rp

Blogging Tips 2017

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மீதான தடையை நீக்கியது சென்னை ஐஐடி

சென்னை: மாணவர்கள் நடத்தி வந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதித்த தடையை  ஐஐடி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு, புதிய கண்டுபிடிப்புகள்  மற்றும் அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் தங்களுக்கிடையே அரசியல் மற்றும் பல்வேறு  இயக்கங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். இதில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பு  மாணவர்களிடையே நடப்பு அரசியல் சூழல் குறித்த பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பின் சார்பில்,  நரேந்திர மோடி அரசின் கொள்கை முடிவுகளை கடுமையாக சாடி மாணவர்கள் மத்தியில் பிரசாரம் நடந்தது.

இந்நிலையில், இந்த அமைப்பு குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை  அமைச்சகத்துக்கு ெமாட்டை கடிதம்  ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தின்  அடிப்படையில் மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர் கடந்த மே 15 அன்று விளக்கம் கேட்டு ஐஐடி  இயக்குனருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் ஐஐடியில்  செயல்பட்டு வந்த அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை தடை  செய்வதாக ஐஐடி இயக்குனர் உத்தரவிட்டார். இதனால், மாணவர்களிடையே திடீர் பதற்றம் ஏற்பட்டது. கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவும், அரசுகளின்  குறைபாடுகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஐஐடி நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கை பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, எந்த விளக்கமோ, முன்னறிவிப்போ இல்லாமல் ஒரு அமைப்பின் மீது இதுபோன்ற அங்கீகார ரத்து நடவடிக்கைகளை எடுத்தது ஏற்க  முடியாது. ஐஐடி நிர்வாகம் மாணவர் வட்டத்தை ரத்து செய்ததை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,  மாணவர், இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தின. ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

சென்னை ஐஐடி நிர்வாகத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களும் நடந்தன. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த பிரச்னை  எதிரொலித்தது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு எதிராகவும், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராகவும் போராட்டங்கள்  வலுத்தன. இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து ஐஐடி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்  அனுப்பியது. போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில் கடந்த 2ம் தேதி ஐஐடி பொறுப்பு இயக்குனர் கே.ராமமூர்த்தி தலைமையில் ஐஐடி அம்பேத்கர்  -பெரியார் வாசகர் வட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஐஐடி நிர்வாகம் தடையை விலக்க வேண்டும் என்றும் ஐஐடி டீன்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ஐந்து முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் மத்திய அரசும்,  பிரதமர் மோடியும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட   வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள்  வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று மீண்டும் ஐஐடி நிர்வாகம்  மற்றும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.

மாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஐஐடி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. அதே போல ஐஐடி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்ட  பரிந்துரையின்படி  ஐஐடி தரப்பில் ஆலோசகராக பேராசிரியர் மிலிண்ட பிரம்மியை நியமிப்பது என்பதை மாணவர் அமைப்பினர் ஏற்றனர். இனி  அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடை நீக்கப்பட்டு சுயேச்சையான அமைப்பாக செயல்பட ஐஐடி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதன்  மூலம் கடந்த 25 நாட்களாக நடந்த போராட்டம் நேற்று மாலை  முடிவுக்கு வந்தது.. 

No comments:

Post a Comment