Labels

rp

Blogging Tips 2017

சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு


சிதம்பரம் பகுதியில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.சிதம்பரம் நகரில் நாளுக்கு நாள் இரு சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர் பகுதியில் 15 மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. நகரில் 5,000க்கும் மேற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இரு சக்கர வாகனத்தை அதிகம் ஓட்டுபவர்கள் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் தான். இவர்கள் சரியாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும்,
கவனமின்றி அதிவேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். இதன் பின் விளைவுகளைப் பெற்றோர் முன்னரே அறியாததால், பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து அவதிப்பட வேண்டியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனம் ஓட்ட தகுதி இல்லாத சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து வழக்கு போட வேண்டும் என டி.எஸ்.பி., ராஜாராம் நேற்று முன்தினம் மாலை மைக் மூலம் திடீர் உத்தரவு பிறப்பித்தார். இதனை கேட்ட போலீஸ் அதிகாரிகள், பெற்றோர் மீது வழக்கா என குழப்பத்துடன் வாகன சோதனை செய்தனர். சிதம்பரம் சப் டிவிஷனில் போக்குவரத்து பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மொத்தம் 30 வாகனங்களைப் பறிமுதல் செய்து, பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து வரக்கூறி சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் அணி வகுத்து நின்றனர். அவர்களிடம் உங்கள் பிள்ளைகளுக்கு மோட்டார் பைக் ஓட்ட தகுதி இல்லாதபோது, வாகனம் கொடுத்ததால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என கூறியதும் அதிர்ச்சி அடைந்தனர். சிதம்பரம் நகர் போக்குவரத்து போலீசார் 20 மோட்டார் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நகரைச் சேர்ந்த அசோக்குமார் , அல்லா பிச்சை, ஜெயக்குமார், பாஷா, கலைச்செல்வன், பிரசன்னகுமார், இளங்கோவன் உள்ளிட்ட 15 பேர் மீது தகுதி இல்லாதவர்களுக்கு மோட்டார் பைக் ஒட்ட வாகனம் கொடுத்ததற்காக பெற்றோர், உறவினர் மீது மோட்டார் வாகன சட்டம் 180ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிற்கு தலா 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துக்கொண்டு போலீசார் உரியவர்களிடம் மோட்டார் வாகனத்தை ஒப்படைத்தனர். டி.எஸ். பி.,யின் அதிரடி உத்தரவால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a comment