Labels

rp

Blogging Tips 2017

தமிழக அரசின் தன்னிறைவுத்திட்டம் (அரசானை 2011-2015) – Self Sufficient Scheme – GO 2011-2015.

அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மனதுவைத்தால் அப்பகுதி மக்களின் உதவியுடனும், அரசின் துணையுடனும் ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் தனியார் பள்ளியில் கிடைக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரமுடியும்.
-------------------------------------------------------------------------------------------
(முதலில் தமிழ் நாடு அரசின் இணையதளமான ஊரகவளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதற்கு நமது கடுமையான கண்டணங்கள்)

தமிழக அரசின் ஊரகவளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை மூலம் பொதுமக்களிடையே சுய சார்பை வளர்த்தெடுக்க வருடந்தோறும் 100 கோடி ரூபாயை தன்னிறைவுத்திட்டத்திற்காக ஒதுக்கிவருகிறது. இத்திட்டம் கிராமப்புறம், நகர்ப்புறம் என எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும்
.
ஒரு செயல்பாட்டிற்கு ஆகும் செலவில் (உதா. அரசுப்பள்ளியில் கழிவறை கட்ட) அரசு மூன்றில் இரண்டு பகுதி பணமோ (2/3) அல்லது இரண்டில் ஒரு பகுதி (1/2) பணமோ கொடுக்கும். மீதியை மக்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனமோ/ அறக்கட்டளைகளோ கொடுத்து திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதே தன்னிறைவுத்திட்டம்.

இதன் மூலம் யார் யாரெல்லாம் எவ்வாறு பயனடையலாம் என்று அரசு பட்டியல் கொடுத்துள்ளது. அவற்றில் சில சுருக்கமாக,

1. அனைத்து அரசுப்பள்ளிகள், நூறு சதவீதம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டிடங்கள், கழிவறைகள், குடிநீர் வசதி, சமையலறை, சுற்றுச்சுவர், விளையாட்டுத்திடல், ஆய்வுக்கூடம், கணினிக் கூடம், சூரிய ஒளித்தகடுகள் போன்றவற்றை அமைத்துக்கொள்ளலாம்.

2. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், கால்நடைமருத்துவமனைகளில் தேவையான கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் அமைத்துக்கொள்ளலாம். மேலும் இடு/சுடுகாடுகளும் அமைத்துக்கொள்ளலாம்.

3. கிராமப்புறம், நகர்ப்புறங்களில் நூலகங்கள், மதிய உணவு நிலையங்கள், அங்கன்வாடிகள், பொது விநியோக கடைகள் போன்றவற்றை அமைத்துக்கொள்ளலாம்.

4. ஒருங்கிணைத்த சுகாதார மையங்கள்/கழிவறைக்கூடங்கள் ஆண்கள் பெண்கள்

5. பாலங்கள், மதகுகள், சிமெண்ட் சாலைகள், நடைபாதைகள் புதிதாக அமைக்கவும், மேம்படுத்திக்கொள்ளவும்

6. பூங்காக்கள், நீரூற்றுகள், சூரிய ஒளி தெருவிளக்குகள் நான்கு அல்லது மூன்று சாலை சந்திப்புகளின் மையத்தில் விபத்துகளை தவிர்க்க சிறு தோட்டம் (traffic island) உள்ளிட்டவைகளை புதிதாக அமைக்கவும், ஏற்கெனவே உள்ளவைகளை பராமரிப்பு, மேம்பாட்டு திட்டங்களுக்கும்,

7. உடல் நலன் காக்கும் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பாக வைத்திட திட, திரவ கழிவுப்பொருட்களை சுத்திகரிக்க துப்புரவு கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்திக்கொள்ளலாம்.

8. குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவிக்கொள்ளலாம் (reverse osmosis plant). 
(மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும் http://164.100.167.196/rdwebsi…/…/go_files/3_396_2015_65.pdf)

எவ்வாறு இத்திட்டத்தை பயன்படுத்தலாம்

இத்திட்டத்தின் மூலம் மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது அரசின் ஒரு கொள்கை முடிவாகும். அதன்படி, ஒரு அரசுப்பள்ளியில் கழிவறையைக்கட்ட ஒரு தனிநபரோ அல்லது ஒரு அறக்கட்டளையின் மூலமோ (அறக்கட்டளைகள் மூலம் நேரிடையாக செயல்பட முடியாது, ஒரு தனி நபரை முன்னிறுத்தியே செயல்பட முடியும்) திட்டமிட்டால் அதற்கு ஆகும் செலவினை பட்டியலிட்டு மாவட்ட கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் அதற்கான அனுமதி அளிப்பார்.

உதாரணத்துக்கு 1/2 (ஒன் பை டூ) திட்டத்தின் மூலம் நாம் விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். மாவட்ட கல்வி அதிகாரி கழிவறையைக்கட்ட அனுமதியளித்தப்பின் அதற்குத் தேவையான மொத்த செலவுத்தொகையில் ஒரு பகுதியை, அதாவது, கழிவறை கட்ட ரூ.1,00,௦௦௦/- செலவு ஆகுமென்றால் நமது பங்கான ரூ. 5௦ ஆயிரத்தை வைப்புத்தொகையாக வங்கியில் வரைவோலை (Demand draft) எடுத்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு ரூ.1,00,௦௦௦/- யும் நமது செலவிலே செலவிட்டு கழிவறையையும் கட்டிமுடிக்க வேண்டும். கட்டிமுடிக்கப்பட்ட கழிவறையை அரசு பார்வையிட்டு, இரசீதுகளை சரிபார்த்துப்பின் நாம் செலவிட்ட ரூ.1,00,௦௦௦/- ஐ திருப்பிக்கொடுக்கும் (நாம் ஏற்கெனவே வைப்புத்தொகையாக ரூ. 5௦ ஆயிரத்தை செலுத்தியது குறிப்பிடத்தக்கது).

சிக்கல்கள்

1. சேவை மனப்பான்மையுள்ள அரசு அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளித் தலைமையாசிரியர்கள் கிடைப்பது.

2. ஒரு திட்டத்திற்கு ஆகும் செலவைவிட ஒன்னரை மடங்கு பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். நமது பங்கை வைப்புத்தொகையாகவும், இன்னொரு பகுதி பணத்தை திட்டத்திற்காகவும் செலவு செய்ய சேகரிக்கவேண்டும்.

3. 1/2 திட்டத்தை தேர்ந்தெடுத்தால் ஒப்பத்தந்தாரர்களை நாமே முடிவுசெய்ய வாய்ப்புகள் அதிகம், செயல்பாட்டையும் விரைந்து முடிக்கலாம். 1/3 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது அரசே டெண்டர் விட்டு ஒப்பந்ததாரர்களை தேர்ந்தெடுக்கும், இந்த முறையில் நாம் எதிர்பார்த்த தரத்தோடு செயற்பாடுகள் அமைய சாத்தியமில்லை. அதோடு காலதாமதமாகும் வாய்ப்பும் அதிகம்.

நமது முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Trust) யின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், புதுக்கரிக்காத்தூர் கிராமத்தில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து ஏற்கெனவே, நூலகம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்டவைகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். தற்போது அரசின் இந்தத் தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் வட்டமேசைகள், நாற்காலிகள், விளையாட்டுத்திடல் உள்ளிட்டவைகளை அமைத்துக்கொடுத்துள்ளோம். அடுத்த கட்டமாக கணினிக்கூடம், சூரியமின்தகடுகள், சுற்றுச்சுவர், பள்ளியின் மேல்தளம் உள்ளிட்டவைகளை அமைத்துக் கொடுக்கவிருக்கின்றோம்.

முழுமதியின் செயல்பாடுகளை பார்த்து அக்கிராம மக்கள் தாமாகவே முன்வந்து புரவலர் திட்டத்தின் மூலம் முழுமதியின் பங்களிப்புடன் பள்ளியின் தரைத்தளத்தைப் (டைல்ஸ் பதித்து) புதுபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி. புறவலர் திட்டம் என்பது மக்களே தங்களால் இயன்ற நிதியை திரட்டி அளிப்பது .

இப்படியாக மக்கள் தங்கள் பணத்தை தனியாருக்கு வாரி இறைப்பதை விடுத்து, தங்கள் பகுதியிலுள்ள அரசுப்பள்ளியை மேம்படுத்த உதவினாலே தங்கள் பிள்ளைகளுடன் ஏழை எளியவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து பலனைப்பெறுவார்கள். மக்கள் சிந்திப்பார்களா?

No comments:

Post a comment