Labels

rp

Blogging Tips 2017

நாடு முழுவதும் 'மேகி' நூடுல்சுக்கு தடை

புதுடில்லி : 'மேகி நூடுல்ஸ், மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு அல்ல. அதில் கலந்துள்ள பொருட்கள் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை' என, இந்திய உணவு மற்றும் தர ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் ஒன்பது வகையான நூடுல்ஸ் வகைகளை சந்தையிலிருந்து உடனடியாக திரும்ப பெறும்படியும், அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது
பிரபலம்:ஒரு சில நிமிடங்களிலேயே சமைத்து சாப்பிடும் வகையிலான, 'மேகி நூடுல்ஸ்' என்ற உணவுப் பொருள், சர்வதேச அளவில் பிரபலம். நம் நாட்டில், ஏராளமான குழந்தைகள் இந்த நூடுல்சை விரும்பி சாப்பிட்டனர். இந்நிலையில், உ.பி., மாநில அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 'மேகி' நூடுல்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, மோனோ சோடியம் குளூட்டாமேட் என்கிற அஜினமோட்டோ, காரீயம் ஆகியவை அதிகமாக கலந்திருப்பது தெரியவந்தது; இது, மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த உணவை தடை செய்யும்படி கோரிக்கை எழுந்தது. பல மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, டில்லி, தமிழகம், குஜராத், ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை
விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, மத்திய அரசும் இந்த விஷயத்தில் தீவிரமாக களமிறங்கியது. மேகி நூடுல்ஸ் மாதிரியை ஆய்வு செய்து முடிவை அறிவிக்கும்படி, இந்திய உணவு மற்றும் தர ஆணையத்துக்கு உத்தரவிட்டது. உணவு மற்றும் தர நிர்ணயம் சார்பில், ஆய்வகத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 'மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல' என, தெரியவந்தது.

இதையடுத்து, உணவு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைவர் மாலிக் வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தீங்கு:மேகி நூடுல்ஸ் மாதிரி யில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த உணவு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என்றும், அதை சாப்பிட்டால் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், மேகி நூடுல்சை தயாரிக்கும் நிறுவனமான, 'நெஸ்லே' இந்த விவகாரத்தில், இந்திய உணவு பாதுகாப்பு சட்டவிதிமுறைகளை மீறியுள்ளது. 'மேகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸ்' என்ற உணவை, அனுமதி பெறாமலேயே விற்பனை செய்து வருகிறது. இது சட்டவிரோதமான விதிமுறை மீறல். எனவே, மேகி நூடுல்சின் ஒன்பது வகையான உணவுப் பண்டங்களை, அந்த நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 'இந்த உணவுப் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, பதப்படுத்தவோ, வினியோகிக்கவோ, இறக்குமதி செய்யவோ கூடாது' என, நெஸ்லே நிறுவனத்துக்கு தெரிவிக்கப்படுகிறது; இந்த தடை, உடனடியாக அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக, நெஸ்லே நிறுவனம், 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்படுவது தொடர்பான அறிக்கையை, மூன்று நாட்களுக்குள் அளிக்க வேண்டும். இருப்பு உள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பான அறிக்கையை, தினமும் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறப்பட்டுள்ளது. இதனால், மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான, 'நெஸ்லே' கடும் இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.

No comments:

Post a Comment