Labels

rp

Blogging Tips 2017

வணக்கத்திற்குரிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு..ஆசிரியரின் அன்பானவேண்டுகோள்

வணக்கத்திற்குரிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு..

வணக்கம். நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வேலை செய்ய வேண்டிய உங்கள் துறைக்குத் தமிழகத்தில் மறுபடியும் வேலை பார்க்க வேண்டிய நேரம் நெருங்கி வருகிறது.

ஆம்..

தமிழகச் சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது..
அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல..தாங்களும் தங்கள் பணியைத் துவக்கிவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்..

தேர்தல் நெருங்க நெருங்க உங்கள் துறை வீறு கொண்டு எழுவதைப் பார்க்கும் பொழுது மிகவும்  ஆச்சரியமாக இருக்கும்.


எவ்வளவு நுட்பமாய்.. எவ்வளவு வேகமாய்..எவ்வளவு நிதானமாய்..செயல்படுகிறது என்பதை உற்றுக் கவனிக்கும் பொழுது..உங்கள் பணிகளைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இருக்காது.

உங்களையெல்லாம் நம்பித்தான் இந்திய ஜனநாயகம் சுவாசப் பெருமூச்சை நிம்மதியாக விடுகிறது..

ஆயிரம் சொன்னாலும், தேர்தல் ஆணையத்திற்கு மீசை முளைத்ததென்னவோ டி.என்.சேஷன் காலத்தில்தான்..!

இந்த நேரத்தில் அந்த மனுஷனை நினைவு கூராமல் கடந்து செல்வது என்பது, நன்றி கொன்றத்தனம்தான்.
சரி இருக்கட்டும்..

தேர்தல் காலங்களில், உங்கள் துறை, ஒவ்வொருவர் மீதும் காட்டுகிற அக்கறை..பரிவு..

அட..அட..அடடா..

வாவ்..

சூப்பர்..

5 கோடி வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதாக இருக்கட்டும்.. அல்லது பூத் சிலிப் வழங்குவதாக இருக்கட்டும்.. அவர்களை வீடு தேடிச் சென்று பணியாளர்களை வைத்து நேரிலேயே சென்று வழங்கிவிடுகின்றீர்கள்.

வாக்காளர்கள்..வாக்குப் பதிவு செய்ய வரும்பொழுது.. வாக்குப் பதிவு மையத்தில் அவர்கள் நிற்கப் போவதென்னவோ அதிகபட்சம் 10 நிமிடங்கள்தான்.

ஆனால் அந்த 10 நிமிடங்களில் அவர்களுக்கு குடை மட்டும்தான் நீங்கள் பிடிப்பதில்லை.

மற்றபடி, நிழல் தரும் பந்தல்.. வரிசையில் நிற்க கயிறுகள்..வழிகாட்ட தலையாரிகள்.. மாற்றுத்திறனாளிகள் நடந்து வர சறுக்குப்பாதை..குடிக்கத் தண்ணீர்.. யாராவது மயங்கி விழுந்துவிட்டால் அவர்களுக்குக் கொடுப்பதற்கு குளுகோஸ் பாக்கெட்டுகள்..

வாக்குச் சீட்டு எடுத்துக் கொடுக்க ஒருவர்.. மை வைத்துவிட ஒருவர்..அடையாளம் சரி பார்க்க ஒருவர்.. வாக்குப் பதிவுக் கருவியைக் கவனிக்க ஒருவர் என்று ராஜமரியாதைதான் போங்கள்..

இவர்களை விடுங்கள்..

தேர்தலில் நிற்பவர்களுக்கும்..அவர்களின் ஏஜென்டுகளுக்கும்தான் தேர்தல் ஆணையம் கொடுக்கிற மரியாதைதான் என்ன..

தேர்தல் சின்னங்கள் வழங்குவதாக இருக்கட்டும்.. அவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்குவதாக இருக்கட்டும்..எத்தனை நடைமுறைகள்..! பார்த்து பார்த்து செய்கிறீர்கள்..

சும்மா சொல்லக்கூடாது..

அவர்களுக்கு காலையிலேயே ஒரு, மாதிரிவாக்குப்பதிவு நடத்திக்காட்டி அவர்கள் திருப்தி அடைந்த பிறகுதான் தேர்தல் பணிகளையே துவக்கமுடியும்.

பத்திரிகையாளர்களையும் நீங்கள் சும்மா விடுவதில்லை..

முதல் மரியாதைதான் அவர்களுக்கும்..

பாராட்டுக்கள்..

எல்லாம் சரிதான்-

ஆனால்..

இந்தப் பாவப்பட்ட ஆசிரியர் சமூகத்தையும் சற்று நீங்கள் கவனித்தால்தான் என்ன?

எவராலும் கவனிக்கப்படாமல், சவலைப் பிள்ளைகளைப் போலே ஒவ்வொரு தேர்தலில் மனக்குமுறலோடு வருகிற ஆசிரியர்களின் குறைகளைக் கவனிப்பதற்கும்..உங்கள் காதுகளைக் கொஞ்சம் கொடுத்தால்தான் என்ன?

தேர்தல் வருவதற்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையிலேயே..இன்றிலிருந்தே ஆசிரியர்களுக்கும் உங்களுக்குமான பணிகள் துவங்குகின்றனவே..
பணியாற்றுகிற ஆசிரியர்களின் பெயர்பட்டியல்கள்.. அவர்களின் சுய விபரங்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டீர்கள்.

நல்லதுதான்..

எதையும் முன்கூட்டியே செய்வது என்பது மிகவும் நல்லதுதான்.

45729 வாக்குச்சாவடிகளுக்கும் 182916 வாக்குப்பதிவு அதிகாரிகளை நியமனம் செய்வது என்பது எளிதான காரியம் அல்லதான்..

7 மாதங்களுக்கு முன்பே அவர்களிடமிருந்து பட்டியல்கள் பெற்றுக் கொள்ளுகிறத் தாங்கள், அவர்களுக்கான பணி ஆணையை எப்பொழுது.. எப்படி.. வழங்குகின்றீர்கள் என்பதைச் சற்றேனும் நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா?

தேர்தலுக்கு ஒரு நாள் முன்புதான் அவர்களுக்கான பணியாணையை வழங்குகின்றீர்கள்.

அதுவும் கூட்டம் கூட்டமாக வைத்துக் கொண்டு, திருவிழாக்கூட்டங்களில் சிறு பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கும் வணிகர் போல..

தேர்தல் பயிற்சி வழங்கும் முதல் நாளிலேயே அந்தப் பணியிட ஆணையை வழங்குவதற்கு இன்றைய தொழில் நுட்பத்தில் சாத்தியமில்லையா.. அல்லது மனமில்லையா?

சரி..வழங்கிவிட்டுப் போங்கள்..

அதன்பிறகு அந்த ஆசிரியர் தன் பெட்டி சட்டிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு, தனக்கான பணியிடத்தைத் தேடிப் போகவேண்டும்.

அந்த இடமும் எங்கிருக்கிறது?

100 கிமீ அல்லது 150 கிமீ தாண்டி..

ஏன்?

ஒரு ஆசிரியர் தான் பணியாற்றுகிற இடத்திற்கு அருகிலேயே உள்ள வாக்குச் சாவடியில் பணியாற்றினால் என்ன கேடு வந்துவிடும்?

கட்சிக்காரர்களுக்குச் சாதகமாக செயல்பட்டுவிடுவாரா?

அவர் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா?

ஆம் என்றால் நம்பிக்கையில்லாதவரை அப்படிப்பட்டப் பணிக்கு அமர்த்துவானேன்?

வேறு உங்களுக்கு நம்பிக்கையான பணியாளரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே?

பஞ்சாயத்து தேர்தல்களில் கூட நீங்கள் அச்சப்படும் ஒரு காரியம் நடக்கும்..நடக்கலாம்..நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது..என்று கூட நீங்கள் சொல்லிவிட முடியாது.

ஏனென்றால் எந்த வாக்குச் சாவடியும், போட்டியாளர்களே இல்லாமல் தேர்தலைச் சந்திப்பதில்லை.

பல போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.. 

அவர்களுக்கென்று முகவர்கள் கண் கொத்திப் பாம்பாய் இருக்கிறார்கள்..

இவ்வளவிற்கும் மேல் எல்லா வாக்குச் சாவடிகளிலுமே கண்காணிப்புக் கேமராக்களோடு இன்றைக்கு கல்லூரி மாணவர்கள் பணியாற்ற வருகிறார்கள்.

எங்கே பிழை வந்துவிடும்?

ஒரு சார்பாக செயல்படும் ஒரு தேர்தல் அதிகாரி, சிவகிரியில் பணியாற்றாமல் அங்கிருந்து 150 கிமீ தாண்டி திசையன்விளைக்குச் சென்று விட்டால் மாத்திரம் நடுநிலையோடு செயல்பட்டுவிடுவாரா என்ன?

என்னதான் உங்கள் லாஜிக்?

சரி..அது போகட்டும்..

ஆசிரியர்களில் உடல் ஊனமுற்றவர்கள்.. சர்க்கரை நோயாளிகள்..இருதய நோயாளிகள்..குழந்தைக்குப் பாலூட்டும் பெண்கள் என்று யாருமே இருக்க மாட்டார்களா?

அவர்களை முதலிலேயேக் கண்டறிந்து இத்தேர்தல் பணியிலிருந்து சற்று விலக்கி வைப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது?

அவர்களை முதலிலேயே இனம் கண்டு கொள்ளும் வகையில் உங்கள் தேடல்கள் இருக்கிறதா?
இல்லை..

காரணம்-

அந்தச் சமூகத்தின் மீது மற்றவர்களைப் போலவே உங்களுக்கும் அக்கறையும் பரிவும் இருப்பதில்லை..

அவர்கள் தேர்தல் பணியானையை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொள்ள வைக்கப்பட்டபின்பு, அந்த உத்தரவை ரத்து செய்ய அங்கும் இங்கும் அல்லாடித் தவிப்பதை என்றைக்காவது உங்கள் இதயம் உணர்ந்திருக்குமா?
அல்லது அவர்களின் குறைகளைக் கண்டறிந்து அதற்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க எல்லா மாவட்ட ஆட்சித்தலைவர்களின் மனவாசல்கள்தான் திறந்து கிடக்கிறதா?

பெண்ஆசிரியைகள் பணியாற்றச் செல்லும் இடத்திற்கு பயண வசதி இருக்கிறதா?

அங்கு செல்கிற இடத்திலே அவர்களுக்குத் தங்கும் வசதிதான் இருக்கிறதா?

அல்லது அடிப்படைக் கழிப்பிட வசதிதான் இருக்கிறதா?
இதை என்றைக்காவது தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டிருக்கிறதா?

சரி அதுவும் போகட்டும்..

காலை 7 மணியிலிருந்து ஆரம்பிக்கிற வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறதே..
7 மணிக்கு ஆரம்பமாகிற வாக்குப்பதிவிற்கு 6மணிக்கே ஆயத்தமாகி மாதிரி வாக்குப்பதிவை நடத்திக்காட்டிப் பணியாற்றுகிற தேர்தல் அலுவலர்கள் அந்த நாள் முழுவதும் எதை உண்கிறார்கள்? 

எப்படி உண்கிறார்கள்?
உணவு உட்கொள்வதற்கான உணவு இடைவேளை ஏதேனும் தேர்தல் நாளில் உண்டா?அதை நிர்ணயம் செய்து கொடுத்திருக்கின்றீா்களா?

வேட்பாளர்களிடம் எதையும் வாங்கக்கூடாது என்று ஜம்பமாய் ஏசி அறைக்குள் இருந்து உத்தரவிடுகிற தாங்கள்..வாக்குப் பதிவுமைய அதிகாரிகளின் உணவுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்து வைத்திருக்கின்றீர்கள்?

ஆசிரியர்கள் எவரும் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை எதையுமே சாப்பிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா?

சரி..அது போகட்டும்..தேசத்திற்காக ஆசிரியர்கள் ஒரு நாள் பட்டினியாய் கிடந்தால் குடியா மூழ்கிவிடப்போகிறது?

மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுற்றுவிடுகிறது.

அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் எத்தனை மணிக்கு வருகின்றீர்கள்?

நள்ளிரவு 1 மணிக்கு..

அதன்பிறகு நீங்கள் ஜம்மென்று உங்கள் அரசாங்க ஜீப்பில் சென்று விடுகிறீர்கள்.

ஆனால் அந்த பாவப்பட்ட பெண் ஆசிரியைகள் அந்த நள்ளிரவில், தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு என்ன வசதி அந்தக் குக்கிராமத்திலே இருக்கிறது?

அது பற்றி என்றைக்காவது அக்கறை கொண்டிருப்பீர்களா..யுவர் ஆனர்?

ஆசிரியர்களை விடுங்கள்..

அங்கே காவலுக்கு நிற்கும் பெண் காவலர்களைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டிருப்பீர்களா நீங்கள்?

3 நாட்களாக அங்கேயே குடியிருக்கும் பெண் காவலர்கள் படும் அவஸ்தை உங்களுக்குத் தெரியுமா?

எந்த அதிகாரி..எப்பொழுது வந்தாலும், நள்ளிரவு நேரமாக இருந்தாலும் சரி.. 24 மணி நேரமும் அவர்கள் தங்கள் சீருடையிலேயே நிற்க வேண்டுமாம்..

அது எப்படி சாத்தியம்?

வழக்கமான தங்கள் உடைக்கு மேல் காவலர் சீருடையை அணிந்துகொண்டிருக்கிற, அவர்கள் தங்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குப் படுகிற பாடுகள் உங்களுக்குத் தெரியுமா?

அதுவும் அவர்களுக்கு அது மாதவிடாய்க் காலமாக இருப்பின்..அவர்கள் படுகிற அவஸ்தையை நீங்கள் மறுஜென்மத்தில் அதே போல் பெண்காவலராய் பிறந்து அனுபவித்தால்தான் உணரமுடியும்..

அவர்களும் உங்கள் வீட்டுப் பெண்களைப் போலவே, ரத்தமும் சதையும்  உணர்வுகளும் நிறைந்த மனிதர்கள்தான் என்பதையாவது தயவு செய்து புரிந்து கொள்ள முன் வாருங்கள்..

எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத, ஓட்டை ஓடுகள் நிரம்பிய பாழடைந்த கிராமப்புற பள்ளிக்கூடங்களில்தான் வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட்டேயாக வேண்டுமா என்ன?

அடிப்படை வசதிகள் நிறைந்த திருமண மண்டபங்கள், Community Hall போன்றவைகளில் வாக்குப்பதிவு மையங்களை அமைத்தால்தான் என்ன?

மாற்றம் ஒன்றுதானே மாறாதது..

நீங்களும்..உங்கள் சிஸ்டமும் எப்பொழுது மாறப்போகிறீர்கள்..?

No comments:

Post a comment