rp

Blogging Tips 2017

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததா? சிக்கலில் பள்ளிக் கல்வித் துறை- vikatan.com

கல்வி உரிமைச் சட்டத்தில் நடந்த முறைகேட்டை தோலுரித்திருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். ஒருபக்கம் முட்டை விவகாரத்தில் அரசு முழி பிதுங்கிக் கொண்டிருக்க... பள்ளிக் கல்வித் துறையில் 23 கோடி ரூபாய் முறைகேடு புகார் சந்தி சிரிக்கிறது!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தது. சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர 25 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு வழி செய்கிறது இந்தச் சட்டம். இதற்கான செலவை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிவிடும். இப்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில்தான் தகிடுதத்தங்கள் அரங்கேறி இருக்கின்றன.

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையில் (2014 ஜூலை 17) பேசிய அமைச்சர் வீரமணி, ''கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2013 - 2014-ம் கல்வியாண்டில் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அரசு எடுத்த முயற்சியால் 2014 - 2015-ல் மாணவர் சேர்க்கை (30.6.14 நிலவரப்படி) 74,127 ஆக உயர்ந்தது. இந்த மாணவர்களுக்கான கட்டணம் ரூ.25.13 கோடி'' எனவும் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் 'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்? மாவட்ட வாரியாக எத்தனை பேர் படிக்கிறார்கள்? சட்டம் அமல்படுத்தப்பட்ட விதம்?’ என கேள்விகளை எழுப்பி தகவல் அறியும் சட்டத்தில் விவரங்களைக் கேட்டிருக்கிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம். இதற்கு அரசு அளித்த பதிலில் 2014 - 2015 - ம் ஆண்டில் 2,959 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் எனச் சொல்லி மாவட்ட வாரியாக விவரங்களை அளித்திருக்கிறார்கள். அமைச்சர் வீரமணி சொல்வது 74,127 பேர் என்று. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு சொல்வது 2,959 பேர்தான். இந்த விவரத்தை கடந்த அக்டோபரில் அரசு அளித்திருக்கிறது. ஆனால், அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி நடந்த குழந்தைகள் தின விழாவில் பேசிய பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா, அமைச்சர் வீரமணியைவிட ஒருபடி மேலே போய் 2014 - 2015-ம் ஆண்டில் 89,941 பேர் சேர்க்கப்பட்டதாகச் சொன்னார்.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவனிடம் பேசினோம். ''கட்டாயக் கல்வி சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் தகவல் அறியும் சட்டத்தில் மனு போட்டோம். ஆசிரியர்குரல்எல்லோருக்கும் கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 2,959 மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் கணக்கு போட்டால் சுமார் ரூ.2 கோடி மட்டுமே கல்வி கட்டணமாக வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால் வீரமணி குறிப்பிட்டதுபோல ரூ.25.13 கோடி எப்படி செலவு ஆகியிருக்கும். மீதியுள்ள ரூ.23 கோடி நிதியில் ஊழல் நடந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. .இதற்கான ஆதாரத்தை அரசே வழங்கியிருக்கிறது. இதில் உண்மை என்ன? எனக் கேட்டு சபீதாவுக்குக் கடிதம் எழுதினோம். அவர் பதில் சொல்லவில்லை. அதனால்தான் மீடியாவின் கவனத்துக்குக்கொண்டு வந்தோம்'' என்றார்.
உலக ஊழல் எதிர்ப்பு தினமான டிசம்பர் 9-ம் தேதிதான் இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.
அதற்கு முந்தைய தினம் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனை அதிரடியாக டிரான்ஸ்ஃபர் செய்தாராம் சபீதா. தகவல் அறியும் சட்டத்தில் விவரங்களைக் கொடுத்ததால்தான் அவரை சபீதா தூக்கியடித்தார் என கோட்டையில் பேச்சு. கருணாநிதியும் ராமதாஸும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறார்கள்.
சபீதாவிடம் பேசினோம். ''பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயன்பெறுகிறவர்களின் தகவல்கள் மட்டுமே தகவல் அறியும் சட்டத்தில் பெறப்பட்டிருக்கிறது. மெட்ரிகுலேஷன், நர்சரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் பெறப்படவில்லை.
மெட்ரிகுலேஷன், நர்சரி பள்ளிகளில்தான் அதிகம் பேர் படிக்கிறார்கள். அவர்களையும் சேர்த்தால் 89,941 மாணவர்கள் வருவார்கள். கடந்த கல்வியாண்டில் செலவழித்த தொகை ரூ.28 கோடி.
அந்தப் பணமே இன்னும் வந்து சேராதபோது எப்படி ஊழல் நடக்க முடியும்? ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.
உண்மை என்னவோ?
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

No comments:

Post a Comment