rp

Blogging Tips 2017

வகுப்பறையில் விஷ மருந்து சாப்பிட்ட 7 மாணவியர்

மதுரை அருகே வகுப்பறையில் விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கிய 7 மாணவியருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதுரை அருகே உள்ளது பொய்கைக்கரைப்பட்டி. இங்குள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிவனேசுவரி, செல்வி, ஜெயந்தி, ஒய்யம்மாள், ஜெகதீஸ்வரி, வினிதா, யாழி ஆகியோர் 7 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்தில் உள்ள கலைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளனர்
.
இந்த நிலையில், அவர்கள் சரியாகப் பாடத்தைக் கவனிப்பதில்லை, ஆசிரியர்களை மதிப்பதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியை கண்டித்தாராம். மேலும், அடிக்கடி சம்பந்தப்பட்ட மாணவியரை தண்டனை எனும் பெயரில் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த உத்தரவிட்டும், கழிப்பறைக்குள் அடைத்துவைத்தும், வகுப்பறையில் தனியாக முட்டிபோடவைத்தும் உத்தரவிட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவியரின் தாய், தந்தையை அழைத்தும் தலைமை ஆசிரியை கண்டித்துள்ளார். மேலும், சிலரிடம் வெற்றுத்தாளில் கைரேகை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை பகலில் வகுப்பறைக்கு வந்த கலைக் குழு மாணவியர் 7 பேரும் வாழைப்பழத்தில் விஷ மருந்தை வைத்து தின்றுள்ளனர். இதனால் அவர்கள் வகுப்பறையிலேயே மயங்கியுள்ளனர்.
உடனே, மாணவியரை கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவசரச் சிகிச்சைப் பிரிவில் ஒரே ஸ்ட்ரெச்சரில் 3 மாணவியரை அமர வைத்து குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரு மாணவியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாணவியர் சிகிச்சை குறித்து மருத்துவமனை டீன் டாக்டர் என்.மோகன் விசாரித்து அறிந்தார். மாணவியரின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

No comments:

Post a Comment