Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது...சாதனையா, வேதனையா? வெள்ளத்தில் தொலைந்த குடிசைகளால் மாறியது வாழ்க்கை!

வெள்ளத்தின் போது, அடையாறு, கூவம் ஆற்றையொட்டிய பகுதிகளில் இருந்த குடிசைகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டதால், சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தை தொழிலாளர் மீட்பு குழு ஆகியவை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில், கண்டறியப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மாநகராட்சி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்
சேர்க்கை நடைபெறும்.

கணக்கெடுப்பு
குடும்பச்சூழலுக்கு ஏற்ப, பெற்றோர் சம்மதத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும், உண்டு, உறைவிட பள்ளிகளிலும் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் இதுவரை 1,821 பேர், பள்ளி செல்லா குழந்தைகளாக கண்டறியப்பட்டு உள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் 1,141 குழந்தைகளை கண்டறிந்தது. குழந்தை தொழிலாளர் மீட்பு குழு, 450 குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 957 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதே போல, கடந்த ஆண்டு 2,350 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டில், அது 1,821 ஆகக் குறைந்துள்ளது. இதற்கு, சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளமே காரணம்.

பெரும்பாலும் அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டி வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள், அதை ஒட்டிய குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள் தான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வெள்ளத்தில், இவர்களின் குடிசைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

அங்கிருந்த குடும்பங்கள், புறநகர் பகுதிகளுக்கு, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மறு குடியமர்வு செய்யப்பட்டன. இதன் காரணமாக, மாநகரில், குடிசைப் பகுதிகளும் படிப்படியாக, குறைக்கப்பட்டு வருகின்றன. பள்ளி செல்லா குழந்தைகளும், குழந்தை தொழிலாளர்களும் குறைவதற்கு இது முக்கியக் காரணம்.

வெளிமாநில குழந்தைகள்
விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் தற்போது நடந்த கணக்கெடுப்பில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 263 பேரும், தி.நகரில் குறைந்தபட்சமாக 62 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். ஆந்திரா, ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களின் குழந்தைகளே, பள்ளி செல்லாதவர்களாக உள்ளதும், கணக்கெடுப்பின் போது
தெரியவந்து உள்ளது.

கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் வசம் உள்ள 60 பயிற்சி மையங்கள் மூலம், சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளனர். இதுவரை, ஐந்து உண்டு, உறைவிட பள்ளிகளிலும் 150 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி செல்லா குழந்தைகள் படிப்படியாக குறைந்து வருவதற்கு, பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு முக்கியக் காரணம். சென்னையில் குடிசை பகுதிகள் முழுவதுமாக குறைந்து விட்டால், பள்ளி செல்லா குழந்தைகளே இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம், இந்த விஷயத்தில் தீவிரமாக கண்காணித்து வருகிறது' என்றார்.

அரசின் கடமை
மாநகரில் குடிசைகள் இருக்கக் கூடாது என்று அரசு நினைப்பது நல்ல விஷயமே. ஆனால், குடிசைகள் குறைந்ததால், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறைந்துள்ளனர் என்பது, சாதனையாக சொல்லிக் கொள்ளும் விஷயமில்லை. புதிய குடிசை ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்க விடாமலும், மறுகுடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பது, அரசின் தார்மீகக் கடமை.

No comments:

Post a Comment