Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதிய கல்விக்கொள்கையின் பாதிப்பு என்ன

எங்கே எனக்கான கல்விக் கொள்கை?
முப்பது ஆண்டுகளுக்கு முன் 1986ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் கல்வி துறையை மனிதவள மேம்பாடுத் துறை என்று மாற்றியமைத்தது. இந்த 30 ஆண்டுகாலத்தில் கல்வித்துறை எத்தனையோ மாற்றங்களையும் பரிமாணங்களையும் அடைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு இந்திய உலகமாயமாக்கலில் இணைந்த பிறகு
தற்போதுள்ள பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான நடுவணரசு ஒர் புதிய கல்வி கொள்கையினை வரையறுத்துள்ளது.
இதற்கு முதற்கட்டமாக முன்னாள் அமைச்சகச் செயலாளர் T.S.R. சுப்பரமணியன் தலைமையில் ஒய்வு பெற்ற 4 IAS அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை நிறுவி அறிக்கை ஒன்றை 230 பக்க அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. கல்வித்துறைக்கு பொருத்தமில்லாத இந்த குழு எவ்வகையான கல்விக் கொள்கையை வகுக்கும் என்ற கேள்வி ஒருபுறமிருக்க அவ்வறிக்கையை வெளியிடமால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் “தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்”(Some inputs for draftnational education policy 2016) என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை ஜீன் 30 2016ஆம் தேதி வெளியிட்டு ஒரு மாத காலத்தில் அதாவது வருகிற ஜீலை 31 2016க்குள் இந்திய குடிமக்கள் யாவரும் அதன் மீது கருத்து தெரிவிக்கலாம் என வெளியிட்டது. ஆனால் இந்த ஆவணம் பெரும்பான்மையான மக்களுக்கு பரிச்சியமற்ற மொழியான ஆங்கிலத்தில் இருந்தது அதனால் இந்திய மக்கள் பார்வைக்கு இந்த ஆவணம் பரவலாக்கவில்லை இதனால் கல்வி கொள்கை குறித்து இன்னும் இந்திய மக்கள் விழிப்படையா நிலையிலேயே உள்ளனர்.
அந்த 43 பக்க ஆவணத்தின் முன்னுரையில் இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த கல்வி முறை குருகுல கல்வி முறை என்று ஆரம்பிக்கிறது. தேனுறும் வார்த்தைகளால் நம்மை புல்லரிக்க வைத்து முன்னோக்கு,செயலாக்கம்,இலக்கு,குறிக்கோள்(Vision,mission,goals and objectives)) ஆகியவற்றில் எழிச்சியுறும் உலகமயமாதலில் வெற்றிப் பெற நம் கல்வியை தொலைநோக்கு பார்வையுடன் உலகளாவிய பரந்த சிந்தனையுடன் பரவலாக்கவேண்டும் என்று அறைகூவலிட்டு அடுத்த கொள்கை முன்மொழிவுகளில் (Policy framework) மட்டும் தன் குறுகிய பார்வையில் இந்திய கல்வியை மதிப்பீட்டு கல்விக் கொள்கைகான வரைவை அளித்துள்ளது நடுவணரசு.
உலகிலுள்ள இளைஞர் பட்டாளத்தில் 40% இளைஞர்களை கொண்டுள்ள நாடு இந்தியா. இத்தகைய இளைய சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான தொழிநுட்ப கூலிகளாகவும், தொழிலாள கூலிகளாகவும் மாற்ற முயற்சிக்கும் இந்த கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளை முழுமையாக ஆராய்ந்து இதன் சாதக,பாதகங்களை களையவேண்டிய கடமை நாம் அனைவருக்கும் உண்டு.
ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் கணீப்பிடு முறைகள் மற்றும் கண்காணிப்பு வழிகள் வரவேற்கத்தக்க விதமாகவும் ஆசிரிய பயிற்சி கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சி பல்கலைகழகம் என்பது காலத்தின் அவசியமும் கூட மாறிவரும் கணிணி யுகத்துக்குள் மாணவர்களையும் கல்வித்துறையும் அறிவியல் வளர்ச்சி என்னும் வகையில் ஆதரித்தாலும் அதன் பாதிப்பு கூறுகள் பின்னாளிலேயே வெளிப்படும். பழங்குடி மாணவர்கள் கற்றல் சிரமத்தை குறைக்க பன்மொழி கற்பித்தல் என்பது மலை கிராமங்கள் ஆசிரியர்கள் செல்ல சிரமப்படும் கிராமங்களில் உள்ளூர் ஆசிரியர்களை பணியமர்த்துதல் போன்ற திட்டங்கள் கட்டாயத் தேவைகளாகவே உள்ளது. இவைகள் மட்டுமே நம் கண்களுக்கு நல்லவையாகப் படுகிறது புதிய கல்விக் கொள்கையில் தேன் தடவிய வார்த்தைகளை கொண்டு 21 தலைப்புகளில் 143 கொள்கைகளை ஒரு வலைப்பின்னல் முறையில் வடிவமைத்து ஒரு கொள்கையினை சரி என்று கருதும் போது அதன் ஆபத்து பின்னால் உள்ள ஒரு கொள்கை நம்பிம்பத்தை முற்றிலும் தவுடுபொடியாக்கிவிடுகிறது. அனைத்து கொள்கையை முழுமையாக உணர்ந்து ஒன்றுடன் ஒன்றை தொடர்புபடுத்தி பார்த்தால் ஒழிய புதிய கல்வி கொள்கை உள்ளீடுகளை விளங்கி கொள்வது சிரமம்.மேலோட்டமாக பார்த்தால் திறன்மேம்பாடு(Skill Development), Digital india, Make in India என்ற மோடியின் விளம்பர சொற்களை அரசு உண்மையில் இந்தியா மறூருவாக்கம் செய்யபோகிறதே என்ற மாயையே நம்மிடம் உருவாக்கும். வரபோகும் ஆபத்து தான் என்ன?
எழுத்தறிவின்மையை போக்க 1964-66யில் கோத்தாரி கல்வி குழு 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து எட்டாண்டு கால தொடக்கக்கல்வியை அனைவரும் பெற அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. பள்ளி வசதிகளை பரவலாக ஏற்படுத்துதல்,பள்ளிகளில் சேர்ந்த அனைவரையும் இருத்தி வைத்தல், முழுமையான மாணவர் சேர்க்கை,பள்ளிகல்வியை விட்டு இடைநின்றவர்களுக்கு பகுதி நேர பள்ளி, அறிவொளி இயக்கம் போன்ற முறைசார கல்வி முறைகளை கொண்டு வந்து அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நாடு அடைய பல வழிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முக்கியமான முதன்மையான ஒர் காரணி இதுவே இடைநிற்றலை குறைக்க பெரிதும் உதவியது 6 முதல் 14 வயதுடையோருக்கு இடைநில்லா கட்டாயக் கல்வி(No-Dedention).
ஆனால் இன்றைய நடுவணரசு வடிவமைத்துள்ள கல்விக் கொள்கை இதுநாள் வரையடைந்துள்ள் கற்றறிந்தோர் விழுக்காட்டையும் காவு வாங்கி விடுமோ என்ற பயம் எழுகிறது. தற்போது உள்ள 8 ஆம் வகுப்புவரையுள்ள இடைநில்லா கல்வியை 5 ஆம் வகுப்பு வரை குறைத்து கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு மாற்றுக் கல்வியாக தொழில் கல்வி வழங்கப்படும் என்கிறது. அதுமட்டுமின்றி ஊர்ப்புற மாணவர்களுக்கு முறையான பள்ளி நேரத்திற்க்கு பின் தொழில் அடிப்படையான படிப்புகள் தேசிய தொழில் வளர்ச்சி மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு ஊர்ப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பதும்,
அறிவியல்,கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விழுக்காடு பெரிதும் குறைவதோடு மாணவர்களின் மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் 10 ஆம் வகுப்பை A,B என இரு பிரிவுகளாக பிரித்து A பிரிவில் மேற்சொன்ன மூன்று பாடங்கள் அடங்கிய முதல் நிலையாகவும் B பிரிவில் அவர்களுக்கு விருப்பமான தொழில் பாடங்கள் அடங்கிய தாழ்நிலையாகவும் மாற்றியமைக்கப்படும் என்று உலகில் இடைநிலை கல்வி எங்குமில்லாத ஒர் புதுமையை திறன்மேம்பாடு என்ற பெயரில் இந்த கல்விக் கொள்கை புகுத்த முயல்வதனால் நமக்கு புரியவைப்பது யாதெனில் “ நவின குலக்கல்வி முறை” எவ்வளவு அழகாக நம்மிடம் நடுவணரசின் உண்மை முகவெளிப்படுகிறது என்பது நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.ஏற்கனவே இவர்கள் கல்வியில் பிந்தங்கிய மாணவர்கள் என்று குறிப்பிடுவோர் ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடி சமுகத்தை சேர்ந்தவர்களே இத்தனை ஆண்டுகாலமாக முன்னேற முயற்சித்துக் கொண்டு இருக்கும் முதல் தலைமுறையாக கல்வியின் வாசத்தை நுகரும் அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே கூட்டிசெல்லவா கல்வி கொள்கை?, தேர்ச்சி விகிதம் குறைவு எனில் அதன் காரணகாரணிகளை கண்டறிந்து களைவதை விட்டுவிட்டு உனக்கு படிப்பு வரவில்லையா உன் தொழில் திறனை வளர்த்துக் கொள் என்று சொல்வது என்னவிதத்தில் நியாயம். இந்தியாவில் 12+(3or4) என ஏறக்குறைய 16 ஆண்டுகாலம் கல்விப் படிப்பை முடித்து வரும் ஒரு மாணவனால் கூட தான் என்ன வேலைக்கு போகவேண்டும் என்பதை தன்னிச்சையாக தேர்ந்தேடுக்கும் தகுதியில்லாத நிலையில் 14 வயதில் ஒரு குழந்தை எவ்வாறு தன் தொழிலை தேர்ந்தேடுக்கும்.
இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் என 22 மொழிகள் இருக்கும் போது இவற்றிக்கு எல்லாம் அளிக்கப்படாத முக்கியத்துவம் சமஸ்கிரத்திற்க்கு மட்டும் அளிப்பதன் நோக்கமென்ன தாய் மொழி கல்வி என்பது கூட மாநில அரசு விரும்பினால் என்று குறிப்பிடும் மத்திய அரசு ஏன் சமஸ்கிரகத்தை மட்டும் பள்ளி மட்டுமல்லாமல் பல்கலைகழகம் வரை கற்பதற்க்கு மிகவும் தாராளமான வசதிகள் வழங்கப்படும் என்பதன் நோக்கமென்ன? இந்தி,சமஸ்கிரத மொழிகள் கொண்டு இந்திய மொழிகளை ஒடுக்க முயற்சிக்கும் மற்ற மொழிகளின் பண்பாட்டுக் கூறுகளை அழிக்க வழிவகுப்பது கண்டனத்துக்குரியது.
மத,மொழி சிறுபான்மை நிறுவனங்களுக்குக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குறிக்கப்பட்ட எதிர்கோள்கள் பொருளாதாரத்தில் பிந்தங்கிய பிரிவினருக்கான தேசிய பொறுப்பைக் கருதி மீண்டும் சரிபடுத்தப்படும் என்பதில் சமுதாய,பொருளாதர நிலையில் பிந்தங்கிய என்று பொருளாதார நிலையையும் இணைத்து இடஒதுக்கீட்டில் சிறுபாண்மை சமுகத்தின் வாய்ப்பை பறிக்க முயல்வதாக தோன்றுகிறது. மிகு திறன்மிக்க மாணவர்களுக்கு உதவிதொகை என்பது கல்வியில் பிந்தங்கிய மாணவர்களின் உரிமையை எவ்வாறு ஊக்கிவிக்கும் அவர்களுக்கும் எவ்வாறு வாய்ப்பளிக்கும் என்பதும் கேள்விக்குறியே.
குறைந்த மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறைந்துள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு மேம்படுத்துவதை தவிர்த்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் ஒருகிணைந்த பள்ளிகளாக செயல்படும் என்பது ”அருகாமை பள்ளி” என்ற கொள்கையை புதைத்துவிட்டு தொடக்கநிலை பள்ளி கதவுகளை கல்வி பெற வாய்ப்பற்றோருக்கு மூடும் விதமாகவே உள்ளது.
புதிதாக உயர்கல்வி நிறுவனங்களை(University) இனி அரசு திறக்காது, இதுவரை உள்ள பல்கலைகழகங்களை மட்டும் விரிவுபடுத்த முயலும். அதுமட்டுமின்றி அந்நிய நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கும் 200 கல்லூரிகளுக்காக இந்திய நாட்டின் கதவுகள் திறந்திருக்கிறது. அந்நாட்டின் மாணவர்களின் தேவைகளை இந்திய அரசு முழுமையாக பூர்த்தி செய்யும் தேவையெனில் அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு சட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என இந்திய நாட்டு மக்களின் நலனுக்காக வளையாத அரசின் முதுகெலும்பு அந்திய நாட்டு பல்கலைகழகங்களுக்காக வளைந்து கும்பிடு போடுவது ஏனோ?
அறிவியல்,கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்ட என்னும் போதே அத்துடன் சமுக அறிவியலையும் இணைப்பதனால் நடுவணரசு நிறுவ முயற்சிப்பது என்ன? மாநிலங்களின் வரலாறு எங்கு எவ்வாறு எவ்விதிகளுக்குட்பட்டு எழுதப்படும். கல்வியில் ஏற்றதாழ்வுகளை களைந்து சமத்துவத்தை நிலைநாட்டுவோ`ம் என்று கல்வி நிலையங்களில் உள்ள வெவ்வெறுவகையான அடுக்குகளை களையாமல் கேந்திர வித்யாலயாக்கள்,நேரு நவோதய வித்யாலயாக்கள் மற்றும் கஸ்தூரிபாய் காந்தி பலிகா வித்யாலயாக்கள் போன்ற கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவலாக விரிவுபடுத்தப் படும் என்பது ஏன்?
1966 ஆம் ஆண்டு கோத்தாரி குழுவால் பரிந்துரைக்கபட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 6 விழுக்காடு என்ற நிலையே நிலுவையில் உள்ள போது அதே இலக்கை கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பின்பும் அதே இலக்கை அரசு அடைய நடவடிக்கை எடுக்கும் என்பது எவ்விதத்தில் நியாயம் இன்றைய நிலைக்கு குறைந்தபட்சம் 10 விழுக்காடாவது வேண்டுமே, அரசுக்கு கல்வியால் மிகுந்த முதலீடு தேவைப்படுவதால் புதிய நிறுவனங்கள் தடுக்கப்படும் எனினும் அரசு முயற்சிகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் தனியார்கள், வள்ளன்மை மிக்கோர், பெரு வணிக நிறுவனத்தினர் என ஆனைவரும் கல்வி வளர்ச்சிப் பொறுப்புகளில் ஊக்குவிக்கப்படும். கல்விக்கான உட்கட்டமைப்பு செலவுகளுக்கு வரிசலுகை அளிப்பதன் மூலம் முதன்மையான செயல்பாடுகளுக்கு அரசின் நிதி ஒதுக்க தொடரும்.மற்ற செயல்பாடுகள் தனியார் மூலதன வாயிலாகவும் கல்வியை தர உயர்த்த அன்னிய நேரடி முதலீட்டை கல்வித்துறையில் அணுமதிக்கப்படும் என்பதன் மூலம் நிகர வாய்ப்புள்ள எல்லோருக்கும் கல்வியை உறுதி செய்வதை தவிர்த்து நுகர் வாய்ப்புள்ள மக்களுக்கே கல்வி என்று கல்வியை உலகச் சத்தையில் கூவி விற்க்கவே இந்த கல்விக் கொள்கையா?
“கல்வி என்பது மிகவும் பயங்கரமான ஆயுதம், உன்னால் முடிந்தால் அதை கொண்டு உலகை மாற்று “ என்று நெல்சன் மண்டேல சொல்வதை ஆட்சியாளர்கள் சரியாக புரிந்து வைத்துள்ளார்கள். அதனால் தான் அந்த மிக பயங்கரமான ஆயுதத்தை அவர்களுக்கு தேவையான விதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அன்று ஆங்கிலேயே ஆட்சியில் இந்தியாவில் அதிக அளவில் கணக்கர்கள் தேவைப்பட்டார்கள் அவர்களுக்கு தேவையான விதத்தில் மெக்கலே கல்வியை வடிவமைத்தார் இன்றைய தேவையான பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப கூலிகளும் உற்பத்தி தொழிலாளர்கள் தேவைக்காக திறன்மேம்பாடு என்ற போர்வையில் ஒட்டுமொத்த இந்திய மக்களை கூலி பட்டளமாக்கும் முயற்சியாகவே படுகிறது இந்த புதிய கல்வி கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்…
#aware_new_education_policy_2016

No comments:

Post a Comment