Labels

rp

Blogging Tips 2017

திருக்குறள் திறனாய்வுப் போட்டியில் தேர்வான மாணவர்கள், தமிழறிஞர்களுக்கு தில்லியில் நாளை பாராட்டு விழா

திருக்குறள் திறனாய்வுப் போட்டியில் தேர்வான மாணவர்களுக்கும், தமிழ் மொழி மேன்மைக்குப் பாடுபடுவதற்காக தமிழறிஞர்களுக்கும் தில்லியில் வியாழக்கிழமை (டிசம்பர் 17) பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
 திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர் மன்றங்கள் அமைப்பு சார்பில் நடத்தப்படும் இவ்விழா நாடாளுமன்ற இணைப்புக் கட்டட பிரதான அரங்கில் நடைபெறுகிறது.
 இதுகுறித்து, திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர் மன்றங்கள் அமைப்பின் தேசியத் தலைவரும் உத்தரகண்ட் மாநிலங்களவை பாஜக உறுப்பினருமான தருண் விஜய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 தமிழக கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக திருக்குறளும், அதை இயற்றிய திருவள்ளுவரும் திகழ்கின்றனர்.
 இதைப் போற்றும் வகையில் நடத்தப்பட்ட திருக்குறள் திறனாய்வுப் போட்டியில் தேர்வான 133 மாணவர்களைப் பாராட்டி விருதுகளும், ஐந்து தமிழறிஞர்களுக்கு விருதுகளும் வழங்கும் விழா, நாடாளுமன்ற இணைப்புக் கட்டட பிரதான அரங்கில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இதில், திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கான விருது (பட்ண்ழ்ன்ஸ்ஹப்ப்ன்ஸ்ஹழ் ஙஹள்ள் அஜ்ஹந்ங்ய்ண்ய்ஞ் அஜ்ஹழ்க்) குன்றக்குடி அடிகளாருக்கும், திருவள்ளுவர் பத்திரிகையாசிரியர் விருது தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கும், திருவள்ளுவர் கலை, அறிவியல் கண்ணோட்ட விருது சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி. குரூஸுக்கும் வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் கல்வியாளர் விருது கல்வியாளரும், எழுத்தாளருமான வா. செ. குழந்தைசாமிக்கு வழங்கப்படுகிறது.
 இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
 பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொள்கின்றனர். விருது பெறும் மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் என்றார் தருண் விஜய்.
மாணவர்கள் தேர்வானது எப்படி?: திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியானது இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள் அளவில் நடத்தப்பட்டது.
 இதில், கல்வி நிறுவன அளவில் சிறந்த வகையில் திருக்குறள் ஒப்புவித்த 13 வயது முதல் 29 வயதுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 மாநில முழுவதும் 300 வேறுபட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து சராசரியாக மொத்தம் 50 ஆயிரம் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். பின்னர், மதுரையில் இரண்டாவது கட்டமாக நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் திறனாய்வு, ஒப்புவித்தல் போட்டிகளில் 300 பேர் பங்கேற்றனர். இவர்களில் 133 பேர் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 இப்போட்டியில் பொது மருத்துவம், பொறியியல், சட்டம், பல் மருத்துவம், மருந்தியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள், மெட்ரிக் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளி, ஐசிஎஸ்இ பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள் என பல்வேறு கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
 இறுதிப் போட்டியானது எழுத்து மற்றும் வாய்மொழி முறையில் நடத்தப்பட்டது. அதன்படி, திருக்குறள் திறனாய்வுத் தேர்வு, திருக்குறள் ஒப்புவித்தல் என இரு முறையாகத் தேர்வு நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment