Friday, 18 July 2014

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த கட்டட வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாசாலா, ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவை இயங்கி வந்தன. இதில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. தவிர, 18 குழந்தைகள் பலத்தக் காயமடைந்தன.

இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவரது மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிசாமி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி. பழனிசாமி, ஆர். பாலாஜி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆர். நாராயணசாமி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஜெ. ராதாகிருஷ்ணன், வி. பாலசுப்பிரமணியம் (மழலையர் பள்ளிகள்), கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. மாதவன், வட்டாட்சியர் எஸ். பரமசிவம், பொறியாளர் பி. ஜெயசந்திரன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியர்கள் பி. தேவி, ஆர். மகாலட்சுமி, டி. அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஆர். சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் கே. முருகன், தொடக்கப் பள்ளிக் கல்வி இயக்குநர் ஏ. கண்ணன் ஆகிய 24 பேரை கைது செய்தனர்.

இவர்களில் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் பள்ளித் தலைமையாசிரியர் பிரபாகரன் அப்ரூவராக மாறினார். மேலும், இந்த வழக்கில் 488 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 2006, ஜூலை 12-ம் தேதி மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிசாமி, வட்டாட்சியர் எஸ். பரமசிவம், தொடக்கப் பள்ளி இயக்குநர் ஏ. கண்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் நிலவி வந்தது. இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கே. பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என ஆணையிட்டது.

விபத்து நிகழ்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2012, செப். 24-ம் தேதி இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. இதில், அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். மதுசூதனன் வாதாடினார்.

இந்த வழக்கில் அப்ரூவர் ஆர் பிரபாகரன், விபத்தில் காயமடைந்த 18 குழந்தைகள், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள், முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர்கள் டி. வசுந்தராதேவி, வி.சி. ராமேஸ்வர முருகன், காவல் சரகத் துணைத் தலைவர் ஜான் நிக்கல்சன், உயிரிழந்த குழந்தைகளைப் பரிசோதனை செய்த 18 மருத்துவர்கள் என மொத்தம் 230 பேர் சாட்சியம் அளித்தனர். அரசுத் தரப்பு சாட்சியம் நிகழாண்டு மார்ச் 28-ம் தேதி முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து, அரசுத் தரப்பில் கூறப்பட்ட சாட்சியங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேட்கப்பட்டது. பின்னர், எதிர் தரப்பு வழக்குரைஞர்கள், அரசுத் தரப்பு வழக்குரைஞரின் வாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மே 5-ம் தேதி ஆணையிட்டது.

இந்த விசாரணை ஏறத்தாழ 22 மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் எதிர்தரப்பு வழக்குரைஞர்களின் வாதத்துடன் வியாழக்கிழமை முடிவடைந்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 30-ம் தேதிக்கு நீதிபதி எம்.என். முகமது அலி ஒத்திவைத்தார்.

விபத்து நிகழ்ந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats