Labels

rp

Blogging Tips 2017

கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 20) வெளியிடப்பட உள்ளது.
 சென்னை, வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளார்.

 கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என்று பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. 
 ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய மூன்று நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 
 இந்த நிலையில், இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது. 
 விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக www.tanuvas.tn.nic.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தர வரிசைப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும் என்று துணைவேந்தர் திலகர் தெரிவித்தார்.
 இடங்கள் எவ்வளவு? ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பை (பி.வி.எஸ்சி.) பொருத்த வரை சென்னை (120 இடங்கள்), நாமக்கல் (80), திருநெல்வேலி (40), ஒரத்தநாடு (40) ஆகிய பகுதிகளில் உள்ள 4 கல்லூரிகளில் மொத்தம் 280 இடங்கள் உள்ளன.
 இவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், விளையாட்டுப் பிரிவின் கீழ் 5 (மகளிர் -3, ஆண்கள் -2) இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 1 இடமும், பிளஸ் 2 தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்படும். 
 மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கு (இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில்) 48 இடங்கள் ஒப்படைக்கப்படும். 
 இதுதவிர, சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், கொடுவள்ளியில் உள்ள கல்லூரியில் நான்கரை ஆண்டு பி.டெக். (எஃப்.டி.-உணவுத் தொழில்நுட்பம்) படிப்பு (20 இடங்கள்) வழங்கப்படுகிறது.
 ஒசூரில் உள்ள கல்லூரியில் பி.டெக். (பிபிடி-கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்)படிப்பு (20 இடங்கள்) வழங்கப்படுகிறது.
 மேலும், பி.டெக். பால்பொருள் தொழில்நுட்பம் (20 இடங்கள்) என்ற புதிய நான்கரை ஆண்டு இளநிலை பட்டப் படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 இந்தப் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது

No comments:

Post a Comment