அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 90 ஆயிரம் அதிகரிப்பு
அரசுப்
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட
இந்த ஆண்டு 90 ஆயிரம் அதிகரித்துள்ளதாக தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள சுமார் 35
ஆயிரம் பள்ளிகளில் இந்த ஆண்டு (2013-14) 4 லட்சத்து 8 ஆயிரத்து 871
மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தமாக 3 லட்சத்து 18 ஆயிரத்து
995 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்தனர்.
ஆங்கில கல்வி மோகம், ஆசிரியர் காலிப்பணியிடங்கள், அரசுப் பள்ளிகளில்
மோசமான வசதி போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம்
தொடர்ந்து சரிவில் இருந்து வந்தது.
2008-09-ஆம் ஆண்டில் 4
லட்சத்து 28 ஆயிரமாக இருந்த மாணவர் சேர்க்கை 2012-13-ஆம் ஆண்டு 3 லட்சத்து
18 ஆயிரமாகக் குறைந்தது. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் மாணவர்
சேர்க்கை 43 ஆயிரம் அதிகரித்து 2 லட்சத்து 7 ஆயிரமாக இருந்தது. அரசுப்
பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆங்கில வழி
வகுப்புகள் தொடக்கம், இலவசத் திட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த
ஆண்டு மாணவர் சேர்க்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆங்கில வழி
வகுப்புகள் காரணமாகவே மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு 3 ஆயிரத்து 500 தொடக்கப்
பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும்
சராசரியாக 20 மாணவர்கள் வரை இந்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். மொத்தமாக 80
ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில்
சேர்ந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மிக அதிகம்: மாநிலத்திலேயே
அதிக அளவாக வேலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 486 மாணவர்கள் இந்த ஆண்டு
அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6
ஆயிரம் அதிகம் ஆகும்.
கோவை, கடலூர், காஞ்சிபுரம், மதுரை,
அரியலூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டுடன்
ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசுப்
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மிக அதிக
அளவாக 8 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவரின் எண்ணிக்கை
இரண்டு மடங்காக அதிகரித்தாலும் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இந்த
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,201 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில்
சேர்ந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2,896 ஆக அதிகரித்துள்ளது. எனினும்,
இந்த எண்ணிக்கைதான் மாநிலத்திலேயே மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.
சென்னை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
No comments:
Post a comment