Labels

rp

Blogging Tips 2017

பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள் தூய்மையாக மாறும்! உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவு

'பள்ளிகளில், கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகங்கள் துப்புரவு பணியாளர்கள் நியமித்து துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும்,' என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், மாணவர்களின் வசதிக்காக கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பல பள்ளிகளில், கழிப்பிடங்கள் போதிய பராமரிப்பின்றி மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

போதுமான வசதிகள் இல்லாமல், துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகிறது. கழிப்பிடங்கள் மட்டும் புதிது புதிதாக கட்டப்பட்டாலும் பராமரிப்பு செய்ய ஆட்கள் இல்லாததால், அவை 'கப்' அடிக்கும் பகுதியாக மாறும் சூழல் உள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் கட்டப்பட்ட கழிப்பிடங்கள், பராமரிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழக முதல்வர் சட்டசபையில், பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசு நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள கழிப்பிடங்களை பராமரிப்பது தொடர்பாக, 110ன் கீழ் அறிக்கை வெளியிட்டார்.
அதில், அனைத்து பள்ளிகளிலும், 100 விழுக்காடு கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு கழிப்பிட வசதிகள் இல்லாத, 2,057 பள்ளிகளுக்கு கழிப்பிட வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.
கழிப்பிடம் கட்டிக்கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி கழிவறைகளை சுத்தமாக பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதல் முறையாக கழிப்பிடங்களை பராமரிப்பிதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார்.
இதன்படி, பள்ளிகளில், கழிப்பிடங்களை பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் கருத்துருக்கு அரசுக்கு அனுப்பினர்.
அதன்படி, பள்ளிக்கல்வி மற்றும் நகர, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் கீழ் உள்ள அனைத்துப்பள்ளிகளில் கழிப்பிடங்கள் உள்ளன. அவற்றின் பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகிறது.
நகர மற்றும் ஊரக உள்ளாட்சி மன்றங்கள், அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து பள்ளிகளில் கழிப்பிடங்களை துப்புரவு செய்ய வேண்டும். இது பொதுவான துப்புரவு முகமை மூலமாகவோ அல்லது அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மூலமாகவோ அல்லது தினக்கூலி பணியாளர்கள் நியமனம் செய்வதன் மூலமாகவோ, பணிகளை அப்பணிக்காக நியமனம் செய்யப்பட்ட நேரங்களில் மேற்கொள்ள வேண்டும்.
துப்புரவுப்பணிகள் செயல்முறை மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையினை அங்குள்ள சூழ்நிலைகேற்ப ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும் முடிவெடுத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கழிப்பிடங்கள் துப்புரவு குறித்து உரிய பள்ளிகள் தலைமையாசிரியர்கள் கலந்தாலோசிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களின் வருகை மற்றும் பணிகளை கண்காணிக்க உரிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.
துப்புரவு பணிக்கு தேவையான உபகரணங்கள், பொருட்கள் அந்ததந்த உள்ளாட்சி அமைப்புகளே அளிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளை நகர்புற உள்ளாட்சி மன்றங்கள் வசூலிக்கும் கல்வி வரியின் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நிதியின் மூலம் நகர, உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும். கல்வி வரி வசூலிக்கப்படாத பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை நிதியிலிருந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment