Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

கட்டண நிர்ணயம் எப்போது? தலைவர் பதவி காலியாக இருப்பதால் தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை by PALANIVANJI

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் பதவி கடந்த 5 மாதங்களாக காலியாக உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தனியார் பள்ளிகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. இதனால் பெற்றோர்கள் மத்தியில் கட்டணங்களை தீர்மானிக்கும் கட்டண நிர்ணயக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் அராஜகத்திற்கு எவ்வித அளவுகோலும் இல்லை என்ற அளவிற்கு அரசின் விதிகளை மீறி செயல்படுவது தீவிரமடைந்துள்ளது. கட்டணம் என்ற பெயரில் தங்கள் இஷ்டத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்து பகல்கொள்ளையை நடத்தி வருகின்றனர். மாணவர் மற்றும் பெற்றோர்களின் புலம்பல்களுக்கு செவி சாய்க்க அரசு மறுத்து வருகின்றது.
இதுவே தனியார் பள்ளிகள் அராஜகத்தின் உச்சத்திற்கு செல்ல வழிவகுத்தது என்றால் அது மிகையல்ல. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் போடுவது யார்? என்று பெற்றோர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென பெற்றோர்களும் மாணவர் அமைப்புகளும் நடத்திய போராட்டம்தான் கடந்த 2009இல் தமிழக சட்டமன்றத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த சட்டம் கொண்டு வர நிர்ப்பந்தித்தது. சட்டமும் கொண்டு வரப்பட்டது.
அதன் அடிப்படையில் தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு உருவாக்கப்பட்டது. நீதிபதி கோவிந்தராஜ் அக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு அக்குழுவின் தலைவராக நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். 2011 முதல் கட்டண நிர்ணயக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு நியமிக்கப்பட்டார். 2013-2014, 2014-15, 2015-16ஆம் கல்வியாண்டுக்கான கல்விகட்டணங்கள் பள்ளிகள் வாரியாக தீர்மானிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணங்களை தனியார் பள்ளிகள் மீறி வசூலிக்க முடியாது. அப்படி வசூலிக்கும் பள்ளிகள் மீது இக்குழு நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கப்பட்டது. இது முழுமையாக பயனளிக்கவில்லை என்றாலும் தங்கள் பள்ளியின் கட்டணத்தை இணையதளம் வாயிலாகவும் தகவல் பலகையின் வாயிலாகவும் பெற்றோரும் மாணவர்களும் தெரிந்து கொண்டனர். தீர்மானிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கட்டமறுத்தனர். மீறி வசூலிக்கப்பட்டால் பெற்றோர்கள் இணைந்து கேள்வி கேட்டனர். போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளி நிர்வாகங்கள் தீர்மானிக்கப்பட்ட கட்டணங்களை விட பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டன. இந்நிலையில், தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியனின் பதவிக்காலம் கடந்த 2015 டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்துவிட்டது. உடனடியாக குழுவின் புதிய தலைவரை அரசு நியமிக்க வேண்டும். ஆனால் 5 மாதகாலமாகியும் இதுவரை நியமிக்கப்படவில்லை. கட்டண நிர்ணயக் குழுவிற்கென தனி அலுவலகம் சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இயங்கி வந்தது. தற்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து போதுமான ஆதாரங்களுடன் புகார் அளிக்க இந்த அலுவலகம் இருந்ததால் வழியிருந்தது.
நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ, psfdcdpi@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கப்பட்டது. 004-28251688 என்ற தொலைபேசி எண்ணையும் கூட தொடர்பு கொண்டு புகார் அளிக்கப்பட்டது.
தற்போது இதுபோன்ற எந்த முயற்சியையும் செய்திட பெற்றோருக்கு வழியில்லை. இத்தகைய சூழலை உணர்ந்து கொண்ட தமிழகத்திலுள்ள 12,000த்திற்கும் மேற்பட்ட தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மெகாகொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. கல்வியாண்டு துவக்கம் என்பதால் மாணவர்சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான கல்விக் கட்டணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே கமிட்டி கட்டணத்தை தீர்மானிக்கும். ஏற்கெனவே 2013-14, 2014-15, 2015-16ஆம் கல்வியாண்டுகளுக்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 2016-17ஆம் கல்வியாண்டிற்கு கட்டணம் இதுவரை தீர்மானிக்கப்படாததால் தங்கள் இஷ்டம் போல் எவ்வித ரசீதும் இல்லாமல் மழலையர் வகுப்பிற்கே பிரபலமான தனியார் பள்ளிகளில் குறைந்த கட்டணம் ரூ. 50,000 முதல் ரூ.80,000 வரை வசூலிக்கப்படுகிறது. சில மெட்ரிக் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ. 1,00,000 வரை வசூலிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் புலம்புகின்றனர்.
மேலும் இப்பள்ளிகள் மாணவர் சேர்க்கையில் கல்வி உரிமைச்சட்டப்படி ஏழை, எளியகுழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டையும் உறுதி செய்ய மறுக்கின்றன. பெருபாலான பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. மாநில அரசும் கல்வித்துறையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரியவில்லை. தமிழக முதல்வர் இதுகுறித்து கவனிப்பாரா என பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
nanri:theekkathir

No comments:

Post a Comment