Labels

rp

Blogging Tips 2017

சுயநிதி எம்.பி.பி.எஸ்., பி.இ.: கல்விக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் சேர்ந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 935 எம்.பி.பி.எஸ். இடங்களை அளிக்கின்றன.
சுயநிதி மருத்துவம், பொறியியல் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான கட்டணத்தை ஆண்டுதோறும் நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு நிர்ணயித்து வருகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் எவ்வளவு? தமிழகத்தில் செயல்படும் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.12,290 மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயநிதி கல்லூரிகளில்...நடப்புக் கல்வி ஆண்டுக்கு (2013-14) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு நீதிபதி குழு நிர்ணயித்துள்ள ஆண்டு கல்விக் கட்டண விவரம்
:
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி-ரூ.2.60 லட்சம்; கோயம்புத்தூர் கற்பகம் மருத்துவக் கல்லூரி--ரூ.2.60 லட்சம்; சென்னை மாங்காடு ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை மாதா மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, திருச்சி சென்னை (எஸ்ஆர்எம்) மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, சேலம் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி ஆகிய 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலும் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2.80 லட்சம்.
அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ்.: தமிழகத்தில் செயல்படும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்துக்கான ஆண்டு கல்விக் கட்டணம் கடந்த ஆண்டு ரூ.1 லட்சமாக இருந்தது. இந்தக் கல்வி ஆண்டுக்கான சுயநிதி அரசு பி.டி.எஸ். கட்டணம் குறித்து நீதிபதி குழு இன்னும் முடிவு செய்யவில்லை.
பெற்றோர் கோரிக்கை: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். கல்விக் கட்டணம் உள்பட இதர கட்டணங்களையும் சேர்த்து ஆண்டுக் கட்டணமாக ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வாங்குவதாக தொடர்ந்து பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைக் குறைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பி.இ. படிப்புக்கு...தேசிய அங்கீகார வாரியத்தின் சான்று பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.45,000, சான்று பெறாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.40,000 ஆகியவற்றில் நடப்புக் கல்வி ஆண்டிலும் (2013-14) மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

No comments:

Post a comment