Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ரூ.100 கோடியை விழுங்கிய கல்வி அதிகாரிகள்...! -பள்ளிக் கல்வித் துறை 'மெகா' மோசடி

பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபலமான தனியார் பள்ளி அது. தனது மகன் சுரேந்திரனை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்காகச் சென்றார் விவசாயி தியாகராஜன். பத்தாயிரம் கட்டணம், ட்யூஷன் பீஸ் தனி என பள்ளி நிர்வாகம் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டினார். அவர் கொடுத்த பணத்திற்கு எந்த ரசீதும் கொடுக்கவில்லை. ஒருநாள் கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்று சொல்லி, பள்ளி நிர்வாகம் கையெழுத்து கேட்டபோதுதான் தெரிந்துகொண்டார், தனது மகனைக் கல்வி உரிமைச் சட்டக் (RTE) கணக்கின்கீழ் கொண்டு வந்துவிட்டார்கள் என்று. எவ்வளவோ போராடியும் பலனில்லை.  

இதேபோல், வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் ஒன்று, மாணவர் ஒருவரின் பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அழைத்தது. 'எதற்கோ கூப்பிடுகிறார்கள்' என நம்பிச் சென்ற அவரிடம், ஒரு தாளில் கையெழுத்துப் போடச் சொல்லியுள்ளது நிர்வாகம். எதற்கு என விசாரித்தபோதுதான், கல்வி உரிமைச் சட்டக் கதை வெளியே வந்திருக்கிறது. மாணவரைச் சேர்ப்பதற்காக இருபதாயிரம் ரூபாய் கட்டணத்தை கட்டியிருந்தார் மாணவரின் தந்தை. பெரிய போராட்டத்திற்குப் பிறகே பணத்தைத் திருப்பித் தந்தது பள்ளி நிர்வாகம். இது எங்கோ பொள்ளாச்சியில் நடக்கும் விவகாரம் அல்ல. தமிழகம் முழுவதுமே கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் போடும் தகிடுதத்த ஆட்டம் இது. 
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஆர்.டி.இ எனப்படும் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பம் வேண்டும் என்று கேட்ட ஒரு பெற்றோருக்குக்கூட, விண்ணப்பத்தையே கண்ணில் காட்டுவதில்லை. இந்தச் சட்டம் பற்றிப் பேசும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு சீட் கொடுக்க மறுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால், ஆர்.டி.இ படி 25 சதவீத இடத்தை ஒதுக்கினார்கள் என்று இந்தப் பள்ளிகளுக்கு அரசு ஒதுக்கிய தொகை 97 கோடி ரூபாய். இந்தப் பணம் முழுமையாகச் செலவிடப்பட்டுவிட்டது. இந்த மோசடியின் பின்னணியில் கல்வி அதிகாரிகள் பலர் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர் கல்வியாளர்கள்.

" மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1)(சி)யின் படி நலிவுற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் எனக் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை காலாவதியாக்குவதில் கல்வி அதிகாரிகள் தெளிவாக இருக்கிறார்கள். இதனால் ஒரு மாணவருக்குக்கூட இதன் பலன் சென்று சேரவில்லை" எனவும் கொந்தளிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் ஒருவர், " சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2011 முதல் சட்டம் செயல்பட்டாலும், 2013-ம் ஆண்டு முதல் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால் இதன்பேரில் ஒரு இடம்கூட நிரப்பப்படுவதில்லை என ஒரு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளி இயக்குநர் பிச்சை பேசினார். அந்தளவுக்குத்தான் ஆர்.டி.இ செயல்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி தருவதில்லை என்று சொல்லித்தான் இவ்வளவு நாட்கள் காலம் கடத்தினார்கள். இதிலும், கொள்ளை அடிக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டு, மாநில அரசே, அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வோம் எனச் சொல்லி, 97 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள். இந்தப் பணத்தை கல்வி அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்குக் கொடுத்துவிட்டார்கள். மாணவர்களைப் போலியாகக் கணக்குக் காட்டி பள்ளி நிர்வாகமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கின்றன. 

'இத்திட்டத்தில் மோசடி செய்கிறார்கள்' என தொடர்ச்சியாக புகார் எழுந்ததும், ஆர்.டி.இ திட்டத்திற்காக தனியாக குழு ஒன்றையும் அமைத்தார்கள். இந்தக் குழு பள்ளியில் விசிட் செய்யும்போதெல்லாம், பெற்றோரை கூட்டி வந்து கணக்குக் காட்டுகிறார்கள். எதிர்ப்பு காட்டும் பெற்றோரிடம், மாணவரின் எதிர்காலத்தைச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதற்கும் மேல் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் என எங்கு புகாரை தூக்கிச் சென்றாலும், கண்டுகொள்வதில்லை. சிங்காரவேலு கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாகத்தான் வாங்குகிறார்கள். ஆர்.டி.இ படி ஒரு மாணவருக்கு 9,900 ரூபாய் கட்டணத்தை அரசு வழங்குகிறது. முப்பதாயிரம் கட்டணம் வாங்கும் பள்ளிக்கு இதனால் இருபதாயிரம் இழப்பு ஏற்படுகிறது. சீட் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி வரும்போது, பள்ளி நிர்வாகம் சொல்லும் இடங்களில் பெற்றோர் கையெழுத்து போடுகிறார்கள். ஆர்.டி.இ கமிட்டி ஆய்வுக்கு வரும்போதுதான் எதற்காக கையெழுத்து வாங்கினார்கள் என்ற விவரமே தெரிய வருகிறது. நூதனமான முறையில் நடக்கும் இந்த மோசடிகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. காரணம். இந்த மோசடியில் பெரும் பங்கு அவர்களுக்குப் போகிறது என்பதுதான்" என அதிர வைத்தார் அவர்.

ஆறு ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பொறுப்பில் இருக்கிறார் சபீதா ஐ.ஏ.எஸ். நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவதில் முதல் இடத்தில் இருக்கும் சபீதா, மக்கள் மன்றத்தை அவமதிக்கும் செயல்களுக்கு மன்னிப்பு கேட்பாரா என்ன? 

-ஆ.விஜயானந்த்
 source

No comments:

Post a Comment