Labels

rp

Blogging Tips 2017

கொலைக்களமாகும் கல்வி கூடங்கள்-ஓர் ஆய்வுக்கட்டுரை

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியை உமா மகேஸ்வரி , 9ம் வகுப்பு மாணவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  உண்டாக்கியது. இந்த சோக சம்பவத்தின் சுவடுகள் கூட ஆறாத நிலையில், மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவமாக தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வராக இருந்த சுரேஷ் (49), மாணவர்கள் 3 பேரால்  வெட்டி கொலை செய்யப்பட்டார்.


நாட்டில் நடக்கும் எத்தனையோ கொலைகளில் இதுவும் ஒன்று என நினைத்து நாம் புறந்தள்ளி விட முடியாது. இந்த கொலைகள் நிகழ்ந்த இடம், கொலை செய்யப்பட்டவர்கள், கொலையாளிகள் என நாம் பார்க்கும் பட்சத்தில் உமா மகேஸ்வரி, சுரேஷ் ஆகிய இருவரின் கொலை சம்பவங்களும் எதிர்கால தலைமுறை எப்படி  அமைய போகிறதோ? என்ற பதற்றத்தை அனைவரின் உள்ளங்களிலும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஏடுகளை சுமந்து செல்ல வேண்டிய கரங்களால் கத்தியும், அரிவாளும் கொண்டு செல்லப்பட்டு ரத்த வெறியாட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் உணர்ச்சி வயப்படுதல், அவர்களை கொலையாளிகளாக்கி உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை அடிப்படையாக வைத்து தான் நமது சமூகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பெற்றோருக்கு அடுத்தபடியாக நேசிக்கப்பட வேண்டிய குரு, ஸ்தானத்தில் உள்ள ஆசிரியர்களை, சக மாணவர்களே கொன்று ரத்த வெறியாட்டங்கள் நடத்துவது சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம். அதற்கு மேலும் நீதிமன்றம் தண்டனை வழங்கலாம். தீர்ப்பின் முடிவு எப்படி இருக்கும்? என்பது இந்த விவகாரத்தில் முக்கியமல்ல. கொலையாளிகளாக மாறி விட்ட மாணவர்களை இந்த சமுதாயம் இனி எப்படி பார்க்க போகிறது. மாணவர்களாக வலம் வந்தவர்களை இனி ரவுடிகளாக, தொடர் கொலையாளிகளாக மாற்றி அவர்களை போலீஸ் தேடப்படும் பட்டியலில் இணைத்து விடாதபடி இந்த சமூகம் பார்க்குமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

நமது கல்வி முறைகள் மாணவர்களை நல்வழிப்படுத்த வில்லையா? என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் பெற்றோரா? ஆசிரியரா? சமூகமா? என்ற தலைப்பில் மாணவர்களை மையமாக வைத்து பட்டிமன்றங்கள் தொடங்கி இருக்கின்றன. காரணம் யாராக இருந்தாலும், மாணவர்கள்  குற்றவாளிகளாக அதுவும், கொலை குற்றவாளிகளாக மாறி இருப்பதை  கல்வியாளர்கள் எப்படி தடுத்து நிறுத்த போகிறார்கள்? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனங்களின் தனி அலுவலர் செல்வமணி. கல்லூரி முதல்வர் சுரேஷ் படுகொலையை கண்டித்து 1000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை திரட்டி மவுன ஊர்வலம் நடத்தியவர். இந்த பிரச்னை தொடர்பாக அவரிடம் பேசுகையில் ‘‘இப்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பண்பாட்டு கல்வி முறை மிகவும் அவசியம். இதை தொடக்க பள்ளிகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள், பெற்றோரிடம் எப்படி நடக்க வேண்டும். கோப தாபங்கள் மற்றும் உணர்ச்சி வசப்படுதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றியெல்லாம் சிறு வயதில் இருந்தே நாம் போதிக்க வேண்டும். அப்போது தான் ஒரு பருவத்தை அடைந்தவுடன், வாழ்க்கை முறையை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர்களும், பெற்றோரும் நமக்காக தான், கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஒரு மாணவன் புரிந்து கொண்டு விட்டால் நிச்சயம், அவன் வன்முறையாளனாக வாழ்வில் மாற மாட்டான்ÕÕ என்றார்.

கல்வி கூடங்கள் இன்று வியாபார ஸ்தலங்களாக மாறி விட்டது என்ற ஓர் குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர். கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை கல்வியில் 70 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவன்தான், பொறியியல் கல்லூரிக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால்  இப்போது அந்த நிலை இல்லை. 40, 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட பொறியியலில் முக்கியமான படிப்பை அதிக பணம் கொடுத்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் அதற்கேற்ப அவர்களால் படிக்க முடியவில்லை. கல்லூரிகள் ஒரு பக்கம் நெருக்கடி, பெற்றோர் ஒரு பக்கம் நெருக்கடி என அந்த மாணவனை வெறுப்பின் உச்ச கட்டத்துக்கு கொண்டு சென்று விடுகிறது.

இது கல்லூரியில் மட்டுமல்ல, பள்ளிகளிலும் இப்போது அப்படி தான் நடக்கிறது. ஒரு மாணவனின் மனநிலையை புரிந்து கொள்ள சக்தி இல்லாதவர்களாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். தனது விருப்பத்தை திணித்து, அவனின் சுதந்திரத்தை சிறு வயதிலேயே பறித்து விடுவதால் பெற்றோர், ஆசிரியர்கள் என்றாலே சில மாணவர்கள் வெறுத்து ஒதுக்கும் நிலை உள்ளது.

இன்னும் பல வீடுகளில் பெற்றோருடன் பேசாத பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது இந்த சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெட்க கேடு என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து ஆகும். கடந்த காலங்களில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன. ஆனால் உளவியல் கல்வி முறைகள் நமது பள்ளிகளில் இப்போது இல்லை. வெறும் பாட புத்தகத்தை படித்துக் கொண்டு தான் மாணவர்கள் வளருகிறார்கள். எந்த பள்ளியிலும் மன ரீதியாக மாணவர்களை புரிந்து கொள்ளும் ஆசிரியர்கள் இல்லை.

உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு விசாரணையில் இது மிகப்பெரிய கேள்வியாகி இருக்கிறது. சிறார் நீதிமன்ற நீதிபதி கூட குழந்தைகளின் செயல் திறனை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறி இருக்கிறது. எனவே சிறு வயதில் இருந்தே பக்குவப்படுத்துதல் என்பது நமது கல்வி முறைக்கு அவசியம் ஆகும்.

இதை கற்பிக்க கல்வியாளர்களும் தவறி விட்டார்கள். அதன் விளைவு தான் இப்போது சமூகம் சந்தித்து இருக்கும் 2 படுகொலைகள்.
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக இல்லாமல், சிறு வயதில் இருந்தே ஒரு மாணவனை சகிப்பு தன்மையுடன் வளர்க்க கற்றுக் கொண்டால், நிச்சயம் எதிர்கால சமுதாயம் சிறப்பானதாக அமையும். இதில் மிகப்பெரிய பங்கு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தான் உண்டு என்பதை மறுத்து விடல் ஆகாது என்பது ஒட்டு மொத்த ஆர்வலர்களின் கருத்தாகும்.

சகிப்பு தன்மையை கற்று கொடுக்க தவறி விட்டோம்

பள்ளியில் இருந்தே ஒரு மாணவனை அவன் எதிர்காலத்துக்கேற்ப தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு இயந்திரமாக  பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாற்றி விட்டார்கள். கல்வி கூடங்களும் இன்று தேர்ச்சி விகிதம் ஒன்று தான் முக்கியம் என்பதை அடிப்படையாக வைத்து  பல்வேறு வகைகளில் ஒரு மாணவனை கசக்கி பிழிந்து வருகின்றன. சகிப்பு தன்மையை சொல்லி கொடுக்க தவறி விட்டோம்.

அதுவே இளைய சமுதாயத்தை இப்போது சீரழிவின் உச்சத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது.  பணம் ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில் தான் பலர் குழந்தைகளை வளர்க்கிறார்கள். மற்ற விஷயங்களை அவர்கள் புறந்தள்ளி விடுவதால் தான் இன்று குற்றவாளிகள் பட்டியலில் மாணவ சமுதாயம் சேர்ந்து இருக்கிறது என்பது ஒரு தரப்பின் வாதமாக உள்ளது.

No comments:

Post a comment