Labels

rp

Blogging Tips 2017

பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா? - டாக்டர் என். கங்கா, குழந்தைகள் நல மருத்துவர், கும்பகோணம்


பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா?

இக்கேள்வியை பள்ளிக் குழந்தையைக் கேட்டால் “சுமை’ என்ற பதில் நெத்தியடியாக வரும்.

பள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் சுகமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர், கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பள்ளியில் பாடத் திட்டம், ஆசிரியர்கள், தேர்வு முறை, குழந்தையின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தனித்தன்மையை வெளிக் கொணர்தல், தேவைப்படும் காலகட்டத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு தனிக் கவனம் ஆகிய எல்லாமும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முக்கியம்!பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு, தேவையான அனைத்து வசதிகளும் கட்டாயத்தேவை. குழந்தைக்கு அவனது பள்ளியானது, ஸ்டூடன்ட் ஃப்ரெண்ட்லி பள்ளியாக இருக்க வேண்டுமானால் இவை அனைத்தும் மிக அவசியம். இவை எல்லாம் அனைத்துத் தரப்பினராலும், பல்வேறு மட்டங்களில், பல ஆண்டுகளாகப் பேசப்படுகின்றன! ஆனால் நடைமுறையில்…?

இந்திய குழந்தை மருத்துவர் அமைப்பு (Indian Academy of Pediatrics) ஐந்து முக்கியக் கருத்துக்களை முன் வைக்கிறது.

1. குழந்தைக்கு உடல் ரீதியான மற்றும் மனரீதியான தண்டனைகள் எதுவும் இருக்கக்கூடாது (உ-ம்) அடிப்பது, குட்டுவது, கிள்ளுவது இவற்றை அரசு சட்டத்திலேயே தடை செய்து விட்டது! ஆனால், சில இடங்களில் இவை தொடர்கின்றன.

பெஞ்ச் மேல் நிற்க வைப்பது, வகுப்புக்கு வெளியே, விளையாட்டுத் திடலில் நிற்க வைப்பது, ஓட வைப்பது, இம்பொஸிஷன் எழுத வைப்பது, கடுமையாகக் திட்டுவது, மற்றவரை ஒப்பிட்டுப் பேசி அவமானப்படுத்துவது, குழந்தையின் ஊர், பெற்றோர், சமூகப் பொருளாதாரச் சூழல், ஜாதி-மதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசுவது – இவையாவும் மனரீதியான தண்டனைகள். அடிக்கும் வலியைவிட மிகவும் ஆழமான மன வலியை ஏற்படுத்தும் இவை நீண்டகால நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி, குழந்தைக்கு நடத்தைக் கோளாறு நோய்கள் (Behavioural Disorder) வரக்கூடும்.

2. அடுத்து, school bag syndrome என்று அழைக்கப்படும் புத்தகச் சுமை. குழந்தை மிக மிக கனமானப் புத்தகப் பையை தினமும் தூக்கிச் செல்வதால் முதுகு வலி, கழுத்துவலி, தலை வலி, முதுகு கூன் போடுதல், கழுத்து எலும்பு சீக்கிரம் தேய்தல், நடையில் மாற்றம் போன்றவை ஏற்படுகின்றன.

ஒரு குழந்தையின் பள்ளிப் பையின் எடையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவிகிதம் மட்டும் இருக்க வேண்டும். 15 கிலோகிராம் எடையுள்ள குழந்தையின் பள்ளிப் பையின் எடை 1.5 கிலோதான் இருக்க வேண்டும். 5 அல்லது 6ஆம் வகுப்பு வரை பள்ளியிலேயே புத்தகங்களை மாலையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு டெர்முக்கும் தனிப்புத்தகங்கள், நோட்டுகள் வைத்துக் கொள்ளலாம். நோட்டுகளுக்கு பதில் ஃபைல்ஸ்களைப் பயன்படுத்தலாம்!

3. கழிப்பறை வசதிகள்: ஆண், பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறை வசதிகள் தேவை. தண்ணீர் வசதி கட்டாயம்.

4. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர பாதுகாப்பான பஸ்/வேன் வசதி இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமே இதை ஏற்பாடு செய்து தருவது மிகவும் நல்லது! இரண்டு சக்கர/மூன்று சக்கர வாகனங்களில் பள்ளி சென்று வருவதைக் குறைக்க வேண்டும். ஸ்பெஷல் பஸ்/ஆட்டோ/வேனில் குழந்தைகளின் எண்ணிக்கை, அரசு விதிமுறைப்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் பரிந்துரைப்படி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றித் திணித்துக் கொண்டு செல்வது ஆபத்தானது.

5. போதுமான வகுப்பறைகளும்/மைதானமும் பள்ளிக்கூடங்களுக்கு மிக அவசியம்.

ஒரு வகுப்பறையில் 40 குழந்தைகள் மட்டும்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் 10 சதுர அடி அளவு இருக்க வேண்டும். அதாவது 40 குழந்தைகள் உள்ள வகுப்பறையின் அளவு குறைந்தபட்சம் 400 சதுர அடி. டேபிள், பெஞ்ச் நாற்காலி போன்றவை சரியான முதுகு சாய்மானம் கொண்டதாக, வைத்து எழுதுவதற்கு சிரமம் இல்லாதவாறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை மாடிக் கட்டடம் கூடாது.
பள்ளியில் விசாலமான வராண்டாக்கள் இருக்க வேண்டும்.
உயர்நிலைப் பள்ளிக்கு 10 ஏக்கரிலும் ஆரம்பப் பள்ளிக்கு 5 ஏக்கரிலும் விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். வாரத்தில் 4 மணி நேரம் விளையாட்டு அல்லது பாட்டு, நடனம், யோகா போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபட ஏற்பாடு செய்து தர வேண்டும்.

பெற்றோர்களே! உங்கள் மழலையை, அன்பான வாரிசை பள்ளியில் சேர்க்கும்போது ஏ.ஸி. வகுப்பறை, ஹெவி ஃபீஸ், ஓவர் பாடத்திட்டம், பந்தாவான கட்டடம் போன்றவற்றைத் தவிர்த்து

குழந்தை நேயமான பள்ளியை மட்டும் தேர்ந்தெடுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது!…

No comments:

Post a comment