Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தனியார் பள்ளி கட்டணக்குழு தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழ்நாடு தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை நியமிக்க நடவடிக்கை கோரி, தினமலர் நாளிதழ் செய்தியை ஆதாரமாகக் கொண்டு தாக்கலான வழக்கில், அரசு மேற்கொண்ட நடவடிக்கை பற்றி தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஆண்டாள்புரம் கார்த்தி தாக்கல் செய்த மனு:


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. சென்னையில் அதன் அலுவலகம் ஆறு மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது என, தினமலர் நாளிதழில் ஜூன் 17 ல் செய்தி வெளியானது.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் ரவிராஜபாண்டியன் 2012 வரையும், சிங்காரவேலு 2015 வரையும் தலைவராக பதவி வகித்தனர்; பின் யாரையும் நியமிக்கவில்லை. தமிழகத்தில் 12 ஆயிரம் மெட்ரிக், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளன.

கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக இருப்பதால், 2016-17 க்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கின்றன; பெற்றோர், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தலைவர் நியமிக்கப்பட்டால்தான் தகுந்த முடிவெடுக்க முடியும். தலைவரை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு விசாரித்தது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்:

தலைவரை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உயர்நீதிமன்ற ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள்: தலைவர் இல்லாததால் கட்டண நிர்ணயக்குழுவின் கூட்டத்தை கூட்ட முடியவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுவாக கூறுகிறீர்கள். எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெளிவு படுத்தினால்தான், அதற்கேற்ப இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலும். வழக்கு செப்.,12 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment