே படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது திண்ணைப் பள்ளிகள் தோன்றலாயின. அவை திட்டமிட்டு முறையாக நடத்தப்படவில்லை. பின்னர், இங்கே வணிகம் செய்ய வந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற ஆங்கிலேயர்கள் கல்வியில் கவனம் செலுத்தினர்.
 அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்த கூலிகள் தேவைப்பட்டனர். உருவத்தில் கருப்பராகவும், உள்ளத்தில் வெள்ளையராகவும் இருக்கக் கூடிய இந்திய அடிமைகளை உருவாக்கும் கல்வியே அவர்களுக்குத் தேவைப்பட்டது. 1813-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கல்வி பற்றிய முதல் சட்டத்தை இயற்றியது. இதன்படி பத்தாயிரம் பவுன் செலவிட்டு இந்திய மொழிகளில் புத்தகங்களை வெளியிட உத்தரவிட்டது.
  "மெக்காலே' உருவாக்கிய கல்வித்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆங்கிலம் வாயிலாகவே கல்வி புகட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆங்கிலேயரிடம் ஆட்சியிருந்ததால் அவர்களது கல்விமுறை எதிர்ப்பின்றி ஏற்கப்பட்டது.
 அம்முறையில் கல்வி பயின்றவர்களே அரசாங்கப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களது அந்தக் கல்விமுறையே நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது சுதந்திரம் பெற்ற பிறகும் அதேநிலைதான்.
 1910-இல் கோகலே கட்டாயக் கல்வி மசோதா கொண்டு வந்தார். அதனை ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் படிக்கும் வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்தது. கோகலே "கல்வி என் பிறப்புரிமை' என்ற முழக்கத்தை எழுப்பினார். கோகலே, வித்தல்பாய் படேல் ஆகியோரின் கடுமையான உழைப்பால் தொடக்கக் கல்வி நன்கு வளர்ச்சி பெற்றது.
 ஆங்கிலக் கல்வி வெறி, அளவுக்கு மீறிப் போனதால் நமது தேசப்பற்றும் பண்பாடும் சீரழிந்து போவதை அறிந்த தேசத் தலைவர்கள் கவலை கொண்டனர். தாதாபாய் நௌரோஜி (பம்பாய்), ராஜா ராம்மோகன் ராய் (வங்கம்), ரவீந்திரநாத் தாகூர் (வங்கம்), காந்திஜி (குஜராத்) ஆகியோர் இதில் கவனம் செலுத்தினர்.
 ஜான் ரஸ்கின் எழுதிய "கடையனுக்கும் கடைத்தேற்றம்', டால்ஸ்டாய் எழுதிய "கடவுளின் ராஜ்யம் உன்னுள்ளே இருக்கிறது' போன்ற நூல்கள் காந்தியடிகளைக் கவர்ந்தன. அவரது ஆதாரக் கல்வித் திட்டத்துக்கு அவையே அடிப்படையாக அமைந்தன.
 ""ஏதாவது ஒரு கைத்தொழில் வாயிலாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும். உடல் உழைப்பு இல்லாத கல்வி பயன்படாது'' என்ற கருத்தினையும் இவர்களிடம் இருந்துதான் தான் பெற்றதாக காந்திஜி கூறியுள்ளார்.
 விடுதலையடைந்த நாட்டில் பல கல்விக் குழுக்கள் போடப்பட்டன. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் குழு (1949), ஏ. இலட்சுமணசாமி குழு (1954), அழகப்ப செட்டியார் குழு (1954), டாக்டர் கோத்தாரி குழு (1961) ஆகியவை அமைக்கப்பட்டன. அவற்றின்  அறிக்கைகளும் அரசுக்கு அளிக்கப்பட்டன. 1969-இல் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. என்றாலும் இப்போதும் ஆங்கிலக் கல்வியே தொடர்வதுதான் வேதனை.
 ஆசிரியர் இல்லாமல் கல்வி ஏது? "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்றும், "மாதா பிதா குரு தெய்வம்' என்றும் ஆசிரியர்களுக்கு சமுதாயம் அளித்திருக்கும் இடம் மிக உன்னதமானது. இந்த இடத்தைத் தவற விடாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
 "தேசத்தின் தலைவிதியானது வகுப்பறைகளில்தான் முடிவு செய்யப்படுகிறது' என்று கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கை குறிப்பிடுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் தேசத்தின் எதிர்காலத்தையும் முடிவு செய்யும் இடத்தில் இருப்பவர் ஆசிரியர். ஆசிரியப்பணி என்பது அறப்பணி; ஊதியத்துக்காக உழைப்பதல்ல.
 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. அறிவும் ஆற்றலும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. ஆசிரியப் பணியை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குறைகூற ஒருபோதும் இடம் தரக்கூடாது.
  கடந்த 2009-ஆம் ஆண்டில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி,  தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற வேண்டும்; தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட காலியாகவுள்ள மொத்தம் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
 பொதுக் கல்வியை முடித்து, ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளபோது, மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு எழுதச் செய்வதை ஆசிரிய சங்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. ஆசிரியப் பயிற்சி முடித்து, வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகளாகக் காத்திருப்போரை இத்தேர்வு அறிவிப்பு சோர்வடையச் செய்துள்ளது. அவர்களுடைய எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
 எழுத்துத் தேர்வு மட்டுமே ஆசிரியர்களுடைய தகுதியை மதிப்பிட்டு விடாது. அவர்களுடைய நினைவாற்றலை சோதிக்க மட்டுமே உதவும். ஆசிரியப் பணிக்கு மிகச் சிறந்த தகுதி ஒழுக்கம். இந்தத் தேர்வின் மூலம் அதை எப்படி அளந்தறிய முடியும்? பொது அறிவும், ஒழுக்கமும் உடைய ஆசிரியர்களே இன்றைய முக்கிய தேவை.
 தமிழகக் கல்வித்துறையின் அண்மைக்கால உத்தரவுகள் ஆசிரியப் பெருமக்களை நிராயுதபாணிகளாக மாணவர் முன் நிறுத்தியுள்ளது. படிக்காத, தவறு செய்கின்ற மாணவர்களை கண்டிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரிய சமுதாயம் அச்சத்தின் காரணமாக, ஒதுக்கிவிடவும், ஒதுங்கி விடவும் செய்கிறது.
 கடந்த 2012 பிப்ரவரி 2 அன்று சென்னைப் பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி அப்பள்ளி மாணவனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி அனைவரையும் அச்சமடையச் செய்துவிட்டது. அந்த அச்சத்தினை அதிகரிக்கச் செய்யும் வகையில் கல்வித்துறையின் எச்சரிக்கைகளும் அமைந்துள்ளன. கல்விக் கூடங்களில் அன்பும், அமைதியும் குடியிருக்கச் செய்வதன் மூலமே ஆசிரியர்கள் சிறந்த சேவை செய்ய முடியும்.
 ""கல்வி என்பது குழந்தை மற்றும் மனிதனின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் ஆழ்ந்துள்ள மிகச்சிறந்த அம்சங்களை வெளிக்கொணர்வது. எழுத்தறிவு மட்டுமே கல்வி ஆகாது...'' என்றார் காந்தியடிகள்.
  இந்தப் புனிதப் பணியைத் தொடர ஆசிரியர்களோடு அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர், மாணவர், பெற்றோர் உறவு வலுப்பெற வேண்டும். அரசாங்கமும் கல்வித்துறையும் இதனை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு கையால் மட்டும் ஓசை எழுப்ப முடியாது.
இன்று ஆசிரியர் தினம். 
டாக்டர்  எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்.

No comments:

Post a comment