Labels

rp

Blogging Tips 2017

ஆங்கில வழியில் கல்வி பயில்வோர் உயர்ந்தோர், தமிழ் வழியில் பாடம் படிப்போர் தாழ்ந்தோர் என்கிற நவீனத் தீண்டாமைப் போக்கு?

காலங்காலமாக நடுத்தர பெற்றோரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மோகம், படிப்படியாகக் கல்வியினைத் தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் மறைமுக செயல்பாடுகளின் கூறாக மெட்ரிக் பள்ளிகளுக்குப் பெருவாரியான அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மொத்த தமிழ்வழிக் கல்வி மாணவ சமுதாயமும் அந்நிய, ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனலாம்.
இதுதவிர, மத்திய அரசு நாடு முழுவதும் கேந்திர வித்யாலாயா பள்ளிகளைப் போல சிபிஎஸ்சி பள்ளிகள் பலவற்றைத் திறக்க முடிவு செய்துள்ளது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போலுள்ளது. அதேசமயம், பத்து மாணவர்களுக்குக் குறைவாக உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளை மூடும் அவலமும் ஒருபுறம் நடந்தேறவிருக்கின்றது. தமிழ்வழிக் கல்விக்கு இதுநாள்வரை இப்படியொரு நெருக்கடி நேர்ந்தது கிடையாது.
முன்பெல்லாம் குழந்தைகள் கல்விக்கற்கும் புகலிடங்களாக அரசுப் பள்ளிக்கூடங்கள் திகழ்ந்தன. உயர் பதவிகளில் இருந்தோரின் பிள்ளைகள்கூட விரும்பி இங்குதான் அரிச்சுவடி படிக்க ஆயத்தமாயினர். இதனால் தமிழ்வழிக் கல்வி ஊரெங்கும் கோலோச்சிக் கிடந்தது. பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகளில் ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோரும் அத்தகையோரிடம் ஊடாடிய பெரும்தனவந்தர்களின் செல்வங்களும் மட்டுமே சொற்பமாகக் கல்விப் பயின்றுவந்தனர். இத்தகு சூழலில், விடுதலைக்குப் பிந்தைய அரசியல் எழுச்சியானது இந்தி திணிப்பை முழுமூச்சாக எதிர்த்து அழித்தொழிக்க மாற்றாக ஆங்கிலத்தை முன்வைத்ததன் விளைவே மெட்ரிக் பள்ளிகளின் பெருமளவிலான வெடிப்பிற்கு முக்கியக் காரணமாகும்.
இருமொழிக் கொள்கையினை வலியுறுத்தி ஆங்கிலவழிக் கல்விக்கு உரமூட்டிய நேரத்தில் இங்கிருக்கும் திராவிட அரசியல் கட்சிகள் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' எனும் உரத்த முழக்கத்தைச் செயலளவில் நடைமுறைப்படுத்தியிருந்தால் செம்மொழியாம் தமிழ்மொழி அரசுமொழியாக, ஆட்சிமொழியாக,வழிபாட்டு மொழியாக,பாட பயிற்றுமொழியாக அனைத்துத் துறைகளிலும் வளங்கொழித்திருக்கும் என்பது திண்ணம். இப்போதும் ஆட்சியாளர்களுக்குக் காலம் கடந்துவிடவில்லை என்றே தோன்றுகின்றது.
ஒருதுளி மையில் இதுநாள்வரை எத்தனையோ சட்டங்களை மக்கள் நலன்கருதித் திருத்தியிருக்கின்றோம் .மாற்றம் செய்திருக்கின்றோம். ஒருமுறை தமிழ்மொழியைக் காக்க முயற்சித்தல் என்பது வீண் செயலல்ல. மொழியென்பது வெறும் தகவல்தொடர்பிற்கான கருவியன்று. இனத்தின் மேன்மைக்கும் நீடித்த பெருமைக்கும் உரிய, உயரிய, உயிர்ப்புள்ள நாடித்துடிப்பாகும். ஓர் இனத்தின் அழிவென்பது முதலில் மொழியின் அழிவிலிருந்தே தொடங்குகிறது என்பது உலகளவில் நிரூபணமான பேருண்மையாகும்.
ஆங்கில வழியில் கல்வி பயில்வோர் உயர்ந்தோர், தமிழ் வழியில் பாடம் படிப்போர் தாழ்ந்தோர் என்கிற நவீனத் தீண்டாமைப் போக்குகளால் தமிழ்ச் சமூகம் மேலும் பிளவுபட இதனால் வாய்ப்புண்டு. மெட்ரிக் பள்ளிகளை முறைப்படுத்துதல்,அனுமதி வழங்காதிருத்தல்,அரசுப்பள்ளிகளின் தரத்தைக்கூட்ட புதிய கட்டமைப்புகள் மற்றும் வளங்களை ஏற்படுத்தித் தருதல் போன்றவை மட்டும் போதாது. தமிழ்வழிக்கல்விப் பயிற்றுமுறையினைப் பெருமளவு ஊக்குவித்தலும் நர்சரி முதற்கொண்டு உயர் தொழில்நுட்பக் கல்விவரை தமிழ்ப்பாடத்தை ஒரு பாடமாகவாவது பிழையின்றிப் பயில தக்க வழிவகுத்தலும் அவசர அவசியமாகும்.
பெற்றோரிடையே படிந்துவிட்ட ஆங்கிலக்கல்வி மோகம் தணிக்கப்படுதலும் தவிர்க்கப்படுதலும் அரசு, பெற்றோர், சமுதாயத்தினரின் ஒருமித்த முயற்சியால் நிகழுதல் நல்லது.தாய்ப்பாலையொத்தது தாய்மொழிவழிக்கல்வி என்பதை உணருதல் பெற்றோர் கடனாகும்.தமிழைப் பேசி, தமிழர்களாய் வாழும் தன்னிகரற்ற தமிழ்நாட்டில் எந்தவொரு நிலையிலும் தமிழ்மொழிப்பாடம் அன்றி, பிற பாடங்களில் தமிழைப் படிக்காமல் முனைவர் பட்டம் வரை படித்திடும் அபத்தநிலை மிகவும் ஆபத்தானது.
ஆங்கிலம் என்பது உலகளவிலான ஒரு தகவல்தொடர்பு மொழி அவ்வளவே. ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் முதலான வல்லரசு நாடுகளின் வகுப்பறைகளில் ஆங்கிலப் பாடமோ,தேர்வோ இல்லை. அவரவர் தாய்மொழிதான் அங்கு முதன்மையானதாக உள்ளது. உலக அரங்கில் அவர்கள் ஆங்கிலமின்றி வெற்றிக்கொடி நாட்டுவதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் தொடக்கக் கல்வி முடிய பயிற்றுமொழியாக அவரவர் தாய்மொழியே உள்ளது.
ஆதலால்தான், அவர்களால் மத்திய அரசின் ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்தொழில் நுட்பத்துறையில் தேசிய அளவில் அதிகப் பங்களிப்பைத் தரமுடிகின்றது. ஏனெனில், தாய்மொழியில் நல்ல தேர்ச்சியும் புலமையும் மிக்க ஒருவரால் மட்டும்தான் பிற மொழிகளிலும் எளிதாக வெற்றிபெற முடியும்.
அதுபோல், ஒருவருக்கு கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட புத்தாக்கப் படைப்புகள் பற்றிய நூல்கள் மற்றும் கலைக்களஞ்சியம் ஆகியவற்றை ஆங்கிலத்திலிருந்து உடனுக்குடன் தமிழில் மொழியாக்கம்பெற்று எளிதாகக் கிடைக்கச் செய்தல் சாலச்சிறந்தது. இவ்வரும்பணியைச் செவ்வனே செய்திட திரளாக மொழியியல் வல்லுநர்கள் உருவாதலுக்கும் உருவாக்குதலுக்கும் அரசு போதுமான ஆக்கமும் ஊக்கமும் வழங்கிடுதல் மிகுந்த நன்மைப் பயக்கும். அப்போதுதான் தமிழ்ச் சமூகத்தின் மனநிலையில் தமிழ்மொழியில் இல்லாதது உலகில் எதுவுமில்லை என்கிற நிலை உருவாகி தாய்மொழி மீதான மதிப்பு மேலும் கூடும்.

No comments:

Post a comment