Labels

rp

Blogging Tips 2017

மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு 'கட் - ஆப்' உயரும்: கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி

நடப்பாண்டில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என, கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

இன்ஜினியரிங்:

இன்ஜினியரிங் படிப்பிற்கு, கணிதம், 100; வேதியியல், 50; இயற்பியல், 50 என, மொத்தம், 'கட் - ஆப்' மதிப்பெண், 200. தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இன்ஜினியரிங், கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க, இம்மாதம், 27ம் தேதி கடைசி தேதி. அதன்பின், அனைத்து விண்ணப்பங்களும் ஆய்வு செய்து, முதலாவதாக, 'ரேண்டம்' எண் வெளியிடப்படும். ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், பல மாணவர்கள்
இருக்கும் போது, ஒவ்வொருவருக்கும், ஒரு ரேங்க் வரையறுக்கப்படும். அதாவது, 200 மதிப்பெண்ணில், 400 பேர், 150 மதிப்பெண், 'கட் ஆப்', எடுத்திருந்தால், இந்த, 400 பேரில், கணிதத்தில், யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாரோ, அவருக்கு, கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். கணிதத்தில், ஒரே மதிப்பெண் இருந்தால், அடுத்து இயற்பியல் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்திருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவற்றிலும், ஒரே மதிப்பெண் எடுத்திருந்தால், கம்ப்யூட்டர் அறிவியல் அல்லது உயிரியல் பாடங்களின் மதிப்பெண் பார்க்கப்படும். இதிலும், ஒற்றுமை காணப்பட்டால், மாணவர்கள் பிறந்த தேதி பார்க்கப்படும். இதுவும் ஒன்றாக இருந்தால் மட்டுமே, 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும். இது, அரிதாக மட்டும் பயன்படுத்தப்படுவதால், மாணவர்கள், கவலை அடைய தேவையில்லை. தற்போது, பிளஸ் 2 தேர்வில் அதிக மாணவர்கள், கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில், நல்ல மதிப்பெண் வாங்கியுள்ளனர். எனவே, முன்னணி கல்லூரிகளில், 'கட் - ஆப்' மதிப்பெண், 0.25 முதல், 0.75 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 'கட் - ஆப்' மதிப்பெண், 150க்கு கீழ் இருக்கும் போது, கடந்த ஆண்டை விட, 'கட் - ஆப்' மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, கடந்த ஆண்டு, 150 மதிப்பெண்ணுக்கு கிடைத்த கல்லூரி, இந்த ஆண்டு, 148க்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு, 1.90 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு, 1.65 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 25 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக இருக்கும் என, தெரிகிறது. இதனால், மூன்றாவது, நான்காவது தர வரிசையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. இதனால், இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பித்த, தகுதியான அனைத்து மாணவர்களுக்கும், 'சீட்' உறுதி. கடந்த ஆண்டு, 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இது, நடப்பாண்டில், ஒரு லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்றும், இன்ஜினியரிங் படிப்பிற்கு வாய்ப்புள்ளது. எனவே, நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்து, மாணவர்கள் திறமையை வளர்த்து கொண்டால், நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன.


மருத்துவம்:

நடப்பாண்டில், மருத்துவ படிப்பிற்கு, மிக கடுமையான போட்டி நிலவப் போகிறது. எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், மருத்துவ படிப்பிற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண், 0.75 முதல், 1 மதிப்பெண் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, கடந்த ஆண்டு, பி.சி., பிரிவு மாணவருக்கு, அரசு மருத்துவ கல்லூரியில், 'கட் - ஆப்' மதிப்பெண், 197 என, இருக்கும் போது, நடப்பாண்டில், 197.75 - 198 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது, மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பை விட, மருத்துவ படிப்பிற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதனால், எம்.பி.பி.எஸ்., மட்டும் அல்லாமல், மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும்,'கட் ஆப்' மதிப்பெண் உயர்வதற்கு வாய்ப்பு அதிகம். பி.டி.எஸ்., படிப்பிற்கு, 'கட் - ஆப்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட, 0.75 முதல், 1 மதிப்பெண் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோல், பாராமெடிக்கல் படிப்புகளான, பி.பார்ம், பிசியோதெரபி, நர்சிங், ரேடியலாஜி போன்ற படிப்புகளுக்கும், மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், 'கட் - ஆப்' மதிப்பெண், இந்த படிப்புகளுக்கும் கடந்த ஆண்டை விட, 2 முதல் 4 மதிப்பெண் வரை, உயர வாய்ப்புள்ளது.

வேளாண்மை:

நடப்பாண்டில், வேளாண்மை படிப்பிற்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். எனவே, வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கும், 'கட் - ஆப்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட, 1-2 அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதுபோல், கால்நடை; மீன் வளத்துறை போன்ற படிப்புகளுக்கும், 'கட் - ஆப்' மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது.சித்தா ஹோமியோபதி; சித்த மருத்துவம்; ஆயுர்வேதம், நேச்சுரோபதி; யுனானி போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கும், 'கட் - ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டை விட, 1 முதல் 2 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நடப்பாண்டில், மருத்துவம் மற்றும் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு கடும் போட்டி நிலவுவதால், இன்ஜினியரிங் படிப்பிற்கு, விண்ணப்பம் செய்வது நல்லது. எனவே, மாணவர்கள், மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், இன்ஜினியரிங் படிப்பிற்கும் விண்ணப்பித்து, அதையும் ஒரு விருப்பமாக வைத்து கொள்வது நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a comment