147 டி.டி. கல்லூரி மாணவர்களுக்கு அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்
திருவள்ளூர்
மாவட்டம் குன்னவலம் டி.டி. மருத்துவக் கல்லூரியில் 2010-11-ஆம் ஆண்டு
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 150 மாணவர்களில், 147 மாணவர்களுக்கு அரசு
மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வியாழக்கிழமை
(நவ.7) அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்திய மருத்துவக்
கவுன்சிலின் (எம்.சி.ஐ.) ஒப்புதலுடன் சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 17
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை கலந்தாய்வு
நடத்தப்பட்டு, கூடுதல் இடங்களில் மாணவர்கள் சேர அனுமதிக் கடிதம்
வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 150 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம்
அனுப்பப்பட்டதில், 149 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்; சான்றிதழில்
விளக்கம் கேட்டு இரண்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், 147
மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகம்
முடிவு செய்யும்: எம்.பி.பி.எஸ். படிப்பில் "பிரேக் சிஸ்டம்' நடைமுறையில்
உள்ளது. அதாவது, எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் ஒரு பாடத்தில் தேர்ச்சி
பெறாவிட்டால்கூட, இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல முடியாது. இப்போது அரசு
மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டுள்ள 2010-11-ஆம் ஆண்டு டி.டி.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்ச்சியைப் பொருத்து, தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அவர்களது எம்.பி.பி.எஸ். ஆண்டை
தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேர்க்கை அனுமதி
ரத்து: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ்
2010-11-ஆம் கல்வி ஆண்டில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் டி.டி.
மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
அரசுக்கு ஒரு எம்.பி.பி.எஸ்.
இடம்கூட வழங்காமல், நிர்வாக ஒதுக்கீட்டு முறையில் அனைத்து இடங்களையும்
கல்லூரி நிர்வாகம் நிரப்பியது. மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக்
கவுன்சிலும் (எம்.சி.ஐ.) அப்போது அனுமதி வழங்கியது.
2010-11-ஆம்
ஆண்டு டி.டி. மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். சேர்ந்த
மாணவர்கள், நிர்வாக நடைமுறைப்படி 2011-12-ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு
பல்கலைக்கழகத் தேர்வை எழுதி முடிவுகளும் வெளியிடப்பட்டன. ஆனால் தொடர்ந்து
2011-12, 2012-13, 2013-14-ஆம் கல்வி ஆண்டுகளுக்கு எம்.பி.பி.எஸ்.
படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி
அளிக்கவில்லை. மேலும் டி.டி. நிர்வாகம் மருத்துவக் கல்லூரி தொடங்க 2010-ஆம்
ஆண்டு அளித்த அனுமதியையும் இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்ததால்,
டி.டி. மருத்துவக் கல்லூரி மூடப்பட்டது.
மாணவர்கள் போராட்டம்:
டி.டி. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை நம்பி எம்.பி.பி.எஸ். சேர்ந்த
தங்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை
கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக
வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட
மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்குமாறும் அவர்கள்
வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து டி.டி. மருத்துவக் கல்லூரியில்
2010-11-ஆம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இந்திய மருத்துவக்
கவுன்சிலின் (எம்.சி.ஐ.) ஒப்புதலுடன் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களை
ஏற்படுத்தி, 147 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எந்தெந்த கல்லூரிகளில் சீட்?
சென்னை மருத்துவக் கல்லூரி 13
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 11
மதுரை மருத்துவக் கல்லூரி 12
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி 10
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி 9
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி 4
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி 11
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி 12
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சேலம் 6
கே.ஏ.பி.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி 8
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி 8
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி 8
வேலூர் மருத்துவக் கல்லூரி 8
தேனி மருத்துவக் கல்லூரி 5
தருமபுரி மருத்துவக் கல்லூரி 8
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி 7
திருவாரூர் மருத்துவக் கல்லூரி 7
எம்.பி.பி.எஸ். கட்டணம் எவ்வளவு?
""அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புக்
கட்டணம் ரூ.12,290. ஆனால், 2010-11-ஆம் கல்வி ஆண்டில் நிர்வாக
ஒதுக்கீட்டின் கீழ் டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 147
மாணவர்களுக்கு இப்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் கலந்தாய்வில் சுயநிதி
மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்.பி.பி.எஸ்.
இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம்
வரை நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு அறிவித்து வருகிறது. அதே போன்று அரசு
மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ள 147 டி.டி.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டண நிர்ணயக் குழு இன்னும் ஒரு
வாரத்தில் கல்விக் கட்டணம் உள்பட ஆண்டுக் கட்டணத்தை அறிவிக்கும். இத்தகைய
நிபந்தனைகளுடன்தான் 147 மாணவர்களும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர
அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனர்'' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a comment