Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

குழந்தைகளின் வாழ்வில் புன்னகை சிந்த வேண்டும் என்றால், வீடுகளில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை நிறுத்துங்கள்: வெ.இறையன்பு

குழந்தைகளின் வாழ்வில் புன்னகை சிந்த வேண்டும் என்றால், பெற்றோர்கள் தங்களது வீடுகளில் கண்ணீர் சிந்தும் நெடுந்தொடர்களை நிறுத்த வேண்டும் என்று அண்ணா நிர்வாகக் கழக இயக்குநரும், முதன்மைச் செயலருமான வெ.இறையன்பு வலியுறுத்தினார்.

சேலம் அறிஞர் அண்ணா மக்கள் சேவை மன்றத்தின் சார்பில்  5-ஆவது ஆண்டாக மாதிரி பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டன. சுமார் 10,700 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த மாதிரித் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும், என்றும் நமதே என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கமும் சேலம் நேரு கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றன.  விழாவுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ஈஸ்வரன் தலைமை வகித்தார். மஹேந்திரா கல்வி நிறுவன முதல்வர் ஜே.சாம்சன் ரவீந்திரன், சேவை மன்றச் செயலர் சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றத்தின் தலைவர் எம்.குணசேகரன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வெ.இறையன்பு பேசியது: நான் பிளஸ்-2 பயிலும்போது பொதுத் தேர்வில் எந்த வினா வரும், எந்த வகையில் வினாக்கள் இடம்பெறும் என்பது போன்ற பல்வேறு குழப்பங்கள் இருந்தன. ஆனால், இப்போதோ ஒரு பாடத்தில் எத்தனை வினாக்கள் கேட்கப்படும், எந்தெந்த பாடங்களைப் படித்தால் எத்தனை மதிப்பெண்கள் வரை பெறலாம் என்பது வரையிலும் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
 பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இதுவரையிலும் படிக்காத மாணவர்கள், இன்றிலிருந்து படிக்கத் தொடங்கினாலும் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். படிப்பு என்றாலே பயம் என்ற நிலை மாறி, அது ஒரு சுகமான அனுபவம் என்ற நிலை உருவாக வேண்டும். உற்சாகமின்றி எந்த செயலையும் சரியாகச் செய்ய முடியாது. எனவே மாணவர்கள் உற்சாகத்துடன் படிக்க வேண்டும். படிப்பதை தனது விருப்பமாக மாற்றிக் கொண்டு, எனக்காகவே நான் படிக்கிறேன் என்ற நோக்குடன் படிக்க வேண்டும். நமது முழு வாழ்க்கையையும் மகிழ்ச்சியாகக் கழிக்க முடிவு செய்தால், இந்த நொடியை முதலில் மகிழ்ச்சியாக்கிக் கொள்ள வேண்டும். தேர்வுக் காலம் நெருங்கிவிட்டதால் மாணவர்கள் செல்பேசிகள், தொலைக்காட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் புன்னகை சிந்த வேண்டும் என்று எண்ணினால், வீடுகளில் கண்ணீர் வடிக்கும் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுடன் சேர்ந்து பெற்றோரும் தங்களது குழந்தைகளை பதற்றத்துக்குள்ளாக்க வேண்டாம். மாறாக அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment


web stats

web stats