Friday, 22 August 2014

சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்க குழு: தமிழக அரசுக்கு உத்தரவு


தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான குழுவை, 3 மாதங்களுக்குள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இந்தக் கட்டணம் என்பது 1998-ஆம் ஆண்டுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகை எங்கள் சங்கத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு போதுமானதாக இல்லை. தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு கட்டண நிர்ணயக் குழுவை அரசு அமைத்துள்ளது. அதேபோல, சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி வே.ராமசுப்ரமணியன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், அரசு சிறப்பு வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மட்டும் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய 3 மாதங்களுக்குள் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats