Labels

rp

Blogging Tips 2017

வெளியூர்களுக்குச் செல்லும் மின் நுகர்வோர் ஓராண்டு வரை முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்தலாம்

வெளியூர்களுக்குச் செல்லும் மின் நுகர்வோர் ஓராண்டு வரை முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்தும் வகையில், மின் விநியோக விதிகளில் திருத்தம் செய்து வரைவு விதிகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மின் நுகர்வோர் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தங்களது வீடுகளை பூட்டிவிட்டு பல மாதங்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினால் அவர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதற்கு இந்தத் திருத்தம் உதவும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போதுள்ள விதிகளின் அடிப்படையில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதி இருந்தாலும், நீண்ட நாள்களுக்கு கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
மின் கணக்கீட்டாளர் முதல்முறை வரும்போது வீடு பூட்டியிருந்தால், அவருக்கு முந்தைய மாதத்தின் கட்டணமே நிர்ணயிக்கப்படும். இரண்டாவது முறையாக வீடு பூட்டியிருந்தால், அவர்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் நுகர்வோரின் வைப்புத் தொகை இரண்டுமுறை கட்டணம் செலுத்துவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் மின்சார வாரியத்துக்கும் வேறு வழியில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது முன்கூட்டியே நீண்ட நாள்களுக்குக் கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கும் வகையில் மின் விநியோக விதிகளில் திருத்தம் செய்து வரைவு விதிகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதன் விவரம்:
குறைந்த மின் அழுத்த நுகர்வோர் தங்களது வீடுகளை 2 மாதங்களுக்கும் மேலாக பூட்டிவிட்டு வெளியூர்களுக்குச் செல்ல விரும்பினால், அவர்களிடம் ஓராண்டு வரை கட்டணத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள அனுமதிக்கலாம். மின் நுகர்வோரிடம் இருந்து பிரத்யேகமான கோரிக்கைகள் வந்தால் இந்தக் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கலாம்.
இதற்காக மின் நுகர்வோர் தாங்கள் வெளியூர் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, மின் வாரிய அதிகாரிகளிடம் முன்கூட்டியே கட்டணத்தைச் செலுத்துவதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
மின் வாரிய அதிகாரிகள், நுகர்வோரின் கடைசி 15 நாள்கள் மின் பயன்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் குறிப்பிடும் காலத்துக்கு மின் கட்டணத்தை கணக்கிட வேண்டும். அவர்கள் வெளியூர்களுக்குச் செல்லும் 7 நாள்களுக்கு முன்னதாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதற்கு வழங்கிய அனுமதி, முன்தொகை பணம் ஆகிய விவரங்களை மின் கட்டணம் செலுத்தும் அட்டையில் அதிகாரிகள் குறிப்பிட வேண்டும். நுகர்வோர் செலுத்திய பணம் மின் கட்டணத்துக்கு போதுமானதாக இல்லையென்றால் மின் இணைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துண்டிக்கலாம்.
மின் நுகர்வோர் வெளியூர்களில் இருந்து திரும்பிய 7 நாள்களுக்குள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்பிறகு, 7 நாள்களுக்குள் மின் பயன்பாட்டை அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும். இதில் முன்பணம் ஏதேனும் மீதமிருந்தால், அடுத்து வரும் மின் கட்டணத் தொகையில் கழித்துக்கொள்ள வேண்டும் என்று புதிதாகப் பரிந்துரைக்கப்பட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment