Labels

rp

Blogging Tips 2017

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன: புதிய சீருடை, புத்தகம் வழங்கப்பட்டது

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் 12–ந்தேதி முதல் தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இடையில் நவம்பர் 19, 20, 21, 23 ஆகிய 4 நாட்கள் மட்டும் பள்ளிகள் இயங்கின.தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1–ந்தேதி பெய்த 100 ஆண்டு வரலாற்று சாதனை மழையால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. ஏராளமான மாணவ–மாணவிகளின் நோட்டு, புத்தகங்கள் வெள்ளத்தில் சேதம் அடைந்தன. இதனால் நேற்று வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டதாலும்,
பல பள்ளி, கல்லூரிகளில் வெள்ள நீர் வடியாததாலும் வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 1 மாதமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த வாரம் முதல் செயல்பட தொடங்கின.ஆனால் கடந்த 10 தினங்களாக மழை இல்லாத போதும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சரி செய்வதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் கடும் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. முதல் கட்டமாக பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் தேங்கி நின்ற மழைநீர் மோட்டார் பம்புக்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.இதையடுத்து வெள்ளம் புகுந்து சேதம் அடைந்த வகுப்பறைகள், கழிவறைகள், ஆய்வகங்கள் சுத்தம் செய்து சீர்ப்படுத்தப்பட்டன. பழுதடைந்திருந்த மின் சாதனங்களும் முன் எச்சரிக்கையாக மாற்றப்பட்டன.பள்ளிகளில் இருந்த ஆவணங்கள், வருகை பதிவேடுகள் மாணவர்களின் சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள் வெள்ளத்தில் சேதமடைந்திருந்தன. அவற்றை வெயிலில் காய வைத்து எடுக்கும் பணியையும் கடந்த வாரம் முழுக்க பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் தொற்றுநோய் பரவி விடக்கூடாது என்பதற்காக பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.சென்னையில் 29 பள்ளிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளிலும் தூய்மைபடுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த பள்ளிகளுக்கு மட்டும் இன்று (திங்கள்) ஒருநாள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகள் அனைத்தும் சுமார் 1 மாதத்துக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன.மாணவ–மாணவிகள் மிகவும் உற்சாகத்துடன் இன்று பள்ளிக்கூடங்களுக்கு புறப்பட்டு வந்தனர். 1 மாதமாக மழை வெள்ளத்தால் வீடுகளில் முடங்கிக்கிடந்த அவர்கள் இன்று தங்கள் வகுப்பு நண்பர்கள், தோழிகளைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இதனால் பள்ளிகளில் காலை நேரத்தில் காணப்படும் வழக்கமான சூழ்நிலையை காண முடிந்தது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கான பாடங்கள் இன்னும் நிறைய நடத்த வேண்டியதுள்ளது. இது எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்–2 மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.இதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மனநல மருத்துவர்கள் மற்றும் தன்னம்பிக்கை தரும் ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க உள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலும் சுமார் 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த 50 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடை வழங்கும் பணியும் தொடங்கியுள்ளது.பள்ளி கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் இது குறித்து கூறியதாவது:–தொடர் மழை காரணமாக மூடப்பட்ட அனைத்து பள்ளிகளும் இன்று செயல்பட தொடங்கியுள்ளன. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாதபடி சுகாதார பணிகள் நடந்து வருகிறது.முதல்–அமைச்சர் உத்தரவுப்படி மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம் இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் ஆகியவை இன்று முதல் வழங்கப்படுகிறது. இதற்காக பிறமாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்தும் புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ள மாணவ, மாணவிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதில் அதிகாரிகள் மிகவும் கவனமாக உள்ளனர். இதற்காக 3 மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டுள்ளதா? குடிநீரில் சரியான அளவு குளோரின் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்களில் கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து மீண்டும் பள்ளிக்கு வந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா, தொற்று நோய் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க 3 மாவட்ட பள்ளிகளிலும் இன்று மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளது. பள்ளி கல்வித்துறையும், பொது சுகாதாரத்துறையும் இணைந்து இந்த பணியை நடத்தி வருகின்றன.இதற்காக 3 மாவட்டங்களிலும் 131 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் இருப்பார்கள்.இவர்கள் பள்ளிகள் தோறும் சென்று மாணவர்களை முழுமையாக பரிசோதனை செய்வார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு அவர்கள் மருந்து, மாத்திரைகள் கொடுப்பார்கள். எல்லா மாணவர்களுக்கும் இந்த மருத்துவ பரிசோதனை நடக்கும் வரை நடமாடும் மருத்துவக் குழுக்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே 3 மாவட்டங்களிலும் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நகல்கள் வழங்கும் பணியும் இன்று தொடங்கியது. இதற்காக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 132 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.இரண்டு வாரம் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி நகல்களை பெறலாம்.

No comments:

Post a Comment