Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தொடர் முயற்சிக்கு வெற்றி

2017 நாமக்கல் மாவட்டப் பணி நிரவல் கலந்தாய்வின் போது பரமத்தி ஒன்றியத்தில் பணியாற்றிய அம்சவேணி என்ற பெண் விதவை ஆசிரியர் பணிநிரவலில் விதவைக்கான முன்னுரிமை மறுக்கப்பட்டு அவர் கொல்லிமலைக்கு மாற்றப்பட்டார். கலந்தாய்வு கூடத்தில் அப்பெண்ணின் அபயக்குரல் நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் எவர் காதிலும் விழவில்லை. 

அப்பெண்ணிற்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ள அரசாணை-270/2012 (பணி நிரவலுக்கானது) அரசாணையைப் படித்துக் கூட அதில் உள்ள பொருளைப் புரிந்து கொள்ளவோ நியாயமாக அந்த ஆசிரியருக்கு உண்டான முன்னுரிமை வழங்கவோ மறுத்துவிட்டார் மா.தொ.க.அ. அப்பெண்ஆசிரியர் வேறு அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் அங்கு சென்று நியாயம் கேட்டோம். அரசாணையைப் புரிந்து கொள்ளமுடியாதது போல் நடித்தார் அந்த மதிப்பிற்குரிய மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி. உரிய முன்னுரிமை அளித்து பணிநிரவல் கலந்தாய்வு நடத்தியிருந்தால் அருகில் உள்ள ஒன்றியப் பள்ளிக்கு அந்தப் பெண் மாறுதல் பெற்றிருப்பார். 

என்ன நிர்பந்தமோ !  இப்பெண்ணுக்கு உண்டான முன்னுரிமையை மறுத்து அருகில் உள்ள பள்ளியை வேறொருவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார் மா.தொ.க.அலுவலர். கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர், இயக்குநர் அனைவருமே இந்தாண்டு கலந்தாய்வினை நேர்மையாக நடத்த வேண்டும் என்று முனைப்புக் காட்டி வருகின்ற நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அதை சீர்குலைத்து விட்டனர். அரசாணையை மீறி விதவைக்கான முன்னுரிமையை மறுத்துள்ளனர். இது யாருக்காகவோ? அவர்களுக்கே வெளிச்சம். 

பஸ் போக்குவரத்தே இல்லாத கொல்லிமலை, சேப்பங்குளம்பட்டியில், குழந்தைகளை வைத்துக் கொண்டு விதவைப் பெண் ஆசிரியர் எப்படி பணியாற்றுவார்? அவருக்கு உரிய முன்னுரிமை அடிப்படையில் இடம் கொடுங்கள் என நியாயம் கேட்டோம். மா.தொ.க.அ. திட்டமிட்டு அரங்கேற்றிய செயலைத் திரும்பத் திரும்ப நியாயப்படுத்திக் கொண்டு பேசினார். இனி பயனில்லை, என்ற நிலையினில்தான் தொடக்கக்கல்வி இயக்குநர் கவனத்திற்கு பிரச்சனையைக் கொண்டுச் சென்றோம். மிக நேர்மையாக நடந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்து உடன் மா.தொ.க.அலுவலருக்கு

 நடந்த தவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்திரவிட்டார். அப்போதும் மா.தொ.க.அலுவலருக்கு மனம் வரவில்லை. மீண்டும் மீண்டும் இயக்குநரிடம் எடுத்துச் சென்று இயக்குநர் அவர்கள் மா.தொ.க.அலுவலரை சென்னை வரவழைத்து விசாரித்து உடனே செய்ய உத்திரவிட்ட பின் வேறு வழியின்றி ’முயலுக்கு நாலு கால்தான்’ என ஒத்துக் கொண்டு திருச்சங்கோடு நகராட்சி பள்ளிக்கு மாறுதல் உத்திரவு வழங்கியுள்ளார். 

எப்படியிருப்பினும் நியாயத்திற்காகப் போராடிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிக்கு இது மிகப் பெரிய வெற்றி! 

நீதியை நிலை நாட்டிய தொடக்கக்கல்வி இயக்குநர் ஐயா அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!



No comments:

Post a Comment