தனியார்
தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொழில்போட்டிகளை
எதிர்கொள்வதற்காகப் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்துவருகின்றன. அதில்
ஒன்றுதான் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள். குழந்தைகள் பங்கேற்பதால்
ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் இந்நிகழ்ச்சியால் பார்க்கவைக்க
முடிகிறது. அதனால் இன்று எல்லாத் தரப்பினரிடமும இந்நிகழ்ச்சி பெரும்
வரவேற்பைப் பெற்றுவிட்டது. இது விளம்பரதாரர்களைக் கவர்வதற்கு அனுகூலமான
விஷயம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் இம்மாதிரியான
ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்ளும் குழந்தைகளைப் பற்றி ஆய்வு
மேற்கொண்டிருந்தோம். அப்போது சென்னையில் பிரபலமான தனியார் தொலைக்காட்சி
நடத்தும் பாட்டுப் போட்டிக்கான இறுதிச் சுற்று நடக்கவிருந்தது. அதில்
பங்கேற்க வந்திருந்த குழந்தைகளை அந்தத் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினர்
ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்திருந்தனர். அவர்களைச் சந்திக்க முயன்றோம். ஆனால்
எங்களைச் சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெளியில் வைத்துச்
சந்திக்கலாம் என முயன்றும் முடியவில்லை. நிகழ்ச்சி முடிவடையும் முன்பு
இதுபோன்று சந்தித்துக் கருத்துத் தெரிவித்தால் நிகழ்ச்சியில் இருந்து
வெளியேற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக ஒரு சிறுவனின் தாய் தயக்கத்துடன்
சொன்னார். அவர்களின் பதற்றம் நியாயமானதுதான். அவர்கள் ஒவ்வொரு கட்டப்
போட்டிக்கும் ஆடை அலங்காரம், விளம்பரம் என லட்சங்களை மூலதனமாக்கி
இருக்கிறார்கள்.
ரியாலிட்டி ஷோக்களுக்கான போட்டிகள்
தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் இறுதிச் சுற்றுவரை
முன்னேறினாலேயே போதுமானது. குழந்தைகளுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து
கிடைத்துவிடுகிறது. சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைக்கிறது.
வெளிநாடுகளில் நடக்கும் கச்சேரிகளில் பங்குகொள்ளவும் முடிகிறது. இதன் மூலம்
மிகச் சிறு வயதிலேயே குழந்தைகள் பெரிய தொகையைச் சம்பாதிக்கத்
தொடங்குகிறார்கள். இது போன்ற பொருளாதாரப் பலன்கள்தான் மற்ற
பெற்றோர்களிடமும் ஆசையைத் தூண்டுகிறது. தங்கள் குழந்தைகளின் திறமையை
நிரூபிப்பதற்கான வாய்ப்பாகக் கருதாமல், பெற்றோர்கள் இதை எளிதாகப் பணம்
சம்பாதிக்கக்கூடிய வழியாக நினைக்கின்றனர். இந்த இடத்தில்தான் இப்போட்டிகள்
மிக அபயகரமானவையாக மாறின. குழந்தைகள் சிலருக்கு இயல்பிலே இப்போட்டிகளில்
பங்கேற்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதுவெல்லாம் கருத்தில்
கொள்ளப்படுவதில்லை. பெற்றோர்களின் நிர்ப்பந்தத்தால் அவர்கள் கலந்துகொள்ள
வேண்டியிருக்கிறது.
பொதுவாகவே இன்றைய பெற்றோர்களுக்குக்
குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகள் மிக அதிகம். உலகில் உள்ள எல்லாத்
திறனையும் வளர்த்துக்கொள்ளும் பொருட்டு குழந்தைகளை முடுக்குகிறார்கள்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு சாட்டையைக் குழந்தைகளை நோக்கி எப்போது
சுழற்றிக்கொண்டே இருக்கிறாகள். தங்கள் குழந்தைகளுடன் எதிர்வீட்டுக்
குழந்தையை ஒப்பிட்டு, ஒப்பிட்டு அவர்கள் முன்னால் ஒரு போட்டி உலகத்தை
உருவாக்குகிறார்கள். ஒரு சமூக உறவோ, இயல்பான பலவீனங்களுடனான வாழ்க்கையோ
இல்லாமல் அவர்களைக் கற்பிதங்களுக்குப் பழக்கப்படுத்துகிறார்கள்.
குழந்தைகள்
இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு நீண்டகாலப் பயிற்சிகள் எடுக்க
வேண்டி உள்ளது. பெற்றோர் சிலர் இதைக் குழந்தையின் வாழ்நாள் இலக்காக
நினைக்கிறார்கள். இப்பயிற்சிகளால் குழந்தைகள் மனரீதியாகவும்
உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பயிற்சி எடுத்துக்கொள்ளும்
காலத்தில் அவர்களின் மற்ற அன்றாடப் படிப்புகளைக் கைவிடுவதையும் பெற்றோர்கள்
விரும்புவதில்லை. இதனால் ஏற்கனவே உள்ள பயிற்சிகளுடன் அவர்களுக்கு இதுவும்
பெரும் சுமையாக ஆகிறது. குழந்தைகளின் நாட்கள் என்பது இப்போது
அவர்களுக்கானதாக இல்லை. முழுவதும் வெவ்வேறு விதமான பயிற்சிகளால்
ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
இந்நிகழ்ச்சியின்
தேர்வுமுறைகளும் வெளிப்படையானவை அல்ல எனப் போட்டிகளில் பங்கேற்ற
குழந்தைகளின் பெற்றோர்கள் சொல்கிறார்கள். இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்
குழந்தைகளில் ஒருவருக்காவது உருக்கமான பின்னணி இருக்க வேண்டியது அவசியம்
எனச் சொல்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் குழந்தைகள் போட்டிக்கு
அழைக்கப்படுகிறார்கள். ரியாலிட்டி ஷோக்களாக இருந்தாலும் இவை கற்பனை சார்ந்த
நிகழ்ச்சிகள்தான். எல்லாத் தரப்புப் பார்வையாளர்களையும் கவர வேண்டும் என்ற
அடிப்படையில்தான் வெற்றியும் ஒரு புனைவுபோல உருவாக்கப்படுகிறது. இந்தப்
புரிதல் அற்ற பெற்றோர்கள் குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்ற
முயல்கிறார்கள். இதில் தோல்வி அடையும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை,
நண்பர்களை எதிர்கொள்ள முடியாமல் குற்ற உணர்வுக்கு ஆளாக நேரிடுகிறார்கள்.
அவமநம்பிக்கை கொள்கிறார்கள். பெற்றோர்கள் அவர்களின் வட்டாரத்தில்
பிம்பங்களை உருவாக்கிவைத்திருக்கும் சூழலில் தம்மால் அதை நிறைவேற்ற
முடியவில்லை என்பது குழந்தைகளை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெண்குழந்தை இப்போட்டியில் தோற்றதால் மனரீதியாக
மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் தந்தை சொல்கிறார். போட்டிகளில் பங்கேற்காத
குழந்தைகளும் இப்போட்டிகள் மூலம் பாதிக்கப்படுகிறார்கள். இப்போட்டிகளில்
வெற்றிபெற்ற குழந்தைகளைத் தங்கள் பெற்றோர் பாராட்டிப் பேசும்போது ஒரு சிறிய
அளவிலான மன ஏக்கத்திற்கு ஆளாகிறார்கள். தானும் அதுபோல் கொண்டாடப்பட
வேண்டும் என அவர்கள் நினைப்பது இயல்புதான். சமயங்களில் வெற்றிபெற்ற
குழந்தையுடன் தங்கள் குழந்தையைப் பெற்றோர் சிலர் ஒப்பிடவும் செய்கின்றனர்.
இதனடிப்படையில் குழந்தைகள் ‘வெற்றி’ என்பதை வாழ்வின் இன்றியமையாத விஷயம்
எனப் புரிந்துகொள்கிறார்கள். இதனால் தோல்விகள் இயல்பானவை என்பதை அவர்களால்
ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மனச் சிதைவுக்கு ஆளாகி அவர்கள் அதனுடன் வாழவும்
நேரிடுகிறது.
குழந்தைகளை மனரீதியாகச் சிதைவுக்கு
உள்ளாக்குவதில் ரியாலிட்டி ஷோக்களுக்குப் பெரும் பங்கு உள்ளதாக ஆய்வுகள்
வெளியாகி உள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இது குறித்த
விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தியாவில்
மூன்றாம் வகுப்பும் அதற்குக் கீழேயும் படிக்கும் 48 சதவீதமான குழந்தைகள்
ரியாலிட்டி ஷோக்களுக்காகத் தயாராகிக்கொண்டிருப்பதாக ஓர் ஆய்வு முடிவு
தெரிவிக்கிறது. இது இந்தியாவிலும் ரியாலிட்டி ஷோக்கள் அபாயம் குறித்த
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
குழந்தைகள்
உலகம் பற்றிய புரிதல் இல்லாததுதான் இப்பிரச்சினைகளுக்கான காரணம்.
குழந்தைகளின் சந்தோஷத்திற்காக நம்மால் உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள்,
விளையாட்டுப் பொம்மைகள், கதைகள் எவற்றிலும் குழந்தமையே இல்லை.
போட்டிகளையும், ஆயுதங்களையும், போர்களையும்தான் நாம் அவர்களுக்கு
விளையாடுவதற்காக உருவாக்கித் தருகிறோம். நம்முடைய உலகத்தின் இருந்து
குழந்தைகளின் உலகத்தைப் பார்க்கக் கூடாது. சற்றுத் தணிந்து இறங்கி
அவர்களின் உலகத்திற்குள் நுழைந்தால்தான் நம்மால் அவர்களை உணர முடியும்.
‘தொலைக்காட்சியின்
கற்றுக்கொடுக்கும் செயல் கல்வி கற்கும் வயதில் உள்ளவர்களை வலுவாகப்
பாதிக்கிறது. தொலைக்காட்சியின் முக்கியமான இலக்காக இவர்கள் இருப்பதால்
கல்வி நிறுவனங்களுக்கே உரித்தான கற்றுக்கொடுக்கும் செயல்பாட்டிற்குத்
தொலைக்காட்சி போட்டியாகிவிடுகிறது.’ என்று பிரஞ்சுச் சிந்தனையாளர் பியர்
பூர்தியூ கூறுகிறார். ஆனால் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் அந்தப்
பிராயத்துக்குரிய அனுபவங்களைத் தொலைத்து பொருளாதார நோக்கத்திற்காகக்
கச்சேரிகளில் பாடிக்கொண்டிருப்ப்பதை நம்மால் ரசிக்க முடிவதில்லை.
குழந்தைகள்
உலகம் வண்ணமயமானவை. ஒரு நாளின் மிக நுட்பமான அழகுகள் குழந்தைகளின்
கண்களில் மட்டுமே காட்சியாக விரிவுகொள்ளக்கூடியவை. அவர்களின் இந்த
அழகுணர்ச்சி நமக்கு எளிதில் வசப்படாத ஆன்மிகத்தின் வெளிப்பாடு. ஆனால் இன்று
நாம் பல்வேறு விதமாகக் குழந்தைகளின் அந்த உலகத்தைச்
சிதைத்துக்கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a comment