Labels

rp

Blogging Tips 2017

பஞ்சாகக் கருகும் பிஞ்சுப் பருவம்.. தேவையா நர்சரி கல்வி?


ஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள் அவர்கள் வாழ்நாளில் பெறுகிற ஒட்டுமொத்த நுண்ணறிவில் ஐம்பது சதவிகிதத்தை, தங்களது நான்காவது வயதிலேயே பெற்றுவிடுகிறார்கள்..."

- இது உளவியல் அறிஞர் ப்ளூமின் கருத்து.

"தன்னிச்சையான நடத்தை உடையவர்களாக விளங்கும் குழந்தைகள், அவர்களின் நடத்தையில் இருந்தே பெரும்பாலானவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள்..."

- இது மகான் அரவிந்தரின் வார்த்தைகள்.பாலபருவத்தில் குழந்தைகள் இயல்பாகவே தானாக எல்லாவற்றை யும் கற்றுக் கொள்வார்கள் என்பது தான் எல்லா கல்வியியல் அறிஞர் களின் கருத்தும். ஆனால், இன்று ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி. என்று சொல்லப்படும் பாலர் கல்வியின் (நர்சரி பள்ளிகள்) பின் நாம் வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறோம்.

'இந்த முன்பருவ கல்வி தேவைதானா...?' என்பதுதான் இன்றைய நிலையில் பல கல்வியாளர்களின் கேள்வியாக இருக்கிறது. அதற்கு விடைதேடி கல்வி வல்லுநர்கள் சிலரைச் சந்தித்தோம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் அநாதைகளான குறவர் இன குழந்தைகளுக்காக 'வானவில்' என்ற பெயரில் சிறப்புப் பள்ளி நடத்திவருபவரும், எழுத்தாளருமான ரேவதி, "தற்போதைய சூழலில் கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்துபோய் தனிக் குடித்தனங்கள் பெருத்ததன் விளைவுதான் இன்றைய பாலர் பள்ளிகள். இருவரும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெற்றோர், குழந்தையை என்ன செய்வது என்ற கேள்வி வரும்போது, முன் தெரிவது இந்தப் பள்ளிகள்தான்.

இன்னொரு காரணமும் இருக்கிறது. தன் குழந்தையை இப்போது யாரும் குழந்தையாக பார்ப்பது கிடையாது. எதிர்கால மருத்துவர்களாக, கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களாகத்தான் பார்க்கிறார்கள். அது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், எதிர்கால சேமிப்பாக குழந்தைகளை உருவாக்க, அதிக மதிப்பெண் கள் எடுக்க வைக்கிற பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது" என்றவர் அந்தப் பள்ளிகளில், பிஞ்சுகளுக்கான சூழலின் நிதர்சனம் பற்றியும் கூறினார்...

"பொதுவாக இன்றைய பள்ளிகளில் குழந்தைகளை உணர்ச்சியுள்ள ஒரு ஜீவனாக கருதுவதில்லை. எழுதும், படிக்கும், சொல்லுக்கு கட்டுப்படும் ஒரு எந்திரமாகத்தான் பார்க்கிறார்கள். எழுதுவது போன்ற வேலைகளை செய்யும் அளவுக்கு குழந்தைக்கு உடல் வலிவு ஐந்து வயதில்தான் வரும் என்றாலும், இங்கே இரண்டரை, மூன்று வயதிலேயே அதன் கையைப் பிடித்து எழுத வைக்கிறார்கள். இது, கிட்டத்தட்ட குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்துவதற்கு ஒப்பானது. பள்ளிப் பருவத்துக்கு முன் குழந்தையை இப்படி பள்ளியில் சேர்த்து, அவர்களுக்கு அவர்களின் குழந்தைத்தன வாழ்க்கையை மறுத்து, கல்வி எந்திரமாக அவர்களை மாற்றுவது கண்டனத்துக்குரியது!" என்று வெடிக்கிறார் ரேவதி.

"பாலர் பள்ளிகள் தேவைதான்... அது பாலர் பள்ளிகளுக்கான இலக்கணத்துடனும், தரத்துடனும் இருக்கும் பட்சத்தில்" என்று சொல்லும் காமராஜ், நாகப்பட்டினம் மாவட்டம், குருக்கத்தி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் குழந்தை மனவியல் பேராசிரியர்.

"குழந்தையின் வீடுதான் அதற்கு முதல் பள்ளிக்கூடம். அங்கிருக்கும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி முதலிய குடும்ப உறுப்பினர்கள்தான் குழந்தைக்கு முதல் ஆசிரியர்கள். குடும்பத்துக்கு வெளியே இருப்பவர்கள், வீட்டுக்கு வரும் விருந்தாளிகள், நாய், பூனை போன்ற பிற விலங்குகள் என்று பல தரப்பட்டவர்களின் உணர்வுகள், நடத்தைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் மாபெரும் பள்ளி நம் வீடு.

இப்படிப்பட்ட இயற்கையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகள், மற்றவர்களோடு ஒப்பிடும்போது மிகுந்த வாழ்க்கைத்திறன் உடையவர்களாக திகழ்கிறார்கள். அதேபோன்ற சூழ்நிலையில் ஓடி ஆடி மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும் குழந்தைகள் சிறந்த சமூகத்திறனை பெறுவார்கள் என்பது மனவியல் அறிஞர்களின் கருத்து. அதனால்தான் அப்படிப்பட்ட சூழலில் பள்ளிகள் அமைய வேண்டும் என்று மான்டிசோரி அம்மையார் ஆசைப்பட்டு, பள்ளி துவக்கினார்.

மான்டிசோரி பள்ளியில் இயற்கையான சூழல் அமைந்திருக்கும். வகுப்பில் அமர வைத்து, விரல் வளைத்து எழுத வைக்கும் முறைகள் இல்லாது, அந்தப் பள்ளியில் குழந்தைகள் விளையாட பொருட்கள் நிறைந்திருக்கும். அதை எடுத்து தனியாகவோ, கூட்டாகவோ குழந்தைகள் விளையாடுவார்கள். அந்த விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு ஒரு திறனை கற்றுத்தருவதாக இருக்கும். இப்படி ஒரு முன்பருவ கல்வி இருந்தால் அது நிச்சயம் தேவைதான். ஆனால், இன்று இருக்கும் பள்ளிகளில் அப்படியான சூழ்நிலை அமைந்த பள்ளிகள் மிகக் குறைந்த அளவில்தான் இருக்கின்றன" என்ற காமராஜ்,

"ஐந்து வயதில் கற்க வேண்டியதை மூன்று வயதிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள். குழந்தைகளை கையாளும் பயிற்சியும் திறனும் இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் அங்கே வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு அடிபணியத்தான் குழந்தைகளுக்கு தெரியுமே தவிர, அறிவு வளர்ச்சி என்பதற்கு அங்கே வேலையில்லை" என்று ஆதங்கப்பட்டார்.

சரி... இந்த பாலர் பள்ளிகளை சீர்படுத்துவதற்கான, நெறிப்படுத்துவதற்கான வழிதான் என்ன?!

"நம் நாட்டின் கல்வித் திட்டம் மாறவேண்டும்..." என்று சொல்லும் ரேவதி, "மேலை நாடுகளில் ஆரம்பக் கல்வி என்பது முற்றிலும் அரசால் மட்டுமே நடத்தப்படுகிறது. பள்ளி படிப்புக்குப் பிறகுதான் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விச் சேவையில் இறங்க முடியும். அங்கே இருக்கும் தொடக்கக் கல்வி குழந்தையின் அடிப்படை அறிவைப் பெருக்க தேவையான பாடத் திட்டத்தோடு அமைந்திருக்கும். அதனால் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் அங்குதான் கல்வி பயில்வார்கள். அதனால் பள்ளிகளிடையே போட்டி கிடையாது. அதுபோல ஆரம்பக் கல்வி முழுக்க முழுக்க அரசு சார்ந்ததாக மட்டுமே ஆக்கப்பட்டால்... இப்படி தனியார் பள்ளிகளைத் தேடி ஓடி குழந்தைகளை அடைக்க வேண்டிய தேவையே இருக்காது" என்கிறார் அழுத்தமாக.

இன்னொரு தீர்வாக, "நல்ல தரமான ஆரம்பக் கல்வி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், பள்ளி முன்பருவகல்வி என்பதே தேவைப்படாது" என்பதும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. "அதற்கு நம் வருங்கால சந்ததிகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, சமச்சீர் கல்வி முறைதான். ஆனால், அவசர அவசரமாக எந்தத் திட்டமிடலும் இல்லாமல், பல்துறை வல்லுநர்களின் கலந்தாய்வுகள் இல்லாமல் கொண்டு வரப்படும் சமச்சீர் கல்வியில் அப்படி ஒரு நிலை எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை" என்றும் சொல்கிறார்கள் கல்வியாளர்கள்.

அவர்களின் சொல்லுக்கு காது கொடுத்து, சமச்சீர்கல்வியை செம்மையாக்கி, ஆரம்பக்கல்வியை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்கிவிட்டால்... பிஞ்சுகளைச் சேர்ப்பதற்காக நாம் அடித்துப் பிடித்து தனியார் பள்ளிகளிடம் ஓடவேண்டிய அவசியம் இருக்காது. குழந்தைகளின் மழலைப் பருவமும் கருகாமல் இயல்பானதாக இருக்கும்!

- கரு.முத்து
படம்: எம்.உசேன்

(அவள் விகடன் 01-01-2010 இதழில் இருந்து)

No comments:

Post a comment