Labels

rp

Blogging Tips 2017

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் தேவையா?

பள்ளி மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஆசிரியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். நடப்பு 21ம் நூற்றாண்டில் உலகில் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்ற ஒரே தொழில்நுட்ப சாதனம் செல்போன் என்றால் மிகையல்ல. தற்போதைய எலக்ட்ரானிக் யுகத்தில் கேமிராவுடன் கூடிய செல்போன், படங்கள், பாடல்கள், பைல்களை பதிவு செய்யும் மெமரி கார்டுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. சைனா செல்போன்கள் வரவால், கேமிரா, வாட்ஸ்அப், ஆன்ட்ராய்டு (ஓஎஸ்) வசதி செல்போன்கள் கூட குறைந்த விலையில் கிடைக்கின்றன.

பரமக்குடி நகரில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு செல்போனுடன் வருகின்றனர். பள்ளி வேலை நேரத்தில் வகுப்பறைகளில் செல்போனில் பாட்டு கேட்பது, படங்கள் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வாய்ஸ் ரெக்கார்டிங், கேம்ஸ், பேஸ்புக் பயன்பாட்டில் ஈடுபடுகின்றனர். வகுப்பிற்கு ஆசிரியர்கள் வரும்போது செல்போனை `சைலன்ட் மோடில்’ வைத்துவிடுகின்றனர். ஆசிரியர் சென்றபின் மீண்டும் செல்போனில் கச்சேரியை தொடங்குகின்றனர். பள்ளி வேலை நேரத்தில் சில ஆசிரியர்களும் செல்போனை பயன்படுத்துவதால் அவர்களும் இதுபற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இப்பிரச்னையால் வகுப்பறையில் மற்ற மாணவர்களின் கவனமும் சிதறுகிறது.
வரையரையில்லாமல், தொடர்ந்து செல்போனை பயன்படுத்தும் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. படிப்பில் அவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதில் சில மாணவர்கள் ஆபாச எஸ்எம்எஸ்களை பிறருக்கு அனுப்புகின்றனர். இதுகுறித்து புகார்கள் வந்த நிலையில் போலீசார் சம்மந்தப்பட்ட மாணவர்களின் நலன் கருதி அறிவுரை கூறி அனுப்பி வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் செல்போன் கொண்டு வரும் மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க கூடாது. பெற்றோரும் தங்களது பிள்ளைகளின் நலன் கருதி பள்ளி பருவத்தில், செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்காமல் இருந்தால் நல்லது.
இதுகுறித்து பரமக்குடி கீழ முஸ்ஸிம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் கூறுகையில், `மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தவறு. பல மாணவர்கள் செல்போனில் கேம்ஸ் விளையாடுவது, பாட்டு மற்றும் படங்கள் பார்ப்பதில் தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்து வருகின்றனர். இதனால் அவர்களின் கவனம் சிதறி, படிப்புத்திறன் குறைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். எங்களது பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதித்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து பெற்றோரும் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
என்ன சொல்கிறது காவல்துறை?
போலீசாரிடம் கேட்டபோது, `செல்போன் மூலமாகவே பல சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு செல்போன் அவசியமா? என பெற்றோர் சிந்திக்க வேண்டும். செல்போன்களில் ஆபாச படங்கள் வைத்திருந்தால் அது குற்றம். நகர் பகுதியில் மாணவர்கள் பலர் செல்போன் மூலம் ஆபாச எஸ்எம்எஸ் பரப்புவதாக புகார்கள் வருகின்றன. இதுகுறித்து விசாரணை செய்யும்போது, சிம்கார்டு வேறொருவருக்கு சொந்தமானதாக உள்ளது. அல்லது மாணவர்களது பெற்றோரின் நம்பராகவும் உள்ளது. பெற்றோர் மாணவர்களின் கையில் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொன்னான நேரம் வீணாகும் கவன சிதறல் ஏற்படும் படிப்பில் ஆர்வம் குறையும். தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்’ என்று கூறினர்.

No comments:

Post a Comment