அரசு பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி (7), கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை 25-இல் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் ஓட்டை வழியே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும் பள்ளிப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, தமிழக அரசு சிறப்பு விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
பின்னர், ஒவ்வொரு பள்ளிப் பேருந்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் குழந்தைகளை ஏற்றக்கூடாது, ஓட்டுநர் பகுதியை தனியாக பிரிக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்பன, உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் சிறப்பு விதிகளை வகுத்தது.
இந்த நிபந்தனைகள் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்றும், அவற்றை ரத்து செய்யக்கோரியும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலை பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், அரசு பேருந்துகளில் காலை, மாலை நேரங்களில் பயணிக்கும் பயணிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மாணவர்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுப் பேருந்துகளுக்கு எந்த ஒரு நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்றார். பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
அரசுப் பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே, அரசுப்பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அதேநேரம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனியார் பள்ளி வாகனங்களை சிறப்பு அரசு அதிகாரி முன்பாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை, நாங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கிறோம்.
ஆனால், இது தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு விதித்த வேறு எந்த நிபந்தனைகளையும் தளர்த்த முடியாது என, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a comment