Labels

rp

Blogging Tips 2017

அரசுப் பள்ளிகளில் 'பியூர் சயின்ஸ்' பாடப்பிரிவு நீக்கம் ! : மருத்துவம் சார்ந்து படிக்க முடியாமல் ஏமாற்றம்

தேர்ச்சி சதவீதத்தை காரணம் காட்டி, புதுச்சேரியில் உள்ள பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'பியூர் சயின்ஸ்' என்ற அறிவியல் பாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 53 அரசு மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் 43 பள்ளிகள் உள்ளன. இது தவிர, 83 தனியார் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.
மாணவர்கள் எதிர்காலத்தில், எந்த துறையை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதை, பிளஸ் 2 பாட பிரிவுகள் முடிவு செய்கிறது. மருத்துவம், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் முதல் பிரிவான ஏ2 என்ற கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்தை தேர்வு செய்கின்றனர். பொறியியல் துறையை விரும்பும் மாணவர்கள், ஏ1 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்வு செய்கின்றனர்.பியூர் சயின்ஸ் பிரிவு நீக்கம்
கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்களுக்கு, கணிதம் இல்லாத இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் கொண்ட 'பியூர் சயின்ஸ்' பாட பிரிவு வர பிரசாதமாக இருந்தது.

இந்த பாட பிரிவின் சிறப்பு என்னவென்றால், மொழிப் பாடத்திலும் செய்முறை மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடத்திலும் செய்முறைக்கு மதிப்பெண் பெற முடியும்.

இப்பிரிவில் படிக்கும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளான ஆயுர்வேத மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.பார்ம், செவிலியர், பிசியோதெரபி உட்பட பல தொழிற்படிப்புகளும், பி.எஸ்சி., வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் உட்பட பல மேற்படிப்புகளை படிக்க முடியும்.

கடந்த காலத்தில் இந்த பாட பிரிவை தேர்வு செய்த மாணவர்கள் செவிலியர், பி.பார்ம், மருத்துவ படிப்பில் கூட சேர்ந்து படித்தனர். கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த இப்பாட பிரிவு கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு, ஒவ்வொரு அரசு பள்ளியாக நீக்கப்பட்டது. தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிலான பள்ளிகளில் மட்டும் இந்த படிப்பு நீடித்து வருகிறது. பல அரசு மேல் நிலைப் பள்ளிகளில் இந்த பாட பிரிவு நீக்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் அறிவியல் பாட பிரிவுகள் நீக்கப்பட்டு வருவதால், வரும் காலத்தில் தனியார் பள்ளிகளில் மட்டுமே அறிவியல் பாட பிரிவுகள் இருக்கும் என்ற நிலை உருவாகும்.
அதிகாரிகள் கூறுவதென்ன?
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'அறிவியல் பாட வகுப்பில் அதிக மாணவர்கள் சேர்வது கிடையாது. இதில் சேரும் மாணவர்கள் அதிகம் பேர் தோல்வியடைகின்றனர். அதனால் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதால், பல பள்ளிகளில் இருந்து இந்த பிரிவு நீக்கப்பட்டது.
இதற்கு பதிலாக, மேல் நிலைப் பள்ளிகளில் பல தொழில்நுட்ப பாட பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது' என்றனர்.
கல்வியாளர்கள் கூறுகையில்,'தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை தயார் படுத்தி மாநிலத்தில் தேர்ச்சி விழுக்காடு காண்பிக்கின்றனர்.
ஆனால், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு சம்பளம் அதிகம் வாங்குகிறார்கள். ஆனால் அரசு பள்ளி தேர்ச்சி சதவீதம் மட்டும் ஆண்டு தோறும் குறைந்து வருவது. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட, அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமை குறைந்தவர்களா?. மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் வகுப்பு நீக்கப்பட்டது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தேர்ச்சி குறைவுக்கு மாணவர்கள் காரணம் இல்லை, ஆசிரியர்கள் தன் காரணம்' என்றனர்.

எனவே மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களின் அறிவியல் பாட பிரிவை அரசு பள்ளிகளில் மீண்டும் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வருக்கு தெரியுமா?

கடந்த பட்ஜெட் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில்,'அரசு, புதிய வகுப்புகளை உருவாக்குமே தவிர, எதையும் நீக்க மாட்டோம்' என்று தெரிவித்தார்.

ஆனால், முதல்வரின் அறிவிப்பிற்கு நேர்மாறாக, புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ துறை சார்ந்த பாட பிரிவுகள் படிப்பதற்கான அறிவியல் பாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







No comments:

Post a Comment