Labels

rp

Blogging Tips 2017

மக்களவையில் நிறைவேறியது ஆதார் மசோதா

‘ஆதார் மசோதா – 2016’ மக்களவையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இம்மசோதாவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.


இது தொடர்பாக பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பி.மஹதாப் பேசும்போது, “இந்த மசோதா தற்போதைய வடிவில் சட்டமானால் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே இம் மசோதாவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். கார்கே கூறும்போது, “ஆதார் மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளன” என்றார்.

இதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்கும்போது, “ஆதார் மசோதாவுக்கு முந்தைய அரசு கடந்த 2010 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் ஆதார் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மசோதா முந்தைய ஆட்சியில் நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் விரிவான ஆலோசனைகளும் பெறப்பட்டது. இவை அனைத்தையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டது.

அரசு மானியத்தை முறைப்படுத்தவும் உண்மையான பயனாளிகளை அடையாளம் காணவும் இந்த மசோதா உதவும். இதன் மூலம் மானியச் செலவு குறையும். சமையல் எரிவாயு நுகர்வோருக்கு ஆதார் எண் மூலம் மானியம் வழங்குவதன் மூலம் மத்திய அரசு ரூ. 15 ஆயிரம் கோடி சேமித்துள்ளது.

ஆதார் எண் அடிப்படையில் 4 மாநிலங்கள் பொது விநியோகத் திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளன. இதன் மூலம் ரூ. 2,300 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளனர்.

விரல்ரேகை பதிவு உள்ளிட்ட ஆதார் விவரங்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டோம்.

இந்த மசோதாவின் காப்புரிமை தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸ் விரும்பினால் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால் மசோதா நிறைவேறுவதை தாமப்படுத்தக் கூடாது.

முந்தைய அரசின் மசோதாவை விட தற்போது மசோதா மாறுபட்டது. பயனாளிகளுக்காக பணத்தை எதன் அடிப்படையில் செலவிடுவது என்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். இதை வெறும் அடையாள ஆவணமாக நாங்கள் கருதவில்லை எனவே இதை நிதி மதோதாவாக தாக்கல் செய்தோம்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். இதுபோல் 67 சதவீத மைனர்கள் ஆதார் பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் 5 முதல் 7 லட்சம் பேர் ஆதார் எண் பெறுகின்றனர்” என்றார்.

இதையடுத்து மக்களவையில் ஆதார் மசோதா நிறைவேறியது.

No comments:

Post a Comment