Labels

rp

Blogging Tips 2017

அண்ணா நூலகத்தில் வசதிகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் 'குட்டு'

சென்னை: 'சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வசதிகளை நிறைவேற்ற, ஐந்தாண்டு திட்டம் தேவையா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை, கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை, நுங்கம்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர் மனோன்மணி, வழக்கு தொடுத்தார். நுாலகத்தை இடமாற்றம் செய்ய, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து, 'நுாலகத்தை சரிவர பராமரிக்கவில்லை; நுால்கள், இதழ்கள் வாங்குவது குறைக்கப்பட்டு விட்டது; படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, மற்றொரு மனுவை, மனோன்மணி தாக்கல் செய்தார்.


இதையடுத்து, நுாலகத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வழக்கறிஞர்கள் இருவரை, உயர் நீதிமன்றம் நியமித்தது; அவர்களும் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்தனர்.அதை பரிசீலித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', 'அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்; காலி பணிடங்களை நிரப்ப வேண்டும்' என, உத்தரவிட்டது.

இந்த வழக்கு, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் வில்சன், வழக்கறிஞர் காந்தி ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில், பிளீடர் மூர்த்தி ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:அரசு தாக்கல் செய்த அறிக்கையை பார்க்கும்போது, இன்னும் பல விஷயங்களில், அக்கறை செலுத்த வேண்டியதுள்ளது தெரிகிறது. இதில், ஐந்தாண்டு திட்டம் போல், ஏதாவது கொள்கை முடிவு அடங்கியிருப்பதாக தெரியவில்லை.எனவே, அவசரமாக இந்த விஷயத்தை கவனிக்க வேண்டும். அரசுக்கு, நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கிறோம். நுாலகத்தில் எந்த அளவுக்கு முன்னேற்றம் உள்ளது என்பது குறித்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், எந்த நேரத்திலும் சென்று ஆராயலாம்.
விசாரணை, அக்., 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment