Labels

rp

Blogging Tips 2017

சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி?

சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவதற்கென அரசாங்கத்தில் தனி வழிமுறைகள் எதுவும் கிடையாது . வழக்கமாக சாதிச் சான்றிதழ் பெறுவது போலத்தான் சான்றிதழ் பெறமுடியும் .
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் , `` சாதி மதம் அற்றவர் சான்றிதழ் வாங்குவது எப்படி ? அதை அரசுத்துறை சார்ந்த விண்ணப்பங்களில் குறிப்பிடலாமா ?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் சூர்யபிரகாஷ் . அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது . சாதி , மத ஒழிப்பு குறித்த உரையாடல்கள் எழும்போதெல்லாம் , ` சாதிச் சான்றிதழ்களில் சாதியற்றவர்களாகக் குறிப்பிட்டாலே சாதி ஒழியும் ' என்ற கருத்தும் முன்வைக்கப்படும் '. ஆனால் , அது சரியான தீர்வு அல்ல . மக்களின் மனமாற்றமே முழுமையான தீர்வாக அமையும் என்றும் சிலர் கருதினாலும் , சாதி , மத அடையாளமற்றவர்களாகப் பதிவு செய்வதைப் பலரும் வரவேற்கவே செய்கிறார்கள் .


சாதி , மத அடையாளமற்றவர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறவர்களில் சிலர் சாதிச் சான்றிதழிலும் சாதி , மதம் இல்லை எனக் குறிப்பிட முடிவெடுக்கின்றனர் . அவ்வாறு சாதி , மதம் இல்லை எனப் பெறப்படும் சான்றிதழ்களைக் கொண்டு அரசுத்துறை சார்ந்து விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான் . இந்தியாவில் முதல்முறையாக சாதி , மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெற்றுள்ள வழக்கறிஞர் ம . ஆ . சினேகாவிடம் இதுகுறித்துப் பேசினோம் .
`` சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவதற்கென அரசாங்கத்தில் தனி வழிமுறைகள் எதுவும் கிடையாது . வழக்கமாக சாதிச் சான்றிதழ் பெறுவது போலத்தான் சான்றிதழ் பெறமுடியும் . கிராம நிர்வாக அலுவலரிடம் (V.A.O) நாம் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் . அதை அவர் உறுதிசெய்து வருவாய் ஆய்வாளருக்கு (R.I) பரிந்துரை செய்வார் . வருவாய் ஆய்வாளர் அதை வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்வார் . வட்டாட்சியர் அதைத் சரிபார்த்து சம்பந்தப்பட்ட பகுதியின் வி . ஏ . ஓ நேரில் சென்று கள ஆய்வு நடத்திய பின் சான்றிதழ் வழங்கப்படும்

இதுதான் சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கான வழிமுறை . சாதி , மதமற்றவர் (`No Caste No Religion') எனச் சான்றிதழ் பெறவும் இதே வழிமுறைதான் . நான் முதல்முறையாக இந்தச் சான்றிதழ் பெறுவதால் அந்த விண்ணப்பத்துடன் என் பள்ளி மாற்றுச் சான்றிதழை (School Transfer Certificate) சமர்ப்பித்தேன் . அதில் நான் சாதி , மதம் அற்றவர் எனக் குறிப்பிட்டிருந்தேன் . அதைச் சான்றாக வைத்து எனக்கு `No Caste No Religion' சான்றிதழ் வழங்கினார்கள் . இதைப் போலவே சான்றிதழ் யாராவது வைத்திருந்தார்கள் எனில் , அதை ஆவணமாக சமர்ப்பித்து `No Caste No Religion' சான்றிதழ் பெறலாம் . நான் சான்றிதழ் பெற்ற பிறகு , ஊட்டியைச் சேர்ந்த பகத்சிங் , சுக்தேவ் , ராஜகுரு என்ற மூன்று சகோதரர்கள் வாங்கினார்கள் . அவர்களின் பள்ளிச் சான்றிதழிலும் `No Caste No Religion' என அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் . ஆத்தூரைச் சேர்ந்த ரவி என்கிற தோழர் தனது MBC சான்றிதழைக் கொடுத்துவிட்டு `No Caste No Religion' சான்றிதழ் பெற்றார் . இது சவாலான ஒன்று . ஏற்கெனவே சாதிச் சான்றிதழ் வைத்திருந்தவர் அதைச் சமர்ப்பித்துவிட்டு `No Caste No Religion' சான்றிதழ் வாங்கினார் . இவர் மட்டுமே பள்ளி , கல்லூரிகளில் சாதியைக் குறிப்பிட்டு பின் `No Caste No Religion' சான்றிதழ் பெற்றவர் . 

இவற்றையெல்லாம்விட கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று எங்களுக்கெல்லாம் சான்றிதழ் வழங்கிய தாசில்தார்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருந்ததுதான் . ஏனென்றால் , இவ்வாறு சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கேட்கும்போது வழங்க முடியாது எனத் தெரிவிக்க தாசில்தார்களுக்கு சட்டப்படியான உரிமை உண்டு . `No Caste No Religion' சான்றிதழ் வழங்க வேண்டும் என எந்த அரசாணையும் நீதிமன்ற உத்தரவும் கிடையாது . எனவே , தாசில்தார்கள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு அதை மறுக்கவும் வாய்ப்புள்ளது 

தமிழ்நாடு அரசு , பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என அரசாணை வெளியிட்டுள்ளது . தமிழகத்தில் மட்டுமே இது நடைமுறையில் உள்ளது . பள்ளிச் சான்றிதழில் சாதி , மதம் எனக் குறிப்பிட்டுள்ள இடத்தில் `Verify Community Certificate' எனக்  

குறிப்பிடுகிறார்கள் . `No Caste No Religion' சான்றிதழை அரசுத்துறை சார்ந்த விண்ணப்பங்களில் பயன்படுத்தலாம் . ஊட்டியில் `No Caste No Religion' சான்றிதழ் பெற்ற சுகுதேவ் தற்போது ராணுவத்தில் சேர்ந்துள்ளார் . அவர் `No Caste No Religion' சான்றிதழைச் சமர்ப்பித்தே பணியில் சேர்ந்தார் . 

அதிகாரிகள் அவரை வெகுவாகப் பாராட்டியும் உள்ளனர் . `No Caste No Religion' சான்றிழ் வழங்கலாம் என அரசாணை வரும்போது இது இன்னும் எளிமையாகும் . இடஒதுக்கீடு மட்டுமே சமூகநீதியைக் குறைந்த அளவேனும் உயிர்ப்புடன் வைத்துள்ளது . இடஒதுக்கீடு மூலம் பயனடைபவர்கள் , முதல்முறை பட்டதாரிகள் சாதிச் சான்றிதழ்களையே பயன்படுத்த வேண்டும் என்பதான் நம் எண்ணம் . `No Caste No Religion' சான்றிழ் வாங்குவதால் மட்டுமே சாதி ஒழியும் என்பதும் சரியானதல்ல " என்றார் .

No comments:

Post a Comment