Labels

rp

Blogging Tips 2017

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை அதிகரிக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளை கூடுதலாக தொடங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தைகளின் ஆரம்பகால கல்வி செயல்வழியிலேயே நடைபெற வேண்டுமென்பது பல காலமாக கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகளின் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படை கோட்பாடாகும். 


இதனை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை செயல்வழிக்கற்றல் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. 2009ம் ஆண்டு செயல்வழிக்கற்றல் என்ற பாடத்திட்டத்தை எளிமையான செயல்வழிக் கற்றல் என்று மாற்றப்பட்டது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக் கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முதலில் 10 பள்ளிகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. ஆங்கில செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரித்தன.

வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வி தொடக்கப்பள்ளியில் 245 பள்ளிகள் உள்ளன. ஆனால் மொத்தம் 2137 பள்ளிகளில் 245 பள்ளிகளில் மட்டுமே உள்ளன. அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக்கற்றலை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. மேலும், 50 உயர்நிலைப்பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழி கல்வி முறை கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் செயல்வழிக் கற்றல் முறையில் ஒவ்வொரு முறையில் குழந்தையும் தன்னுடைய வேகத்தில் பயிலவேண்டும் என்பது நியதி. ஏனென்றால் கற்றல் என்பது எல்லோருக்கும் சமச்சீராக அமையும் என்று கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் உடலாலும், மனதாலும், அறிவாலும், சமுதாய நோக்கிலும் தனிப்பட்டவர்கள். இதில் கற்றல் அட்டை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். 

கற்றல் ஏணியும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் புரிதல் எங்கு இருக்கிறது என்பதை தெரிவிப்பதற்கும், ஒவ்வொரு குழந்தையும் புரிதலோடு படிக்கவும், அவர்களுடைய வேகத்தில் படிக்கவும்,  எதை கற்றல் வழிகளில் சேர்த்தால் அவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டதாக அமையவேண்டும் என்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2014-2015 கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 750 பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் மற்ற பள்ளிகளில்  ஆங்கில வழி கற்றல் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. வேலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில வழி நர்சரி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் நடுத்தர குடும்பங்களில் குழந்தைகள், தொழிலாளர்களின் குழந்தைகளை 5ம் வகுப்பு வரை படிக்க வைத்தாலும், நிதி நெருக்கடி காரணமாக 6ம் வகுப்புக்கு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளையே நாடுகின்றனர்.

மேலும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை விட்டுவிட்டு அரசு பள்ளிகளை நாடுவதற்கு சமச்சீர் கல்வித்திட்டமும், பொருளாதார சூழலும் முக்கிய காரணம். 
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் வசூலிக்கும் மிக அதிகப்படியாக கட்டணக் கொள்ளையால் தொடர்ந்து குழந்தைகளை அப்பள்ளிகளில் படிக்க வைக்க முடியாத பெற்றோர்கள், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். எனவே  மாவட்ட கல்வித்துறை முன்கூட்டியே திட்ட மிட்டு அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை கூடுதலாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment