Labels

rp

Blogging Tips 2017

'நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்படுமா


'நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்படுமா' என, பாதிக்கப்பட்ட பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

மாற்றி மாற்றி...:
கடந்த, 2001 --- 2006 வரை, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., அரசு ஆட்சியில் இருந்த போது, வேலை நியமன தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. மாநில அரசுக்கு ஏற்பட்ட கடன் சுமை, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிதி பற்றாக்குறை உட்பட, பல காரணங்களாலும், நிதி நிலைமையை சீர் செய்யவும், இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதனால், இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் அரசு துறைக்குப் புதிய ஆட்கள் தேர்வு பெரும்பாலும் நடக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவர்கள் இடையேயும், வேலைவாய்ப்பு இல்லாத போது, உயர் கல்வி எதற்கு என்ற மன சோர்வும் ஏற்பட்டது. பலர் வேலைவாய்ப்பு
அலுவலகங்களில், பதிவு செய்தல் மற்றும் பதிவை புதுப்பித்தல் போன்றவற்றையும் கைவிட்டனர். இதையடுத்து, 2006ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி.,யில் குரூப் - 1, குரூப் - 2 மற்றும் குரூப் - 4 உட்பட, பல்வேறு பணிகளுக்கு, ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகள் நடத்தி, ஆயிரக்கணக்கானோர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

40 லிருந்து 35:
அத்துடன், 2001 -- 2006ல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு, மறுபதிவு செய்யப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி.,யின் அனைத்து தேர்வுகளுக்கும், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கான, வயது வரம்பு, 35 லிருந்து, 40 ஆகவும், மற்ற பிரிவினர்களுக்கு, 30 லிருந்து, 35 ஆகவும் உயர்த்தப்பட்டது. மீண்டும், 2011ல், அ.தி.மு.க., அரசு
பொறுப்பேற்றதும், குரூப் - 1 மற்றும் குரூப் - 2வின், சில முக்கிய பணிகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பாக, 35 ஆகக் குறைக்கப்பட்டது. இதனால், ஏராளமான பட்டதாரிகள், போட்டித் தேர்வுகளை எழுது முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மற்றவற்றில் 50:
கேரளாவிலும், மற்ற சில மாநிலங்களிலும், அம்மாநிலங்களின், அரசு பணியாளர் தேர்வை எழுதுவதற்காக, வயது வரம்பு, 45 முதல், 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற, வயது வரம்பு சலுகைகளை, தமிழக அரசும் நடைமுறைப்படுத்த கோரி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உண்ணாவிரதம் போன்ற போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். அரசியல் தலைவர்கள் சிலரும், இது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியின் போது, அமலில் இருந்த வேலை நியமன தடைச் சட்டத்தால், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மற்ற மாநிலங்களைப் போல், தமிழக அரசும் வயது வரம்பில் சலுகை வழங்கி, சட்டசபை கூட்டத்தொடரில், அறிவிப்பு வெளியிட வேண்டும் என, ஆயிரக்கணக்கானோர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment