Labels

rp

Blogging Tips 2017

கடிவாளமின்றிச் செயல்படும் தனியார் பள்ளி விடுதிகள்

மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் போட்டியிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் நடத்தும் மாணவர் விடுதிகள் மீது கல்வித் துறையோ, இதரத் துறை அலுவலர்களோ உரிய கண்காணிப்பு மேற்கொள்ளாததால், விளையாட்டு உள்ளிட்ட பிற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல் அதிகாலை முதல் இரவு வரை படிப்பில் மட்டுமே முழுக் கவனமும் செலுத்த வற்புறுத்துவதால் அந்த விடுதி மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கல்வி மாவட்டம் எனப் பெயர் பெற்று விளங்கும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்விலும், தொடர்ந்து மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலிலும் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துக் கொண்டுள்ளனர். இதனால், பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெற்றோர்களின் இத்தகைய எதிர்பார்ப்பைச் சாதகமாக்க இந்த மாவட்டத்திலுள்ள 84 தனியார் பள்ளிகளில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள், வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக விடுதி வசதி ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், பல பள்ளி விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு போதுமான இடவசதி இருப்பதில்லை. இதனால், அடுக்கடுக்கான படுக்கைகள் அமைத்து அளவுக்கு அதிகமான மாணவர்கள் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகின்றனர்.
மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் அதிகாலை 4 மணிக்கே எழுப்பி விடப்பட்டு, காலை 6 மணி முதல் தொடர்ந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து, பள்ளி நேரம் முடிந்து மாலையில் விடுதிக்கு திரும்பும் மாணவர்கள் ஓரிரு மணிநேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இரவு 10 மணி வரை படிக்கவும், தேர்வு எழுதவுமே வற்புறுத்தப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் விளையாடவோ, நல்ல இசை கேட்கவோ மாணவர்களை அனுமதிப்பதில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அவ்வாறு அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து மாணவர்கள் படிப்பில் மட்டுமே ஈடுபடுத்தப்படுவதாலும், நெருக்கடியான சூழலில் தங்க வைக்கப்படுவதாலும் தனியார் பள்ளி விடுதி மாணவர்களிடம் மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டுள்ளது.
இந்த மன அழுத்தமே விடுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழவும் காரணமாக உள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதுடன், தற்போது தருமபுரியிலும் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார். இருப்பினும், தனியார் பள்ளி விடுதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கல்வித் துறையோ, பிற துறை அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.டி.கண்ணன்.
அவர் மேலும் கூறியது:
தனியார் பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கான ஜனநாயகம் முழுமையாக மறுக்கப்படுகிறது. இதனால், விடுதி மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். ஆனால், கல்வித் துறை அதிகாரிகள் தனியார் பள்ளி விடுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு தங்களிடம் இல்லை என்றும், இதையே வருவாய்த் துறை, இதரத் துறை அதிகாரிகளும் தெரிவிப்பதால், தனியார் பள்ளி விடுதிகள் கடிவாளமின்றி செயல்பட்டுக் கொண்டுள்ளன. தனியார் பள்ளி விடுதிகளின் இத்தகைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முதலில் கல்வி முறையிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அதற்கு முன் விடுதிகளை உரிய முறையில் கண்காணித்து, மாணவர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதுதொடர்பாக, சனிக்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆட்சியர் கூறியது: நாமக்கல், திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர்கள் தலைமையில் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் குழந்தைகள் காப்பகங்கள், தனியார் பள்ளி விடுதிகளிலும் ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில், தனியார் பள்ளி விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளி விடுதி மாணவர்களை படிப்பு தவிர விளையாட்டு, இதர விஷயங்களில் ஈடுபடுத்துவதை உறுதிப்படுத்திட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a comment