Labels

rp

Blogging Tips 2017

பணிக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 'டாண்'ன்னு வரணும்: பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்!

கோவை:ஒத்தக்கால்மண்டபம் மற்றும் அசோகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் திட்டம்,துவங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 888 மாணவர்கள் படிக்கின்றனர். கற்பித்தல் பணிகளில், 37 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, நிர்வாக பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.முன்னாள் மாணவர் சங்கம், பள்ளி மேலாண்மை குழு ஒத்துழைப்போடு, அப்பள்ளி நுாலகத்திற்குள், போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதோடு, ஆசிரியர்களுக்கு முகப்பதிவுடன், விரல் ரேகை மூலம் வருகைப்பதிவு உறுதி செய்ய, பயோமெட்ரிக் கருவி பொருத்தும் திட்டம், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.


பள்ளியில் அசத்தல்

கோவையின் மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்ட அசோகபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, கட்டமைப்பு வசதிகளுக்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள, 53 ஆசிரியர்களுக்கும், நேற்று முதல் பயோமெட்ரிக் கருவியில், வருகைப்பதிவு துவங்கப் பட்டுள்ளது. இவ்விரு பள்ளிகளிலும் படிக்கும், மாணவர்களுக்கும் விரைவில், பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் கூறியதாவது: பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவியில், காலை 9:15 மணிக்கு பள்ளிக்குள் உள்ளே வருவதோடு, மாலையில் 4:30 மணிக்கு வெளியேற, நேரம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கான குறிப்பாணையை, தலைமையாசிரியர்கள் பூர்த்தி செய்ய வசதி உள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களுக்கு, இதை பயன்படுத்தி கொள்ளலாம். ஐந்து ஆண்டுகள் வரை, ஆசிரியர்களின் வருகைப்பதிவு தகவல்களை, சேமிக்க வசதி உள்ளது. முகப்பதிவு, வலது, இடது சுட்டுவிரல் பதிவுகளில், ஏதேனும் ஒருமுறையை மட்டும் பின்பற்றி, வருகைப்பதிவு உறுதி செய்து கொள்ளலாம்.ஆசிரியர்களின் புகைப்படம் இக்கருவியில் உள்ளதால், கேமரா முன்நின்றால், வருகைப்பதிவு உறுதியாகிவிடும். 

இரு வினாடிக்கு ஒருவர் வீதம், ஒரு நிமிடத்தில், 30 பேரின் வருகைப்பதிவு மேற்கொள்ளலாம். விரைவில், மாணவர்களுக்கான வருகைப்பதிவுக்கு, நான்கு கருவிகள் பொருத்த திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

அழிக்க முடியாத ஆவணம்!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''பயோமெட்ரிக் கருவி பொருத்துவதன் மூலம், பள்ளியின் வருகைப்பதிவு, அழிக்க முடியாத ஆவணமாகிவிடும். இதை தன்னார்வலர்கள் உதவியுடன், பள்ளிகளில் பொருத்த தலைமையாசிரியர்கள் முயற்சிக்கலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment