Labels

rp

Blogging Tips 2017

ஒவ்வொரு பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் : கலெக்டர் உத்தரவு

டெங்கு காய்ச்சலால் ஒருவர்கூட பாதிக்காத வண்ணம் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு மற்றும் இதர விஷக்காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள விவரம், டெங்கு காய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:–
அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் ஆட்டோ மூலமாக பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தினை செய்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் நியமிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒன்றிய ஆணையாளர், தாசில்தார், வட்டார மருத்துவ அலுவலர், உதவி கல்வி அலுவலர் மற்றும் சுய உதவி குழுவினர் சேர்ந்து ஒருங்கிணைந்து குழுக்கூட்டம் நடத்தி டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வேங்கிக்கால் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்பரவு பணிகள் நல்ல முறையில் நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கவும் ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் சுய உதவி குழுவினர் ஒருங்கிணைந்து கூட்டங்கள் நடத்தி டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மேலும், பொதுமக்கள் ஒருவர் கூட டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
சித்த மருத்துவரிடம் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சலுடன் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்யும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தெ.அ.லில்லி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்கள் க.நரசிம்மன், எஸ்.சுந்தரராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆர்.ஜெயந்தி, இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட தொற்று நோய் கண்காணிப்பாளர் சிவஞானம், திருவண்ணாமலை மருத்துவர் கார்த்திகேயன், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து நகராட்சி சுகாதார அலுவலர்கள், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment