Labels

rp

Blogging Tips 2017

அரசுப்பள்ளிகளில் அரைகுறையாய் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கிலவழி, ஏழைத் தமிழ் மாணவர்களின் பரிதாபநிலை

தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களும்கூட அதுபற்றிக் கவலைப்படவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். அவர்கள் கவலைப்படாதது மட்டுமல்ல, ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் மிகவும் வேதனை தரக்கூடியது. கடலூர் மாவட்டத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் அனைத்து மாணவர்களையும் ஆங்கிலவழி வகுப்பில் சேர்த்துவிட்டனர்; தமிழ்வழி வகுப்புகளில் ஒருவர்கூடச் சேரவில்லை என்ற செய்திக்கு இயக்குனர் தங்கர்பச்சான் தொடங்கி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் வரை காட்டிய எதிர்வினையே இதற்குச் சான்று. இதனால் தமிழே அழிந்துவிடும் என்றும் ஆங்கிலத்தை தமிழ் மக்கள்மீது திணிக்கக் கூடாது என்றும் தமிழைக் காப்பாற்ற அனைத்துப் பள்ளிகளிலும் ஆரம்பக்கல்வி தமிழ்வழியில் மட்டுமே கற்றுத்தர வேண்டுமென்று கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
உண்மையில் இது தமிழ்மொழியின் பிரச்னையல்ல, தமிழ் மக்களின் வாழ்க்கைப் பிரச்னை. ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்விப் பிரச்னையை ஒரு மொழிப்பிரச்னை போல் ஆக்கி, அவரவர் உணர்ச்சிப் பிழம்பாய்க் கொந்தளிக்கிறார்களேயொழிய, அந்த மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை எவருக்குமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இங்கே இரண்டுவகையான கல்விமுறை நிலைபெற்றுவிட்டது. ஒன்று உலகளாவிய வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய ஆங்கிலவழிக் கல்வி. மற்றொன்று உள்ளுரில்கூட வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமற்ற தமிழ்வழிக் கல்வி. இவற்றில் முன்னது தனியார் கையில் வியாபாரச் சரக்காக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதை அத்தனை விலைகொடுத்து வாங்கமுடிந்த வசதிபடைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அத்தனை பணவசதி இல்லாவிட்டாலும்கூட பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்கள் வாயையும் வயிற்றையும் சுருக்கிக் கொண்டாவது, தங்களால் திரட்ட முடிந்த பணத்திற்கேற்ற குறைந்த விலை (குறைந்த கட்டண) ஆங்கிலவழிப் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
அதற்கும் வழியில்லாத ஏழைப் பெற்றோர்களே தங்களது இயலாமையை நொந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்க வைத்து வருகின்றனர். விலையில்லா அரிசி, விலையில்லா மடிக்கணிணி, விலையில்லா டி.வி, மிக்ஸி, கிரைண்டர் கொடுத்த அரசாங்கம் அந்த வரிசையில் விலையில்லா ஆங்கிலவழிக் கல்வி கொடுத்தவுடன், உடனடியாக அவர்கள் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்த்துவிட்டனர். இதில் தமிழ்மொழி அவர்களிடமிருந்து பிடுங்கப்படவும் இல்லை, ஆங்கிலமொழி திணிக்கப்படவும் இல்லை. தம்பிள்ளைகளும் நாலு பேரைப்போல படித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்ற ஏழைப் பெற்றோர்களின் நியாயமான ஆசையும் சுயவிருப்பமுமே இதில் அடங்கியிருக்கின்றன.
பெற்றோர்கள், எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி தரவேண்டும் என்று பாடாய்ப்படுவது ஆங்கில மோகத்தினாலோ தமிழ்மீதுள்ள வெறுப்பினாலோ அல்ல. போட்டிகள் நிறைந்த இச்சமூகத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரக்கூடிய கல்வியை வழங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வினால்தான். பெற்றோரின் இந்தப் பொறுப்புணர்வை ஆங்கில மோகம் என்று கொச்சைப்படுத்தி அவர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குவது சமூகப் பொறுப்புள்ளவர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல.
இன்றைய உலகமயச்சூழலில் உள்ளுர்த் தொழில்களும்கூட உலகத் தொழில்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே உலக இணைப்பு மொழியான ஆங்கிலத்தின்வழி கற்ற மாணவர்களுக்கே நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அத்தகைய வாய்ப்புகள், ஏழையாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது என்பதுதான் உண்மையான சமூகநீதியாகும்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி தொடங்கப்பட்டுள்ளதால் தமிழ் ஒருபோதும் அழியப் போவதில்லை. தமிழின் ஆயுள் அத்தனை அற்ப சொற்பமானது அல்ல. மத்திய அரசு தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தியை திணிக்க முயன்ற போது ஆங்கிலம் வேண்டும் என்று ஒரு மாபெரும் மொழிப்போர் நடத்தி ஆங்கிலத்தை நாம் இங்கே தக்க வைத்துக் கொண்டதால் தமிழ் ஒன்றும் அழிந்துவிடவில்லையே. இந்த அரை நூற்றாண்டில் தமிழின் சீரிளமை கூடித்தானே இருக்கிறது.
எனவே, தமிழ்மொழி அழிந்துவிடுமே என்பதைவிட, அரசுப்பள்ளிகளின் இன்றைய நிலையிலேயே அங்கு ஆங்கிலவழி துவங்கப்பட்டுள்ளதால் அதில் பயிலும் ஏழை மாணவர்கள், தனியார் ஆங்கிலப் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் சரிசமமாக போட்டியிட்டு வேலைவாய்ப்புகளை வென்றுவிட முடியுமா என்பதே நமது கவலையாக இருக்க முடியும். ஏனெனில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுக்கென தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தனியே நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த பழைய ஆசிரியர்களைக் கொண்டுதான் ஆங்கிலவழிப் பாடங்களும் நடத்தப்படப் போகின்றன. இதனால் ஒருமொழி என்ற அடிப்படையில், ஆங்கிலத்தையும் முறையாகக் கற்காமல் தமிழையும் முறையாகக் கற்காமல் மாணவர்கள் வெளியேவர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அடிப்பிசகாமல் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரே அரசாணையாகிய “எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி” என்ற விதி இந்த அவலநிலைக்கான வாய்ப்பை நிச்சயம் உறுதி செய்யும்.
ஏற்கனவே ஏபிஎல் முறை என்றும் எஸ்பிஎல் முறை என்றும் பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளில் இந்த அரைகுறை ஆங்கிலவழிக் கல்வியும் சேர்ந்தால் அந்த ஏழை மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியே நம்மை நிலைகுலையச் செய்கிறது.
எனவே, நமது தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையினராகிய ஏழைத் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் குறித்து உண்மையில் அக்கறை கொண்டுள்ள கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களின் இன்றைய உடனடிக் கடமை, அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கிலவழிப் பள்ளியின் அனைத்துப்பாட ஆசிரியர்களுக்கும் தனியே தகுதிகள் வரையறுக்கப்பட்டு, அத்தகுதிகளின்படி இப்பணியிடங்களுக்கென்று தனியாக ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதே ஆகும்.
- த.சிவக்குமார் ( thasivakumar@gmail.com)

No comments:

Post a comment