5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 20 December 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது.
அதன்பிறகு, மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபிதா (படம்) வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
பி.எட். படித்து வேலையில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைப்பதற்காக தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உத்தரவிடப்படுகிறது.
இந்தத் தேர்வில் தகுதி பெறும் பி.எட். பட்டதாரிகள் இப்போதுள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்களிலும் பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கும் (Scribes) சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறும் 200 பார்வையற்றோர், இப்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் விதிகளுக்குட்பட்டு பணியமர்த்தப்படுவர். நெட் மற்றும் ùஸட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதுநிலைப் பட்டம் பெற்ற 100 பார்வையற்றோரை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் 32 மாவட்டங்களில் 50 மையங்களில் பயிற்சி அளிக்க மையம் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் வீதம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு: இந்த அரசாணையை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் வரவேற்றுள்ளது. இந்த அரசாணையின்படி, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats