Labels

rp

Blogging Tips 2017

நடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தேர்வு எழுத தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு எழுதத் தேவையில்லை என்றும் ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக தொடரலாம் என்றும் மத்திய அரசு முன்வைத்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்று வழக்கை முடித்து வைத்தது.

கடந்த அக்டோபர் 27-ந்தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான கேந்திரிய வித்யாலயா அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து செய்து, அதற்கு பதிலாக சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவால், நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வி.எஸ்.ராமநாதன் உள்ளிட்ட பெற்றோர் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.
இதில் மத்திய அரசு சார்பில், அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், ‘மத்திய அரசு சார்பில் திங்கட்கிழமை அன்று கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான விருப்பப் பாடமாக ஜெர்மன் மொழி தொடரும் என்றும் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிகளில் தேர்வு நடைபெறாது. வரும் கல்வி ஆண்டில் (2015-16) கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ஒன்றை மூன்றாம் மொழி பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ரீனா சிங் தன்னுடைய வாதத்தின்போது, ‘கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களும் இந்த நாட்டின் குடிமக்களே. தனியார் பள்ளி மாணவர்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப அயல் மொழிகளில் படிக்கும்போது கேந்திரிய வித்யாலயா மாணவர்களுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் தங்களின் விருப்பப் பாடமாக ஜெர்மன் அல்லது வேறு ஏதாவது மொழிகளை படிப்பதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த நீதிபதிகள் அதன் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment