Labels

rp

Blogging Tips 2017

'பிளஸ் டூ மார்க் குறையும்?'- எஸ்எம்எஸ் மூலம் பெற்றோருக்கு நூதனமாக வலை வீசும் தனியார் மருத்துவ கல்லூரிகள்

“பிளஸ் டூ தேர்வில் 2 பாடங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினம். இதனால், மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவப் படிப்புக்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்” என்று தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி நூதன வியாபாரத்தைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாம்.

இதனால், மதிப்பெண்கள் குறையுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர். மருத்துவப் படிப்புக்கான கட்-ஆஃப் குறையும் என்பதால், மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

தங்களது மகனுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோருக்கு, இந்த தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிக்கலான சூழலை சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வியாபாரத்தை இப்போதே தொடங்கிவிட்டன. மாணவர்களின் பெற்றோர்களுக்கு வலைவீசும் வகையில், அவர்களது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி, முன்கூட்டியே மருத்துவப் படிப்புக்கு பதிவு செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து புதுக்கோட்டை யைச் சேர்ந்த மாணவியின் தந்தை ஒருவர் கூறும்போது,

“மருத்துவராக வேண்டு மென்ற மகளின் கனவை நிறைவேற்றுவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரூ.6 லட்சம் செலவிட்டு, பிளஸ் டூ படிக்கவைத்தேன். நன்றாகப் படிக்கும் அவள், பொதுத் தேர்வில் வேதியியல், உயிரியல் தேர்வுகளில் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததால் மதிப்பெண் குறையும் என அச்சமடைந்துள்ளார். மேலும், மருத்துவப் படிப்பு மட்டுமே பயில்வேன் என அடம் பிடிப்பதால், எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து எங்களது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன. அவற்றில், மருத்துவப் படிப்புக்கு முன்கூட்டியே பதிவு செய்யுகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பெற்றோர்களது செல்போன்களுக்கு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து குறுந்தகவல்கள் வருகின்றன.

‘இந்த ஆண்டு மதிப்பெண் கண்டிப்பாக குறையும், அதேசமயம், கடந்த ஆண்டு கூடுதலாக மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்’ என்ற வாசகங்களுடன் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி, நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பில், மாணவர்களைச் சேர்க்குமாறும் தினமும் செல்போனில் அழைக்கின்றனர். இதனால், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் கடந்த ஒரு வாரமாக திகைத்துநிற்கிறோம். தேர்வு முடிவுகளுக்குப் பின்னரும் இந்த குழப்பம் நீடிக்குமோ என்ற அச்சம் உள்ளது” என்றார்.

இதுகுறித்து உளவியல் ஆலோசகர் புதுக்கோட்டை எம்.நிர்மல்குமார் கூறும்போது, “தேவையற்ற குழப்பத்தைத் தவிர்த்து, திறமைக்கேற்ற உயர் கல்வியைப் பயில மாணவர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான், அவர்களது எதிர்காலம் பிரகாசமாக அமையும்” என்றார்.

No comments:

Post a Comment